
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14-ம் தேதி மாலை நடைதிறக்கப்பட உள்ளது. இதில் ஐயப்பனை கூடுதலாக நேரம் தரிசிக்கும் வகையில், விரைவு பாதை வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர, சித்திரை விஷூ மற்றும் திருவோணம் உள்ளிட்ட பல்வேறு காலங்களில் நடை திறக்கப்படுவது வழக்கம். இது தவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 5 நாட்கள் வழிபாடு நடைபெறும். வரும் 15-ம் தேதி மீன மாதத்துக்காக (பங்குனி) வரும் 14-ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் திருவிழா காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனைக் குறைக்கும் வகையில் தரிசன முறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
Also Read : வீட்டிற்கு தினமும் காகம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..? சாஸ்திரம் சொல்வது என்ன?
இதுவரை 18-ம் படி ஏறும் பக்தர்கள் கோயிலின் இடதுபுறமாக சென்று நடை மேம்பாலத்தில் பல்வேறு வழியாக சுற்றிச் செல்ல வேண்டும். பின்பு மீண்டும் மூலஸ்தானத்துக்கு அருகே இறங்கி தரிசனம் செய்ய வேண்டும். இதனால் நீண்ட வரிசையில் காத்திருப்பதுடன், சில விநாடிகள் மட்டுமே ஐயப்பனை தரிசனம் செய்யும் நிலை இருந்தது.
இதனால் கடும் விரதம் இருந்து, நீண்ட தூரம் கடந்து, மலை ஏறி சிரமப்பட்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களால் ஐயப்பனை மன நிறைவுடன் தரிசிக்க முடியவில்லை. எனவே, ஐயப்பனை சற்று கூடுதல் நேரம் தரிசிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சபரிமலை சந்நிதானத்தில் விரைவு பாதை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
Also Read : ஆஞ்சநேயருக்கு வெண்ணெய், வெற்றிலைமாலை சாற்றி வழிபடுவது ஏன் தெரியுமா?
இதன்படி 18-ம் படியேறியதும் நடை மேம்பாலத்தில் பல சுற்றுக்களாக செல்லாமல் கொடிமரத்தைக் கடந்ததும் நேராக மூலஸ்தானம் அருகே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் குறைந்தது 20 விநாடிகள் தரிசனம் செய்ய முடியும். பக்தர்களை இரண்டு வரிசைகளாக பிரிக்க நடுவில் நீளமாக ஒரு பெரிய உண்டியலும் அமைக்கப்பட்டு வருகிறது. மூலஸ்தானத்துக்கு முன்பாக சாய்வுதளமும் அமைக்கப்பட்டு வருகிறது.
இதனால் வரிசையில்வரும் போதே ஐயப்பனை தரிசனம் செய்து கொண்டே வரலாம். இதற்கான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. இது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில், வரும் 14-ம் தேதிமுதல் சோதனை முயற்சியாக இம்முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது வெற்றியடைந்தால் சித்திரை விஷு முதல் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்றார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry