தாழ்த்தப்பட்ட சாதி எது? பெரியார் பல்கலை. தேர்வில் வினா! தலைவர்கள் கடும் கண்டனம்!

0
283

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வில், சாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளில் வரலாற்றுத்துறை இளங்கலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் இரண்டாம் தேர்வு நேற்று நடைப்பெற்றது.

இத்தேர்வுக்கான வினாத்தாளில் 11-வது கேள்வியாக, `தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்று மாணவர்கள் மத்தியில் சாதிய உணர்வை ஏற்படுத்தும் விதமாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதனை மாணவர் ஒருவர் சமூக வலைத்தலங்களில் கடுமையாக விமர்சித்து பதிவு செய்துள்ளார். இச்செய்தி சமூக வலைத்தலங்களில் வைரலாக பரவ தொடங்கியுள்ளது.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பெரியாரின் கொள்கைகளை கொச்சைப்படுத்தியும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்தும் செமஸ்டர்தேர்வு வினாத்தாளில் கேள்விகள் கேட்டிருப்பதுதான் விடியா அரசின் திராவிட மாடலா? இதுதான் திமுகவின் சமூகநீதியா? என்று கேட்டுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு இரண்டாம் பருவத் தேர்வில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா எழுப்பப்பட்டு, அதற்கு மகர்கள், நாடார்கள், ஈழவர்கள், ஹரிஜன்கள் ஆகியவற்றிலிருந்து ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

தேர்வுகளில் மாணவர்களின் கற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன்களை அறிய பல வழிமுறைகள் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வினா எழுப்பப்பட்டது தவறு. இது வினாத்தாள் தயாரித்தவர்கள் மற்றும் தேர்வு நடத்தியவர்களின் சாதிய வன்மத்தையே காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது.

வினாத்தாள் வெளியிலிருந்து பெறப்பட்டது தான் இந்த தவறுக்கு காரணம் என துணைவேந்தர் கூறுவது இந்த குற்றத்தை மூடி மறைக்கும் செயல். வினாத்தாளை பல்கலைக்கழக நிர்வாகம் சரிபார்த்திருக்க வேண்டும். அத்தகைய நடைமுறை பெரியார் பல்கலைக்கழகத்தில் இருக்கும் போது இந்த குற்றம் எப்படி நடந்தது?

சாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இக்கொடுமை நடந்திருப்பதை மன்னிக்க முடியாது. வினாத்தாள் தயாரித்தவர்கள், அதை சரிபார்க்கத் தவறியவர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும். இவ்வாறு டிவிட்டர் பதிவில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry