மக்கள் சேவை கட்சி, ஆட்டோ சின்னம் | விறுவிறுப்படையும் ரஜினியின் தேர்தல் பணிகள்!

0
63

மக்கள் சேவை கட்சிஎன்ற பெயரில், தேர்தல் ஆணையத்தில் ரஜினி கட்சியை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாபா முத்திரை சின்னமாக கேட்கப்பட்ட நிலையில் அது கிடைக்கவில்லை.

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவித்தார். புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமனம் செய்திருந்தார். தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த், இம்மாத இறுதியில் தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், மக்கள் சேவைக் கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 234 தொகுதிகளுக்கும் பொதுசின்னம் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாபா படத்தில் இடம் பெற்ற ஹஸ்தா முத்திரை சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் ரஜினி தரப்பு கேட்டதாகவும், தேர்தல் ஆணையம் அந்தச் சின்னத்தை ஒதுக்காததால், ஆட்டோ சின்னத்தை கேட்டுப் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தவர் குறித்த விபரம் வெளியாகவில்லை.

எர்ணாவூர் விலாசத்தைக் கொடுத்து கடந்த ஆண்டு மார்ச் 15-ந் தேதிஅனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்என்ற பெயரில் கட்சி ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இரண்டரை மாதத்துக்கு முன்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிக்கையிலும் அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம் என்ற பெயரே இடம்பெற்றது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதிதான், ரஜினிகாந்த் என்ற பெயரில், மக்கள் சேவை கட்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்சி பதிவு செய்து களமாடுவது இயலாது என்பதால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கட்சியை வாங்கி ரஜினி பெயர் மாற்றம் செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால், ரஜினி இந்த தகவலை வெளிப்படையாக அறிவித்தால்தான் அது உறுதியாகும்.

ரஜினி படப்பிடிப்பில் இருந்தாலும், கட்சிக்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஆட்டோ சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிக எளிது என்று கூறும் ரஜினி மக்கள் மன்றத்தினர், பாட்ஷா படத்தில் ரஜினி ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தில் நடத்திருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.  நான் ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன் பாடல் ஒன்றே எங்களுக்கு போதும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி அதில் இடம் பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் வரை ரஜினி மக்கள் மன்றத்தினர் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்என அதில் கூறப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry