ஆசை காட்டி மோசம் செய்வதுதான் அரசுக்கு அழகா? நாராயணசாமிக்கு எதிராக கொந்தளிக்கும் புதுச்சேரி போலீஸ்!

0
15

பதவி உயர்வு என காகிதத்தில் கொடுத்துவிட்டு, புதுச்சேரி அரசு அதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதாக, போலீஸார் குமுறுகின்றனர். இந்த விவகாரத்தில், முதலமைச்சரின் கணத்த மவுனத்துக்கு பின்னணி என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை, பொருளாதாரமும், நிர்வாகமும் பல் இளிக்கும் நிலையில்தான் உள்ளது. அதேபோல், விசித்திரங்களுக்கும், விநோதங்களுக்கும் பஞ்சமில்லாததுதான் புதுச்சேரி காவல்துறை. ஏனென்றால், இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுப் பட்டியலை வெளியிட்ட அரசு, அதை நடைமுறைப்படுத்த இஷ்டமில்லாமல் இருக்கிறது.

புதுச்சேரி காவல் துறையில் சமீபத்தில் இரண்டு பகுதிகளாக இன்ஸ்பெக்டர் புரமோஷன் லிஸ்ட் வெளியிடப்பட்டது. அதில் முதல் லிஸ்டில் இடம்பெற்றவர்கள் ஆய்வாளர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இரண்டாவதாக வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ளவர்களுக்குத்தான் பிரச்னை.

இதுபற்றி வேல்ஸ் மீடியா தரப்பில் ஆராய்ந்தபோது, ரேங்க் அடிப்படையில், 7 எஸ்..கள் பதவி உயர்வுபெற்று,  இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து 1:1 என்ற அடிப்படையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி இறுதி சீனியாரிட்டி பட்டியலானது 13.06.2020 அன்று வெளியிடப்பட்டது.

இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தற்காலிக ஏற்பாடகத்தான் இது செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, இந்த 14 பேரை தேர்வு செய்துள்ள புரமோஷன் கமிட்டி, அவர்களுக்கு, இன்ஸ்பெக்டருக்கான ஊதியமோ, சலுகைகளோ இல்லை என தெரிவித்துள்ளது

ஆனால், விரைவில், அவர்கள் நிரந்தர இன்ஸ்பெக்டர்களாக பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்பதுதான் நடைமுறை. இந்த நிலையில், பதவி உயர்வு பெற்ற 14 பேரும் இன்னுமும் எஸ்..களாகவே பணிபுரிகிறார்கள்.  14 பேரின் Out of Seniority பட்டியலை வெளியிட்ட தலைமையிட எஸ்.பி.யே, எஸ்.. ஒருவரிடம், பட்டியலில் ஆட்சேபம் இருப்பதாக கடிதம் எழுதி வாங்கியுள்ளதாக தெரிகிறது.

அதேநேரம், முதல்பட்டியலில் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற்ற, ஒருவர், இது தவறான பட்டியல் எனவும், இதை நடைமுறைப்படுத்தினால், நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும் எனவும் முதலமைச்சரை மிரட்டியதாக தெரிகிறது. பசையான இலாகா தங்களை விட்டுப்போய்விடுமோ என்ற எண்ணத்தில் அவர் இவ்வாறு செயல்படுவதாக புகார் கூறப்படுகிறது.

தலைமையிட எஸ்.பி.யின் மறைமுக அழுத்தம் மற்றும் எஸ்.. ஒருவரின் ஆட்சேபத்தை அடுத்து, பதவி உயர்வு பெற்ற 14 பேரையும், சம்பந்தப்பட்ட பணியிடங்களில், இன்ஸ்பெக்டர்களாக பணியாற்ற முதலமைச்சர் நாராயணசாமி அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, இவர்கள் இருவரையும் திருப்திப்படுத்த, பதவி உயர்வுப் பட்டியலை நடைமுறைப்படுத்தாமல், துறை அமைச்சரும், முதலமைச்சருமான நாராயணசாமி கிடப்பில் போட்டுள்ளார் என்பதே பரவலான குற்றச்சாட்டாக உள்ளது. பதவி உயர்வுப் பட்டியலுக்கு தலைமைச் செயலாளரும் ஒப்புதல் தந்துவிட்ட நிலையில், எதைக்காரணம் காட்டி முதலமைச்சர் இனியும் தாமதிக்கப்போகிறார் என்பதே கேள்வியாக இருக்கிறது.   

14 பேரும், மூன்று ஸ்டார்களை தோளில் ஏந்தி இன்ஸ்பெக்டராக பணிபுரிய காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களது எதிர்பார்ப்போ, வரும், ஆனா வராது, கதையாக உள்ளது. நேர்மை, நியாயம் பேசும் உயர் அதிகாரிகள், காவலர்கள் சிறு தவறு செய்தாலே தண்டிக்கிறார்கள். ஆனால், இந்தப் பதவி உயர்வு விவகாரத்தில் அவர்களும் மவுனமாகவே இருக்கிறார்கள். 14 பேரின் மன உளைச்சலை புரிந்துகொண்டு, முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுவான வேண்டுகோளாக இருக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry