கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி! கொரோனாவை சிவப்புக் கம்பளம் விரித்து அழைக்கும் முதல்வர்!

0
33

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையும் வழக்கம் போல எவ்வித தடையும் இன்றி கொண்டாடலாம் என்று அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரியில், மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, “கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கம் போல எவ்வித தடையும் இன்றி நடைபெறும். புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை இல்லை. இதற்கு யாரும் தடை விதிக்க முடியாது. பொதுமக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் புத்தாண்டு கொண்டாடலாம்என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஆளுநரின் அறிவுறுத்தலின்படியும், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், புதுச்சேரி ஆட்சியர் பூர்வா கர்க் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், கொரோனா பரவல் காரணமாக, பண்டிகைக் கால கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டும். புதுச்சேரி கடற்கரைச் சாலையில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்பார்கள்.  ஹோட்டல்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட சிறப்பு இடங்களில் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காகவே வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருவார்கள்.

கொரோனா பேரிடர் சூழலில், பல ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடுவது, தொற்று பரவலை தாறுமாறாக அதிகரித்துவிடும் ஆபத்து உள்ளது. கொண்டாட்டத்தில் ஈடுபடும் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பார்கள் என்பதை எப்படி உறுதி செய்ய முடியும்? விதி மீறும் எத்தனை பேரை போலீஸார் அடையாளம் காண முடியும்? கொண்டாட்டத்துக்கு கூடுவோரில் பாதிபேர் மதுபோதையில் இருப்பார்கள். போலீஸார், அவர்களை கட்டுப்படுத்துவார்களா? விதிமீறல்களை கண்காணிப்பாளர்களா?

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசியபோது, “மக்கள் அதிகளவில் ஒரே இடத்தில் கூடுவது தொற்று பரவலை அதிகரிக்கும் என்பதால்தான் தமிழக அரசு, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. மற்ற விஷயங்களுக்கு எல்லாம் தமிழக அரசை பின்பற்றும் முதலமைச்சர் நாராயணசாமி, இந்த விஷயத்தில் ஏன் வேறுபட்டு முடிவெடுத்திருக்கிறார் என்றால், அதற்கு ஈகோவே காரணம். துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பொது இடங்களில் கொண்டாட்டங்கள் கூடாது என்கிறார். அதைத்தான் மாவட்ட ஆட்சியரும் அறிவித்தார்.

ஆனால், ஈகோ காரணமாக, கொண்டாட்டங்களுக்கு தடை இல்லை  என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இவர்களது ஈகோவால் பாதிக்கப்படப்போவது மக்கள்தான். கொண்டாட்ட மனநிலையில் அவர்களுக்கு எதுவுமே தெரியாது. கூட்டத்தில் ஒருவருக்கு அறிகுறியே தெரியாமல் தொற்று இருந்தாலும் (Aysmptomatic), எவ்வளவு பேர் பாதிக்கப்படுவார்களோ என்பதை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது” என்று வேதனை தெரிவித்தனர்.

பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரோனா, உலக நாடுகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறையும் ஆய்வு செய்து வருகிறது. இங்கிலாந்துக்கான போக்குவரத்தையும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் துண்டித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry