முதலமைச்சர் வேட்பாளர் ஆகிறார் நமசிவாயம்! திரைமறைவு பேச்சுவார்த்தைகள் மும்முரம்! எந்தக் கட்சி என்பதை ஜனவரியில் அறிவிக்க முடிவு!

0
112

நமசிவாயத்தை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க ஒரு கட்சி ஆயத்தமாகி வருகிறது. திரைமறைவு பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்ட நிலையில், முறையான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஏமாற்றப்பட்ட நமசிவாயம்!

2016 சட்டமன்ற தேர்தலில், அறிவிக்கப்படாத முதலமைச்சர் வேட்பாளராக நமசிவாயத்தை முன்னிறுத்திதான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி, டெல்லி தலைமையின் தயவில், முதலமைச்சர் பொறுப்பை நமசிவாயத்திடம் இருந்து தட்டிப் பறித்தார். இதை சற்றும் எதிர்பாராத நமச்சிவாயத்துக்கு, காங்கிரஸ் கட்சி தனக்கு இழைத்த துரோகத்தை ஜீரணிக்க பல நாட்கள் தேவைப்பட்டது. இருப்பினும் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி அவருக்கு சற்று ஆறுதலை கொடுத்தது.

நமசிவாயத்தின் கட்சி விசுவாசம்

நாராயணசாமி போட்டியிட ஏதுவாக நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.. ஜான்குமார் ராஜினாமா செய்தார். அங்கு நடந்த இடைத்தேர்தலில், ஜான் குமாருடன் இணைந்து செயல்பட்டு நாராயணசாமியை அமோகமாக வெற்றி பெறச் செய்தார். இதையடுத்து கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலின்போதும், தனது உடல் நலனை பொருட்படுத்தாமல், வைத்திலிங்கத்தை வெற்றி பெற வைக்க இரவு பகல் பாராமல் உழைத்தார்.   

இதன் பலனாக, மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதியில், 29 தொகுதிகளில், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரைவிட அதிக வாக்குகள் பெற்று வைத்திலிங்கம் அமோக வெற்றி பெற்றார். வைத்திலிங்கம் ராஜினாமா செய்த காமராஜர் நகர் தொகுதியில் தனது ஆதரவாளருக்கு சீட் வாங்க நமசிவாயம் கடுமையாக முயற்சி செய்தார். ஆனால் தனது அதிகாரத்தின் மூலம் அதைத் தடுத்த நாராயணசாமி, ஒருவருக்கு ஒரு பதவி என்ற உப்பு சப்பில்லாத காரணத்தைக் காட்டி, புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை நமசிவாயத்திடம் இருந்து பறித்து ஏ.வி.சுப்பிரமணியத்திடம் கொடுத்தார் நாராயணசாமி.

அவமதிக்கப்பட்டதால் மனவேதனை

தனது உழைப்பின் பலனை அறுவடை செய்து முதலமைச்சரான நாராயணசாமி, புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை பறித்ததால், மன உளைச்சலுக்கு ஆளான நமசிவாயம், தன்னை இதைவிட அவமானப்படுத்த முடியாது என ஆதரவாளர்களிடம் வேதனைப்பட்டுள்ளார்.

அடுத்தடுத்து தன்னை அவமதிக்கும் காங்கிரஸில் நீடிக்க விரும்பாமல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த அவர், ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை புதுச்சேரியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானதுஆனால் அதை திட்டவட்டமாக மறுத்து நமசிவாயம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

நமசிவாயத்தின் அடுத்த திட்டம்

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கிறது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்அதிமுக கூட்டணி நெருங்கி வருகிறது. தமிழ்நாட்டின் கூட்டணிதான் புதுச்சேரிக்கும் பொருந்தும் என்பதால், நமசிவாயம் தமிழ் மாநில காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொள்ள வாய்ப்பில்லை.

எனவே, மாற்று ஏற்பாட்டுக்கான திட்டத்தை தொடங்கிய நமசிவாயம், திரைமறைவு பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாகவே முடித்துள்ளார். குறிப்பிட்ட அந்தக் கட்சி,   நமசிவாயத்தை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது. அண்மையில் ரகசியமாக டெல்லி சென்று இதற்கான வேலைகளை கச்சிதமாக முடித்துள்ள நமசிவாயம், அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் வெளியிடுவார் என்று நம்பப்படுகிறது. முதலமைச்சர் வேட்பாளராக நமசிவாயத்தை அறிவிக்க இருப்பது காங்கிரஸ் கட்சி அல்ல என்பதை மட்டுமே இப்போது உறுதியாகக் கூற முடியும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry