கொரோனா பாதிப்பு மேலும் புதிய உச்சம்! 2 லட்சத்து 73 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு! பங்குச் சந்தை வீழ்ச்சி!

0
184

கொரோனா இரண்டாம் அலை தொடங்கிய பிறகு, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத புதிய உச்சம் இதுவாகும்.

கொரோனா தொற்று அதிகரித்து வருகிற சூழலில் பரிசோதனைகளும் அதிகளவில் நடத்தப்படுகின்றன. விழிப்புணர்வு பிரசாரம், தடுப்பூசி திட்டம் என பல உத்திகள் வகுத்து தொற்று பரவலை தடுக்க முயற்சித்தபோதும், எதற்கும் கட்டுப்படாமல் பரவல் அதிகரித்துக்கொண்டே போகிறது. கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்படுகிற உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிப்பது கவலைதரக்கூடிய அம்சமாக மாறி வருகிறது.

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் பெருந்தொற்றுக்கு ஆயிரத்து 619 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 178 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 19 லட்சத்து 29 ஆயிரத்து 329 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 30 லட்சத்தை நெருங்குவதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதுவரையிலான மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 78 ஆயிரத்து 769 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் 12 கோடியே 38 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு கடந்த 5ஆம் தேதி ஒரு லட்சத்தையும், கடந்த 15ஆம் தேதி 2 லட்சத்தையும் தாண்டியது. தினசரி பாதிக்கப்படுவோர் விகிதம் 12 நாட்களில் இரட்டிப்பாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பரவலைத் தடுக்கப் பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாகப் பங்குச்சந்தைகளில் இன்றைய வணிகநேரத் தொடக்கம் முதலே வீழ்ச்சி ஏற்பட்டது. 9.40 மணியளவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1409 புள்ளிகள் சரிந்து 47 ஆயிரத்து 423 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 392 புள்ளிகள் சரிந்து 14 ஆயிரத்து 226 ஆக இருந்தது. தனியார் வங்கிகளின் பங்கு விலை 5 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்து உள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry