உக்ரைன் – ரஷ்யா போரின் தாக்கம்! பெட்ரோல் – டீசல், கோதுமை, சோளம், தங்கம், செல்ஃபோன் விலை உயரும்!

0
76

உக்ரைன் – ரஷ்யா போர் ஏற்படுத்தும் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. ஒட்டுமொத்த உலக நாடுகளுமே பல்வேறு விதத்தில் இந்தப் போரால் பாதிக்கப்படும்.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது போர் தொடுத்திருப்பதால், அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கின்றன. இதனால் ரஷ்யாவின் ஏற்றுமதி, இறக்குமதி மட்டுமின்றி ரஷ்யாவை வர்த்தக ரீதியில் சார்ந்து வாழும் நாடுகளையும் பாதிக்கும்.

Maps Of Russia – World Atlas

உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதும் கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு பேரல் கச்சா எண்ணெய்(Brent Crude) விலை 100 டாலரைத் தாண்டியிருக்கிறது. இது இன்னமும் அதிகரிக்கலாம். கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் அனைத்து நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும். சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கலாம். இதன் தாக்கத்தால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரக்கூடும். ஐரோப்பிய நாடுகளின் 40% பெட்ரோலியத் தேவையை ரஷ்யா பூர்த்தி செய்கிறது. உலக அளவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ரஷ்யாவின் பெட்ரோலியச் சேவை தடைபடுவதால், ஐரோப்பிய நாடுகளில் கடும் பாதிப்பு இருக்கும்.

Crude Oil platform PHOTO AFP via Getty Images

அடுத்ததாக பலேடியம்(Palladium) விலை உயர்வு. பலேடியம்(இதன் வேதியியல் குறியீடு Pd) என்பது ஸ்மார்ட் போன்கள், தொழில்நுட்ப வாகனங்கள் மற்றும் தானியங்கி மென்பொருள் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வகை உலோகம். ரஷ்யாதான் இதனை மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்துவருகிறது. தற்போதைய போரால் பலேடியத்தின் விலை உயர்ந்திருக்கிறது. இதனால் ஸ்மார்ட் போன்கள் விலை உயரக்கூடும்.

உக்ரைன் – ரஷ்யா போரால் இந்தியா மற்றும் சர்வதேச பங்குச்சந்தையில் நிலையற்றத் தன்மை நிலவுவதால் முதலீட்டாளர்களுக்கு பெருமளவில் நட்டம் ஏற்பட்டிருக்கிறது. தங்கத்தின் விலையும் உயர்ந்திருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,949 டாலரைத் தாண்டிவிட்டது. சென்னையில் ஒரு சவரனுக்கு ரூ. 1,240 அளவுக்கு உயர்ந்து 38,992 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது.

Gold Bar /AFP via Getty Images

கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா முதலிடத்திலும், உக்ரைன் நான்காவது இடத்திலும் உள்ளது. உலக நாடுகளின் கோதுமைத் தேவையில் 29 சதவிகிதத்தை இந்த இருநாடுகள்தான் பூர்த்தி செய்கின்றன. போரின் விளைவால், கோதுமை விலை பன்மடங்கு அதிகரிப்பதோடு, கோதுமையை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் இதர உணவுப்பண்டங்களின் விலையும் அதிகரிக்கும். அதேபோல, சோளம் ஏற்றுமதியிலும் இந்த நாடுகள் முதல் ஐந்து இடங்களுக்குள் வருவதால் அதன் விலையும் அதிகரிக்கும்.

இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் உயர் கல்விக்காக உக்ரைனில் தங்கி படிக்கின்றனர். அவர்கள் தூதரகங்கள் மூலம் தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். தாயகம் திரும்பிய மாணவர்கள், உயர்ப் படிப்பை தொடரமுடியுமா?, அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறி வருகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry