ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ்! நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
281

‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’வுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினியுடன் இணைகிறது. ’ரஜினி 169’ படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் அறிவிப்பை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஒரு வீடியோவின் மூலம் இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியிட்டுள்ள புரோமோ டீசரில் நெல்சன், அனிருத் நின்றிருக்க ‘பிளாக்கில் பியூட்டியாக’ செம்ம ஸ்டைலாக ரஜினி அமர்ந்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

ஏப்ரல் 14, சித்திரையில் படப்பூஜை என்றும், மே மாதம் படப்பிடிப்பு அமர்க்களமாக ஆரம்பமாகவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இவர் அடுத்ததாக ரஜினியுடன் இணைந்திருப்பது பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

விஜய்யின் ‘பீஸ்ட்’ நூறாவது நாள் படப்பிடிப்பு நிறைவடைந்த போது, அந்த இடைவெளியில் நெல்சனைக் கூப்பிட்டு ‘கதை இருக்கிறதா?’ என ரஜினி கேட்டிருக்கிறார். நெல்சனோ உடனடியாக ஒரு காமெடி லைனை சொல்ல, அது ரஜினிக்கும் பிடித்து விட்டதாக சொல்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது விஜய் சேதுபதியின் விஜேஎஸ்46, விஜய்யின் ‘பீஸ்ட்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ உள்பட பல படங்களைத் தயாரித்து வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘அண்ணாத்த’ படம் குறித்து விமர்சன ரீதியாக இருவேறு கருத்துக்கள் இருந்தாலும், படம் வசூலை குவித்தது என்றும், அது வெற்றிப்படம் என்றும் ரஜினியே மனம் திறந்து பேசினார். அப்படிச் சொன்னதோடு மட்டுமில்லாமல் அதில் பணிபுரிந்த இயக்குநர் சிவாவிலிருந்து டெக்னீஷியன்கள் வரை அனைவருக்கும் தங்கச்சங்கிலி பரிசளித்து மகிழ்ந்தார். ‘கலாநிதி மாறன் சாரும் ஹேப்பி’ என ஒரு ஹின்ட்டும் அப்போதே ரஜினி கொடுத்தார். அந்த ஹேப்பிதான் இப்போது மீண்டும் கைகோக்கக் காரணம் என்று திரைவட்டாரங்கள் கூறுகின்றன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry