கள்ளச்சாராய விற்பனை அமோகம்! 2 பாக்கெட் வாங்கினால் முட்டை இலவசம்! தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதா? என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி!

0
62

தமிழகத்தில் தடையின்றி கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியளிப்பதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மற்றொரு பதிவில், மாநகரப் பேருந்துகளை இயக்குவதற்கு போதிய எண்ணிக்கையில் ஓட்டுநர்கள் இல்லை என்று கூறி, நடத்துநர்களுக்கு பணி மறுக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுவதாக கூறியுள்ளார்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில், “சென்னையில் மாநகரப் போக்குவரத்துக்கழக பணிமனைகளில், மாநகரப் பேருந்துகளை இயக்குவதற்கு போதிய எண்ணிக்கையில் ஓட்டுநர்கள் இல்லை என்று கூறி, நடத்துநர்களுக்கு பணி மறுக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஒரு பணிமனையில் 15 பேர் வீதம் சென்னையில் உள்ள 24 பணிமனைகளிலும் 350-க்கும் கூடுதலானவர்களுக்கு பணி மறுக்கப்படுகிறது. இதன்மூலம் ஒவ்வொரு நாளும் குறைந்தது 350 மாநகரப் பேருந்துகள் மக்களின் போக்குவரத்துக்காக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இது கண்டிக்கத்தக்கது!

Also Read : திமுக 2 ஆண்டுகள் ஆட்சி! தொடர்பில்லாமல் இருக்கும் கல்வி அமைச்சரின் அறிவிப்புகள்! தடுமாறும் கல்வித்துறை!

பணி மறுக்கப்படும் ஓட்டுநர்களுக்கு, ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்பது தான் மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும். அதனால், பெருமளவிலான நடத்துநர்களுக்கு மாதத்திற்கு 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு மட்டும் தான் ஊதியம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள நாட்களுக்கு ஊதியம் மறுக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் பணிக்கு வரும் ஓட்டுனர்களுக்கு பணி வழங்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை. அந்தக் கடமையிலிருந்து நிர்வாகம் தவறினால், அதன் விளைவுகளை நிர்வாகம் தான் அனுபவிக்க வேண்டும். மாறாக ஓட்டுநர்களின் ஊதியத்தை பிடிப்பது நியாயமற்றது!

நிர்வாகத்திற்கு நெருக்கமாக இருக்கும் ஓட்டுநர்களுக்கு இரவு நேரங்களில் பணிமனைகளில் பேருந்துகளை எடுத்து ஒழுங்குபடுத்தும் எளிய பணி வழங்கப்படுகிறது. இந்தப் பணிக்கு தேவையான ஓட்டுநர்களை விட பல மடங்கு ஓட்டுநர்களுக்கு இந்த பணி வழங்கப்படுவதாலும், அரசியல் செல்வாக்கு உள்ள ஓட்டுநர்கள் பணி செய்யாமலேயே பணி செய்ததாக கணக்குக் காட்டப்படுவதும் தான், பகல் நேரங்களில் ஓட்டுநர்கள் பற்றாக்குறைக்கு காரணம் ஆகும். நிர்வாகத்தின் ஒருதலைபட்சமான அணுகுமுறையால், நடத்துநர்களுக்கு மட்டுமின்றி, போக்குவரத்துக் கழகங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்!

Also Read : மே தினக் கூட்டத்தில் முதலமைச்சரின் கார்ப்பரேட் தொனியிலான பேச்சு! மசோதா கொண்டுவந்தது அசாத்திய துணிச்சலா? அசட்டுத் துணிச்சலா?

மாநகரப் போக்குவரத்துக்கழகங்களில் மட்டுமின்றி, பிற போக்குவரத்துக் கழகங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. தொழிலாளர்களிடையே பாகுபாடு காட்டப்படக்கூடாது. அனைத்து வழித்தடங்களிலும், அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படுவதையும், அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கும் பணி மற்றும் ஊதியம் வழங்கப்படுவதையும் போக்குவரத்துக் கழகங்கள் உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகள் சுரண்டப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

கள்ளச்சாராய விற்பனை அமோகம்

டாக்டர் அன்புமணி ராமதாஸின் மற்றொரு டிவிட்டர் பதிவில், “திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. கள்ளச்சாராய வணிகர்களிடையே நிலவும் போட்டியால் ஒரு பாக்கெட் கள்ளச்சாராயம் வாங்கினால், இன்னொரு பாக்கெட் சாராயம் இலவசம், இரு பாக்கெட் சாராயம் வாங்கினால் முட்டை இலவசம் என்றெல்லாம் சலுகைகள் வழங்கப்படுவதாக DT Next ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தடையின்றி கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

ஆந்திர – தமிழ்நாடு எல்லையில் உள்ள கிராமங்களில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம், எந்தத் தடையும் இல்லாமல் ஊர்திகள் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. எந்தெந்தப் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்ற விவரங்கள் அந்தப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குக் கூட துல்லியமாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பெயரளவில் ஒரு சிலரை கைது செய்யும் காவல்துறை, மீதமுள்ளவர்களின் கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் வேடிக்கைப் பார்க்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

மதுவில்லா மாநிலம் தான் மக்களின் எதிர்பார்ப்பு. அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை மதிக்காத அரசு, புதுப்புது வடிவங்களில் மது விற்பனையை அறிமுகம் செய்து வருகிறது. சந்துக்கடைகள் என்ற பெயரில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய சூழலில் கள்ளச்சாராய விற்பனையையும் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால், நாடு விரைவில் சுடுகாடு ஆகிவிடும்.

Also Read : தமிழ்ப் புத்தாண்டை குறிப்பிடாமல் அமைச்சர் வெளியிட்ட கல்வி நாட்காட்டியால் சர்ச்சை! திட்டமிட்டு புறக்கணிப்பு என தமிழ் ஆர்வலர்கள் புகார்!

சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதையும், சந்துக்கடைகளில் டாஸ்மாக் மது விற்கப்படுவதையும் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதற்குக் காரணமானவர்களை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, சின்னசேலம் பகுதியில் கடந்த 2-ம் தேதி போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தகரை, நாககுப்பம் காட்டுகொட்டாய் பகுதிகளில் லாரி டியூப்புகளில் மறைத்துவைத்து விற்பனை செய்துவந்த கள்ளச்சாராயம் கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமுனாமரத்தூர் வனப்பகுதி இருக்கிறது. இங்கு காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி என பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்குக் கொண்டுசெல்லப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து கடந்த 23-ம் தேதி போலீஸார் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது சாராயம் விற்ற 20 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் பதுக்கிவைத்து விற்பனைசெய்த கள்ளச்சாராயங்கள், ஊறல்கள், வெளிமாநில மது பாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இதேபோல் ஆரணி, போளூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கள்ளச்சாராயம் விநியோகம் அமோகமாக நடந்துவருவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, கடந்த 25-ம் தேதி ஜமுனாமுத்தூர் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது, ஈசானிய ஓடைப் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த லாரி டியூப்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதிலிருந்து 1,500 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையைக் கடுமையாக உயர்த்தினார்கள். இதன் காரணமாக சாதாரண வகை மதுவைக் குடிக்க வேண்டும் என்றால்கூட ரூ.200 வரை செலவாகிறது. ஏற்கெனவே பணம் இல்லாமல் திண்டாடிவரும் குடிமகன்களுக்கு இது மேலும் சிக்கலைக் கொடுத்திருக்கிறது.

மேலும், கிராமப்புறங்களில் வீடுகளுக்கு அருகில் டாஸ்மாக் கிடையாது. எனவே வாகனத்தில் வந்துதான் குடிக்க வேண்டும். பெட்ரோல் விலையும் அதிகமாக இருக்கிறது. இது போன்ற காரணங்களினால்தான் கள்ளச்சாராயக் கடைகளை நோக்கி குடிமகன்கள் செல்கிறார்கள். அங்கே ஆபத்தை உணராமல் குடிக்கிறார்கள். பல இடங்களில் இதற்கு போலீஸாரும் உடந்தையாக இருக்கிறார்கள் என்று கிடைக்கும் தகவல் அதிர்ச்சிக்குரியது.

Recommended Video

நிரந்தர ஓட்டுநர்களுக்கு பதிலாக தனியார் ஒப்பந்த ஓட்டுநர்கள்? ~ Temporary drivers for Govt. buses

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry