சிறை மருத்துவர், அதிகாரிகள் அடாவடி! கைதியை சிகிச்சைக்கு பரிந்துரைக்க லட்சக்கணக்கில் வசூல்!

0
56
Whether the health issue is real or cooked up to stay out of jail, those able to pay up are instantly transferred | Adobe Stock

சிகிச்சைக்கு பரிந்துரைக்க 50 ஆயிரம் ரூபாய். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரைக்க ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை. இவ்வாறு தொகையை நிர்ணயித்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி கார்ப்பரேட் மருத்துவமனைகள் வசூலிக்கவில்லை, மாறாக மத்திய சிறை மருத்துவர்கள், அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சிகிச்சை பெறும் கைதிகளிடம் இருந்து வசூலிக்கும் தொகைதான் இது.

இதுபற்றி DT Next வெளியிட்டுள்ள பிரத்யேகச் செய்தியைப் பார்க்கலாம். ‘உடல்நலப் பிரச்சினை உண்மையானதாக இருந்தாலும் சரி, சிறையில் இருந்து வெளியே வருவதற்காக உடல் நலம் குன்றியதாக கட்டமைக்கப்பட்டாலும் சரி, பணம் செலுத்த முடிந்தவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். லஞ்சம் கொடுக்க முடியாதவர்கள், விதியை நொந்துகொண்டு சிறையிலிருக்க வேண்டும் அல்லது மரணிக்க வேண்டும்.

தமிழகச் சிறைகளில் இருந்து கிடைக்கும் செய்திகளை பல ஆதாரங்கள் மூலம் சரிபார்த்தபோது, மாநில சுகாதாரத் துறை மற்றும் சிறை அதிகாரிகளால் நியமிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட மருத்துவர், லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் கேட்டு கைதிகளிடம் பேரம் பேசுவதாகவும், இருதரப்பும் பேசி ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஏற்படும் தாமதம் காரணமாக உடல்நலப் பிரச்சனை அதிகமாகி கைதிகள் சிலர் உயிரிழக்க நேரிடுவதாகவும் தெரியவருகிறது. இறப்பது கைதிகள் என்பதால் இதுகுறித்த தகவல்கள் அரிதாகவே வெளிச்சத்திற்கு வருகின்றன.

Also Read : ஜாக்டோ ஜியோ நான்கு கட்ட போராட்ட அறிவிப்பு! டிசம்பரில் கோட்டை முற்றுகை! நெருக்கடியில் தமிழக அரசு!

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லது ராயப்பேட்டை பொது மருத்துவமனைக்கு வெளிநோயாளியாக ஒரு கைதியை அனுப்புவதற்கான அனுமதியை வழங்க, சிறை அதிகாரிகளுடன் இணைந்து மருத்துவர் ரூ.50,000 லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த மருத்துவமனைகளில் கைதி ஒருவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டும் என்றால், லஞ்சத் தொகை ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கொடுக்க வேண்டும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுப்பதும், பெறுவதும் ஒருபோதும் சிறைக்குள் நடப்பதில்லை. மருத்துவருக்கு நெருக்கமான ஒரு வழக்கறிஞர், கைதிகளின் உறவினர்களிடமிருந்து பணத்தை வசூலிக்கிறார். டிஜிட்டல் பரிவர்த்தனை உதவியுடன், லஞ்சப் பணம் வேகமாக கைமாறுகிறது என்று சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுக்க மறுத்ததால், வெளி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக தான் வழங்கிய விண்ணப்பத்தை சிறை மருத்துவரும், அதிகாரிகளும் நிராகரித்ததாக அவர் கூறியுள்ளார்.

பணக்காரர்களோ, செல்வாக்கோ இல்லாத நோய்வாய்ப்பட்ட கைதிகள், சிறை ஊழியர்கள் மற்றும் சிறை மருத்துவமனை மருத்துவர்களின் தயவை நாடி இருக்கும்போது, தயக்கமின்றி பணம் செலுத்தத் தயாராக இருப்பவர்களுக்கு எந்த நேரமும் வெளி மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி கிடைக்கிறது.

வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட ஒரு வணிக குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு வழங்கப்பட்ட சலுகை இதற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு. நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறிதை அடுத்து, ஸ்டான்லி மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக அவர்கள் ரூ.15 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

Also Read : மருந்துகள், தண்ணீர், உணவுப் பற்றாக்குறையால் தவிக்கும் காசா மக்கள்! கள நிலவரத்தை விளக்கும் விரிவான பதிவு!

இந்த ஆண்டு தொடக்கத்தில், நாள்பட்ட நீரிழிவு நோய் மோசமடைந்த நிலையில், பணம் கொடுக்க முடியாததால், அவசர சிகிச்சையைப் பெற இயலாத ரிமாண்ட் கைதி எஸ்.அருள் என்பவர் உயிரிழந்தார் என்று சிறை வட்டாரங்கள் கூறுகின்றன. அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருந்ததால், லஞ்சத் தொகையை ஏற்பாடு செய்ய முடியாத நிலையில், பலமுறை கோரிக்கை விடுத்தும் அவரை வெளியில் சிகிச்சை பெற அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

‘முதலில் பணம் கொடுத்துவிட்டு, பின்னர் மருத்துவமனைக்குச் செல்லுங்கள்’ என்பதே மருத்துவரின் கொள்கையாகத் தெரிகிறது என்று சிறை ஊழியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த மற்றொரு கைதியின் மரணத்தை விவரித்த அதிகாரி ஒருவர், 2022 ஆம் ஆண்டு தீபாவளி அன்று இரவு, 9.50 மணிக்கு சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் குழுவில் உள்ள பாரா மருத்துவப் பணியாளர்கள் அரசு மருத்துவமனைக்கு உடலைக் கொண்டு செல்ல மறுத்ததால், சிறை வாகனம் மூலம் மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஒரு கைதிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால், மற்ற கைதிகள் உதவிக்காக கூச்சலிடுவார்கள். அவர்கள் தங்கள் பாத்திரங்களால் கம்பிகளை அடித்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க முயன்றாலும், யாராவது ஒரு அதிகாரி வந்து அவர்களை கவனிக்க குறைந்தது 30 நிமிடங்களாவது ஆகும். இருப்பினும், இந்த விவகாரத்தில், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஆனது, அதற்குள் அந்த நபர் இறந்துவிட்டார்” என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன’. இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு மருத்துவ உதவி, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது விதி. குற்றவாளிகள் தங்களது குற்றத்திற்கான தண்டனையாக சமூகத்திலிருந்து பிரித்து வைக்கும் நோக்குடன் சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்படுவார்கள். சிறைச்சாலை என்பது அவர்களை சீர்திருத்தும் இடமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், பணம் கொடுத்தால்தான் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கும், இல்லையென்றால் மரணிக்க வேண்டியதுதான் என்பது பேரவலம்.

Courtesy : DT Next

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry