பாலனுக்கு மட்டும் ரங்கசாமி முக்கியத்துவம் கொடுத்தது ஏன்? வெளி உலகுக்கு தெரியாத பரபரப்பு தகவல்கள்!

0
27

மறைந்தாலும், மறக்க முடியா மாமனிதனர் என்றுதான் பாலனை ரங்கசாமி போற்றிவந்தார். ரங்கசாமி, அவருக்கு அளித்த முக்கியத்துவம், சொந்த கட்சியினரைத் தாண்டி, புதுச்சேரியில் அனைவரும் அறிந்ததுதான். ஆனால், மறைந்த பாலனுக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது?

கோவிட்-19 தொற்றால் உயிரிழந்த என்.ஆர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் உயிரோடிருந்தவரை, சொந்தக் கட்யினருக்கே அவர் மீதான கருத்து வேறுபாடுகள் இருந்தது. அதாவது, ரங்கசாமியிடம் யாரையும் நெருங்கவிடுவதில்லை, கூட்டணி நிர்ணயம், வேட்பாளர் தேர்வு போன்றவற்றில் தனது முடிவையே ரங்கசாமி மீது திணித்தார் என பல விமர்சனங்கள் பாலன் மீது உண்டு.

இதையெல்லாம் தாண்டி, ரங்கசாமிக்கு, பாலன் அதீத முக்கியத்துவம் கொடுத்தார் என்றால், அதற்கு பின்னணி இல்லால் இருக்காது. இதுகுறித்த கள ஆய்வு செய்யும்போது வேல்ஸ் மீடியாவுக்கு கிடைத்த தகவல்களில் சிலவற்றை வாசகர்களுடன் பகிர்கிறோம்

புதுச்சேரியில் 2006-ம் ஆண்டு ரங்கசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கட்சியினர் மற்றும் அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பின் காரணமாக, 2008-ல், ரங்கசாமியை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, வைத்திலிங்கத்தை முதலமைச்சராக்கியது காங்கிரஸ் தலைமை.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த ரங்கசாமி, கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார். அப்போதே தனிக்கட்சி தொடங்கலாம் என்ற எண்ண ஓட்டமும் அவரிடம் இருந்துள்ளது. இதையறிந்த டெல்லி காங்கிரஸ் தலைமை, அப்போதைய புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிபிரசாத் மூலம் பாலனை தொடர்புகொண்டு, ரங்கசாமிக்கு எந்தவிதத்திலும் உதவக்கூடாது என்று கூறியுள்ளது.

அதற்கு பிரதிபலனாக, தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் தலைவர் பதவியை தருவதாகவும் கட்சித் தலைமை ஆசைகாட்டியுள்ளது. ஆனால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பதவியை துச்சமென மதித்து, ரங்கசாமி மீதான பாசத்தால், மரியாதையால், அவருக்கு தோள்கொடுத்து, தனது அரசியல் பாதையை அமைத்துக்கொண்டார்.

இதையறிந்து பெருமகிழ்ச்சி அடைந்த ரங்கசாமி, பாலனை, தனது நண்பராக, அரசியல் ஆலோசகராக, நலம் விரும்பியாக வாரி அணைத்துக்கொண்டார். அதனால்தான், ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும், பாலன் மறையும்வரை, ரங்கசாமி அவரை விட்டுக்கொடுத்ததில்லை. பாலனுடன் மதிய உணவு சாப்பிட்டால்தால்தான் அவருக்கு முழு திருப்தி.

கோவிட்-19 தொற்றால் பாலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே, ரங்கசாமி கலங்கிய மனநிலையிலேயே இருந்துள்ளார். சிகிச்சை பலனின்றி பாலன் இறந்ததும், கண்களில் நீர் பெருக, நிலைகுலைந்த ரங்கசாமி, நண்பனை இழந்துவிட்டேன், இனி யாரை நம்புவது என கதறினாராம்.

அரசியல், கட்சி நிர்வாகி என்பதைத் தாண்டி ரங்கசாமிக்கும், பாலனுக்கு இருந்த பிணைப்பேயே அப்போதைய சூழல் காட்டியது என என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் கூறினர். என்.ஆர். காங்கிரஸ் துவங்கியது முதல், கட்சி ஆட்சி அமைத்தது வரை, ஒவ்வொரு அசைவிலும் பாலனின் பங்கு இருந்ததை யாரும் மறுக்க மாட்டார்கள். ரங்கசாமியின் மனதிலும், கட்சியிலும், பாலனின் இடத்தை இதுவரைய யாராலும் நிரப்ப முடியவில்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry