புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்கு உட்பட கரிக்கலாம்பாக்கம் பகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் உடல் நலன் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏம்பலம் தொகுதியைச் சேர்ந்த கரிக்கலாம்பாக்கத்தில் சுமார் 450 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இந்த ஊரின் குடிநீர் வசதிக்காக மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டன. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சிதலமடைந்து, சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, துருப்பிடித்த கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளது. அத்துடன் ஆங்காங்கே விரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அசம்பாவிதம் நேரிட்டுவிடுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.
இந்தத் தொட்டியில் சேமிக்கப்படும் நீரைத்தான், குடி நீராக கரிக்கலாம்பாக்கம் பகுதிக்கு விநியோகிக்கப்படுகிறது. புழுவுடன், பழுப்பு நிறத்தில் உள்ள தண்ணீரை குடிக்க முடியாமல் சிரமப்படுவதாக பகுதி மக்கள் வேதனைப்படுகின்றனர். இதனால் உடல்நலக்குறைபாடு ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக, தொகுதி எம்எல்ஏ–வும், அமைச்சருமான கந்தசாமியிடம் ஊர் மக்கள் மனு கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறதாம். இதுமட்டுமின்றி, பலமுறை அவரது கவனத்துக்கு கொண்டு சென்றும், அவர் பாராமுகமாகவே இருப்பதற்கான காரணம் புரியவில்லை என ஊர்மக்கள் கூறுகின்றனர்.
கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி எதற்காக கட்டினார்கள் என்றே தெரியவில்லை, அதுவும் செயல்படவில்லை. சம்பந்தப்பட்ட துறை அல்லது கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருக்கலாமே என, வேல்ஸ் மீடியாவை அணுகிய ஊர் மக்களிடம் கேட்டோம். கந்தசாமி தான் ஆளும் கட்சியின் பவர்ஃபுல் அமைச்சர், அவர்தான் எங்கள் தொகுதி எம்எல்ஏ, அவரே பாராமுகமாக இருக்கும் போது, அரசு அதிகாரிகள் என்ன செய்வார்கள் என பதில் கேள்வி எழுப்பினர்.
கரிக்கலாம்பாக்கத்தில் ஆயிரத்து 200 வாக்குகள் உள்ளன, விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், கந்தசாமி வாக்கு கேட்டு எங்கள் ஊருக்கு வந்துதானே ஆக வேண்டும் என்று இளைஞர்கள் கூறுகின்றனர். குடிநீர் பிரச்னையை அவர் உடனடியாகத் தீர்த்துவைக்கவில்லை என்றால், அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது என ஊர்க்கூட்டத்தில் முடிவுசெய்வோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry