சாதிவாரி கணக்கெடுப்பு! அதிகாரம் இருந்தும் மத்திய அரசின் பக்கம் மடைமாற்றுகிறார் முதல்வர்! மாநில உரிமைகளை விட்டுக்கொடுப்பதாகவும் பாமக விமர்சனம்!

0
25
PMK founder Ramadoss has urged the Tamil Nadu government to conduct a caste census without expecting the Centre.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய அளவில் 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். சமூகநீதியை நிலை நிறுத்தவும், வளர்ச்சியின் பயன்களை அடித்தட்டு மக்கள்வரை கொண்டு செல்லவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று ஒப்புக்கொண்டதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்.

அதேநேரத்தில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும், கட்டமைப்பும் தமிழக அரசுக்கே இருக்கும் நிலையில், தமிழக அரசே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் என்று அறிவிக்காமல், மத்திய அரசு இந்தக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதுவது, தாம் விளையாட வேண்டிய பந்தை, பிரதமர் பக்கம் திருப்பி விடும் செயல் என்பதைத் தவிர வேறு எதுவும் அல்ல.

Also Read : காவல்துறையினருக்கு தமிழக அரசு துரோகம் செய்கிறது! போதிய ஊதியம், பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என பாமக கண்டனம்!

இது கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதற்கு ஒப்பானது. சமூகநீதியில் அக்கறை கொண்ட எந்த முதலமைச்சரும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசே நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதன் மூலம், இந்தச் சிக்கலை முதல்வர் மு.க.ஸ்டாலின், 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றிருக்கிறார்.

2004-ம் ஆண்டில் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்த பாமக, இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு முன்பே 2008ல் அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி இராமதாஸ், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை சந்தித்து மனுவாக கொடுத்தார்.

அதன்பின்னர் மக்களவையில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பப்பட்ட போது பாமக-வின் கோரிக்கைக்கு லாலு பிரசாத், சரத்யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவளித்தனர். அதைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த அரசு ஒப்புக்கொண்டது. மக்களவையில் இதுகுறித்த வாக்குறுதியை 2009-10ம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்தார்.

Also Read : ஜாக்டோ ஜியோ நான்கு கட்ட போராட்ட அறிவிப்பு! டிசம்பரில் கோட்டை முற்றுகை! நெருக்கடியில் தமிழக அரசு!

அதைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தனியாகவும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தனியாகவும் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவ்வாறு செய்யாமல் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவரங்களும் கூட இன்று வரை வெளியிடப்படவில்லை.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை எத்தனை முறை வலியுறுத்தினாலும், அதற்கு மத்திய அரசே ஒப்புக்கொண்டாலும், இறுதியில் அந்த முயற்சியை மத்திய அரசே சீர்குலைத்து விடும். கடந்த காலங்களிலும் இது தான் நடந்தது. இனிவரும் காலங்களிலும் அது தான் நடக்கும்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று 2021-ம் ஆண்டில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், அம்மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

ஆனால், அதன் பின் ஓராண்டுக்கு மேலாகியும் எதுவும் நடக்காததால் தான் பிஹார் அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினார். ஆந்திர மாநில அரசும் இதுதொடர்பாக அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானத்திற்கு எந்த பதிலும் மத்திய அரசிடமிருந்து வரவில்லை என்பதைக் காரணம் காட்டித் தான், வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது.

Also Read : சிறை மருத்துவர்கள், அதிகாரிகள் அடாவடி! கைதியை சிகிச்சைக்கு பரிந்துரைக்க லட்சக்கணக்கில் வசூல்!

நேரிலும், சட்டப்பேரவைத் தீர்மானத்தின் மூலமாகவும் வலியுறுத்திய பிறகும் ஏற்கப்படாத சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை, தமது கடிதத்தைக் கண்டவுடன் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று முதல்வர் நம்பிக் கொண்டிருப்பது விந்தை தான். 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்பட்டால், அதை எண்ணி மகிழ்ச்சியடையும் முதல் மனிதன் நானாகத் தான் இருப்பேன்.

ஆனால், அதற்கான வாய்ப்புகள் கண்களுக்கு எட்டியவரை தென்படாத நிலையில், அதை நம்பிக் கொண்டு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவே அமையும். தமிழக அரசு, அதன் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக பிஹார் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அந்தத் தீர்ப்பு மிகவும் விரிவாகவும், விளக்கமாகவும் இருப்பதால், அதனடிப்படையில் நடத்தப்பட்ட பிஹார் சாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிடவோ, அதனடிப்படையில் முடிவுகளை எடுக்கவோ தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது. இவ்வளவுக்குப் பிறகும் மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு தான் சட்டப்பூர்வமானதாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுவது மாநில அரசின் உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கு ஒப்பானதாகும்.

Also Read : நடைப்பயிற்சி மட்டும் சர்க்கரைநோயை கட்டுப்படுத்துமா? இப்படித்தான் நடக்க வேண்டுமா? How Much Walking Is Best for Diabetes Control?

முதல்வர் ஸ்டாலினுக்கு நான் மீண்டும், மீண்டும் கூறிக் கொள்வது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு, அதற்கு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை என்பதைத் தான். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் கர்நாடகம், பிஹார், ஒடிஷா ஆகிய மாநிலங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளன.

ஆந்திரா, இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. எனவே, இனியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதாமல், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தும் என்று அறிவித்து, செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டிட, சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் மூலம் வற்புறுத்திய நிலையில், மத்திய அரசை எதிர்பார்க்காமல் தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry