நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு ஐகோர்ட் அனுமதி! காவல்துறைக்கு கடும் எச்சரிக்கை!

0
140

மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தமிழகத்தில் 50 இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் முடிவு செய்தது. பேரணிக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது. இதை எடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் பேரணி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை நிராகரித்த காவல்துறை கண்காணிப்பாளர், பேரணிக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டார், இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

Also Read: ஹவாலா பணம் ரூ.10 கோடி சிக்கியது! நான்கு பேர் கைது! தடை செய்யப்பட்ட PFI அமைப்புக்கு தொடர்பா என விசாரணை?

அப்போது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி நிபந்தனைகளை வகுத்து நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும், இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் எனவும், நீதித்துறையை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும் வாதிட்டார்.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதால் நடைபெறும் போராட்டங்களை காரணம் காட்டி, நீதிமன்றம் அனுமதி வழங்கிய தங்களது ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கமுடியாது என குற்றம்சாட்டினார்.

கடந்த 2013-ல் அம்பேத்கர் பிறந்த நாளன்று பேரணி நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல்துறையில் மூன்று நாட்களுக்கு முன்னர் மனு கொடுத்துவிட்டு, உடனடியாக நீதிமன்றத்தை நாடியபோது, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் தற்போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஊர்வலத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டும், அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Also Read : இளம் தலைமுறையினரை பிஎப்ஐ தவறாக வழிநடத்தியது! தடையை வரவேற்பதாக முஸ்லீம் லீக் அறிவிப்பு!

யாருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பமாட்டோம் என உத்தரவாதம் அளித்த பிறகும் காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பதன் அர்த்தம் புரியவில்லை என்றும், மனவலியை ஏற்படுத்துவதாகவும் பிரபாகரன் தெரிவித்தார். ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்பதற்காகவே சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என காவல்துறை கூறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டியதுதான் காவல்துறையின் கடமை என்று பலமுறை அறிவுறுத்தி உள்ளதாகவும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடையை எதிர்த்து கடுமையான போராட்டம் நடைபெறும் கேரளாவிலும், புதுச்சேரியிலும் அனுமதி வழங்கபட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்தார். மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலான ஊர்வலத்திற்கு தமிழகத்தில் மட்டும் எவ்வாறு அனுமதி மறுக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

Also Read : வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியது RBI! வீடு,வாகனம், தனிநபர் கடன்களின் வட்டி அதிகமாகும்!

அதன்பின்னர் காவல்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, தேசிய புலனாய்வு முகமையின் சோதனை, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு ஆகியவற்றை கருத்தில் கொண்டு காவல்துறை முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக சமூக விரோதிகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொது சொத்துகளை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளதாக மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அக்டோபர் 2 தேதி  ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு  தடை விதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவு சரியானது. நவம்பர் 6-ம் தேதி பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கப்படுகிறது. காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்தனர். வழக்கு அக்டோபர் 31க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry