டெல்லியில் நடந்தது வன்முறையா? கிளர்ச்சியா? | தமிழகத்தில் வன்முறையைத் தூண்ட திருமாவளவன், குணசேகரன் முயற்சியா?

0
33

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள், அதிர வைக்கிறது. மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என்ற பெயரில், நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள தீயசக்திகளுக்கு பலர் வக்காலத்து வாங்குவது பெருங்கொடுமை.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாகவும், டெல்லி காவல்துறை எந்த இடம் வரை அனுமதிக்கிறதோ, அந்த இடத்தில் பேரணியை முடித்துக்கொள்வோம் என்றும் உறுதியளித்திருந்தனர்.

ஆனால், நேற்று டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகளில் ஒரு பகுதியினர், டிராக்டர்களிலும் குதிரைகளிலும் அனுமதி அளிக்கப்பட்ட பகுதியைத் தாண்டி டெல்லி நகருக்குள் நுழைந்தனர். அவர்கள் மிக வேகமாக டிராக்டர்களை இயக்கி போலீஸார் மீது ஏற்ற முற்பட்டனர். நங்கோலி சாலையில் போலீஸாரின் வாகனங்களை சிதைத்தனர். டிராக்டர்களைக் கொண்டு டெல்லி அரசுப் பேருந்தைக் கவிழ்த்ததும், போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு உட்புகுந்தும் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

ஒருகட்டத்தில், தடி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வன்முறையாளர்கள் போலீஸாரை சரமாரியாகத் தாக்கினர். பெண் காவலரைக் கூட ஒரு கும்பல் தடியால் தாக்கியது. வன்முறையாளர்கள் செங்கோட்டையில் உள்ள கம்பம் ஒன்றில் ‘Nishan Saheb’ எனப்படும் சீக்கிய மதத்தின் கொடி ஏற்றினர். போராட்டத்தில் சமூகவிரோதிகள் ஊடுருவியதாகவும், அவர்களால்தான் வன்முறை ஏற்பட்டதாகவும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவில் இயங்கும் ‘Sikhs for Justice’ எனும் அமைப்பு, கடந்த 11-ந் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், டெல்லியில் குடியரசு தின விழாவின்போது காலிஸ்தான் கொடி ஏந்துவோருக்கு பெருந்தொகை பரிசளிக்கப்படும் என்று கூறியிருந்தது.  இதன் மூலம் இந்த வன்முறையில் காலிஸ்தான் தீவிரவாதிகள் பங்களிப்பு இருப்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது.

வன்முறையாளர்கள் தாக்கியதில் சுமார் 300 போலீஸார் படுகாயம் அடைந்ததுடன், ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நிலைமை கைமீறவே காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசினர். படு வேகமாக இயக்கி டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். போலீஸார் துப்பாக்கியால் சுட்டு அவரை கொன்றுவிட்டதாக அரசுக்கெதிரான ஊடகங்கள் பதற்றத்தை ஏற்படுத்தின. இறந்தவர் தியாகி போல, அவரது உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டது.

பாஜகவை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு, பகுத்தறிவு பேசும் பலர், வன்முறையையும், போராட்டத்தையும் பகுத்தறியாமல் கருத்துகளை பதிவிடுகின்றனர். விவசாயிகள் மீது ஒடுக்குமுறையை ஏவியது கண்டிக்கத்தக்கது என்று திருமாவளவன், ஜோதிமணி போன்றோர் கூறுவது, அவர்கள் வன்முறையை ஆதரிப்பதாகவே தோன்றுகிறது.

அதேபோல், பெரியாரிய ஆதரவாளரான மு. குணசேகரன், இந்த வன்முறை வெறியாட்டத்தை, விவசாயிகள் கிளர்ச்சி என்று பதிவிடுகிறார். இதே அர்த்தத்தில்தான் பாகிஸ்தானிலும் கருத்து பதிவிடப்படுகிறது. அப்படியானால் குணசேகரனுக்கும், பாகிஸ்தானுக்குமான வித்தியாசம் என்ன? பத்திரிகையாளர் என்ற போர்வையில் இருக்கும் இதுபோன்ற நபர்கள் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதையும் மீறித்தான் இந்த வன்முறை அரங்கேற்றப்பட்டுள்ளது. டெல்லி எல்லையில் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடுகின்றனர். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் சிலர் போராடுகின்றனர். மற்ற மாநிலங்களில் விவசாயிகள் ஏன் போராட்டம் நடத்தவில்லை? என்ற கேள்வி எழுகிறது.

வேளாண் சட்டத்தில் பாதகமான அம்சங்கள் இருந்தால் அதை எதிர்த்து அமைதி வழியில் போராடுவதில் தவறில்லை. ஆனால், பாஜகவை எதிர்ப்பதாக காட்டிக்கொண்டு, நாட்டுக்கே தலைக்குனிவை ஏற்படுத்தும் விதமாக நடப்பவர்கள், அதை ஆதரிப்பவர்கள் தாய்நாட்டுக்கு எதிரானவர்கள். வன்முறையில் இருந்து பிறப்பதுதான் ஒழுங்கு என்ற திருமாவளவனின் கருத்தை நாம் நினைவில் கொள்ளத் தவறக்கூடாது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry