புதுச்சேரியில் ஆட்சி அமைக்க தயராகும் திமுக! ஒற்றை தலைமைக்கு வலியுறுத்தும் நிர்வாகிகள், தொண்டர்கள்!

0
19

புதுச்சேரி பிராந்திய திமுகவை ஒரே தலைமையின் கீழ் ஒப்படைக்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைய வேண்டுமென்றால் இந்த மாற்றம் அவசியம் என அவர்கள் கூறுகின்றனர்.

புதுச்சேரியின் முந்தைய திமுக வரலாற்றைப் பார்க்கும்போது, 1969 முதல் 1973 வரையிலான காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவுடன் திமுக ஆட்சியில் இருந்தது. 1980 முதல் 1983 வரையிலான கால கட்டத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் திமுக ஆட்சியில் இருந்தது. 1990-ல் ஓராண்டு மட்டும் ஜனதா தளம் ஆதரவுடன் திமுக ஆட்சி நடந்தது. 1996-ல் திமுக, தமாகா, கம்யூனிஸ்ட் கூட்டணியில் திமுகவின் ஜானகிராமன் முதல்வராக இருந்தார்.

முழு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் கூட்டணி அமைத்து, புதுச்சேரியில் நான்கு முறை திமுக முதல்வர்கள் ஆட்சி செய்துள்ளனர். கூட்டணிக் கட்சிகள் ஆதரவை விலக்கிக் கொண்டதாலேயே திமுக ஒவ்வொரு முறையும் ஆட்சியை இழந்தது. கடந்த 2016-ல் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சிக்காலத்தில் திமுகவுக்கு மூன்று எம்.எல்..க்களே இருந்தனர். நாராயணசாமி அரசு மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவிய நிலையில், தற்போதைய புதுச்சேரி திமுக நிர்வாகிகள், ஆட்சிக்கு எதிராக வெளிப்படையாக கருத்துகளை பதிவு செய்தனர்.

இதனை மக்கள் வரவேற்றனர். 2021 தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே புதுச்சேரி திமுகவின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் கட்சித் தலைமை அறிவுறுத்தியதற்கு இணங்க காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி அமைந்தது. ஆனால், தொகுதிப்பங்கீடு விவகாரத்தில் மாநில திமுக அமைப்பாளர்கள் பிடிவாதமாக இருந்தார். இதன்காரணமாக, காங்கிரஸ் ஒதுக்கும் எண்ணிக்கையை இதுநாள் வரையில் பெற்று வந்த திமுக, இந்தத் தேர்தலில் 13 இடங்களில்(மொத்தம் 30 தொகுதிகள்) போட்டியிட்டு, 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எதிர்க்கட்சி பொறுப்பை ஏற்றுள்ளார்.

இதுபற்றி திமுக மூத்த உறுப்பினர் ஒருவரிடம் பேசியபோது, “எங்களுடன் காங்கிரஸ் இல்லாமல் இருந்தாலோ அல்லது காங்கிரஸ் நிர்வாகிகள் முழுமனதுடன் தேர்தல் பணி செய்திருந்தாலோ நாங்கள் இன்னமும் கூடுதல் தொகுதிகளில் வென்றிருப்போம். உதாரணமாக, முதலியார்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகள் களப்பணி செய்யாமல், ஸ்வீட்பாக்ஸ் பெறுவதில் மட்டுமே குறியாக இருந்தனர். அவர்களை பிரச்சாரத்திற்கு வரவழைக்க எங்கள் தொகுதி செயலாளர் திராவிட மணி பெரும் சிரமப்பட்டார். இதுபோன்ற ஒத்துழைப்பின்மையை எல்லாம் தாண்டி சட்டப்பேரவையில் எங்களின் பலம் 100% அதிகரித்துள்ளது. கட்சியே மேலும் வளர்க்க, புதுச்சேரி பிராந்தியத்துக்கு ஒற்றைத் தலைமையை நியமிப்பதே சரியானதாக இருக்கும். அதையும் உடனடியாகச் செய்வதே சரியாக இருக்கும்.

ஏனென்றால், காங்கிரஸ் கூடாரம் ஏறக்குறைய காலியாகிவிட்டது. வைத்திலிங்கத்தைத் தவிர்த்து சொல்லிக்கொள்ளும்படியான தலைவர்கள் அங்கு இல்லை. அதேபோல், என். ஆர். காங்கிரஸ்பாஜக கூட்டணி ஆட்சி முழுமையாக அமையாத நிலையிலேயே மக்கள் வெறுத்துப்போய் உள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளும் இவர்களுக்கு இடையிலான பிரச்சனை ஓயாது, அரசு எந்திரம் ஒழுங்காக செயல்படாது. எனவே 2026 தேர்தலில் இந்தக் கட்சிகள் மீண்டும் வெற்றிபெறுவது சாத்தியமில்லாத ஒன்று.

இவர்களது பலவீனத்தை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக, புதுச்சேரி பிராந்திய திமுகவை ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டுவந்தால், இப்போதிருந்தே 23 தொகுதிகளிலும் கிளைகளை ஏற்படுத்தி, அடிமட்ட அளவில் கட்சியைப் பலப்படுத்த முடியும். ஏனென்றால், தமிழ்நாட்டில் வலுவாக உள்ள திமுக, தேர்தலுக்கு 2-3 ஆண்டுகளுக்கு முன்பாகவே களப்பணியை தொடங்கியது. எனவே புதுச்சேரியில் இப்போதிருந்தே களப்பணியை தொடங்கினால், 6 எம்.எல்..க்களை, 16 எம்.எல்..க்களாக அதிகரிப்பது பெரும் சிரமமாக இருக்காது. அதேபோல், தேர்தல் கூட்டணி அமைத்தாலும், நாங்கள் வலுவாக இருக்கும்போது, கூட்டணிக் கட்சியை சார்ந்து இருக்க வேண்டிய நிலையும் ஏற்படாது.   

ஒற்றை தலைமை, சரியான திட்டமிடல், அதற்கேற்ற களப்பணி இருந்தால், அடுத்த தேர்தலில் திமுக ஆட்சி அமைவது உறுதி. புதுச்சேரியைப் பொறுத்தவரை தனிநபர் செல்வாக்குதான் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் என்பார்கள். அப்படியானாலும், தொகுதிக்கு 2-3 பேரை அடையாளம் கண்டு, அவர்களை தலைமையின் வழிகாட்டுதலில் செயல்பட வைத்தால், முழு அறுவடை நிச்சயம். இதை தலைவர் மு.. ஸ்டாலின் கவனத்தில் கொள்வார் என நம்புகிறோம்என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.    

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry