மே தினக் கூட்டத்தில் முதலமைச்சரின் கார்ப்பரேட் தொனியிலான பேச்சு! மசோதா கொண்டுவந்தது அசாத்திய துணிச்சலா? அசட்டுத் துணிச்சலா?

0
83

3.30 Min(s) Read: 12 மணி நேர வேலை தொடர்பான தொழிலாளர் சட்ட முன்வடிவில், தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இருந்ததாக முதலமைச்சர் கூறியிருக்கிறார். இதில் இருந்தே, அவரது முழுச் சம்மதத்துடன்தான் அந்த மசோதா சட்டப்ரேவையில் விவாதமின்றி சில நொடிகளில் நிறைவேற்றப்பட்டதை உணர முடிகிறது.

2020ஆம் ஆண்டில் குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை ஆண்ட பா.ஜ.க. அரசுகள், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தி உத்தரவிட்டது. இதற்கு எதிராக பொங்கி எழுந்த தற்போதைய முதலமைச்சரும், அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின்,
தொழிலாளர்கள் அனுபவித்து வரும் உரிமைகள், ஏதோ பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் போல், குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து பெற்றவை அல்ல; 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி சிகாகோ நகரில் தொழிலாளர்கள் பேரணி நடத்தி – ரத்தம் சிந்தி – உயிரைத் தியாகம் செய்து பெற்ற உரிமை! என்றார்.

Also Read : AC, Water Heater பயன்படுத்தினால் தண்டம் விதிக்க மின்வாரியம் திட்டம்? டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட ஷாக் தகவல்!

“பா.ஜ.க. அரசின் “மக்கள் விரோத”, “தொழிலாளர் விரோத” நடவடிக்கைகளை – அப்படியே “காப்பி” அடித்துவரும் அ.தி.மு.க. அரசு – தமிழகத்தில் அதுமாதிரி எந்த ஒரு தொழிலாளர் விரோத முடிவினையும் எடுக்க, கனவில் கூட எண்ணிப் பார்த்திடக் கூடாது” என்றும் எச்சரித்த ஸ்டாலின், தான் முதலமைச்சராக இருக்கும் போது, தனது தலைமையிலான அரசே அப்படியொரு சட்டத்திருத்த மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது உள்நோக்கம் கொண்டதுதானே? கொரோனா வந்தபோதுதான் குஜராத் மாநில அரசு 20.04.2020ல் ஃபேக்டரீஸ் ஆக்ட்டில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டது. திமுக அரசோ எல்லா காலத்திற்கும் சட்டம் போட எத்தனித்தது.

இந்நிலையில், மே தினத்தையொட்டி சென்னையில், சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பேசிய அவர், 12 மணி நேர வேலை தொடர்பான மசோதாவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதை மனம் குளிர வரவேற்கும் அதேநேரம், அவரது பேச்சில் எவ்வளவு முரண் இருக்கிறது என்பதை நுணுகிக் கவனித்தால் புரியும்.

12 மணி நேர வேலை மசோதாவில், தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இருந்தது என்கிறார் முதலமைச்சர். அப்படியானால், மசோதா நகலை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே கொடுக்காதது ஏன்? பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளில், முதலமைச்சர் அவையில் இல்லாத நேரத்தில், விவாதத்திற்கு அனுமதிக்காமல் அவசர அவசரமாக அந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டிய தேவை என்ன?

Also Read : சிங்காரவேலர் செங்கொடி ஏற்றியதன் நூற்றாண்டு! தொழிலாளர்கள் எதிர்கொண்ட போராட்டங்கள், வலிகள்! மே தின சிறப்புப் பதிவு!

‘தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர்களுக்கு மசோதாவில் சில சந்தேகங்கள் இருந்தன. அதனால் பல்வேறு கோணங்களில் அது விமர்சனம் செய்யப்பட்டது’ என்றும் தனது உரையில் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். தொழிற்சாலைகள், தொழிற்சாலைகள் கூட்டமைப்பினரின் தேவையை, எதிர்ப்பார்ப்பை கேட்டுப்பெற தெரிந்த அரசுக்கு, தொழிற்சங்கங்களை அழைத்து விவாதிக்க வேண்டும் என்று தெரியவில்லையா? State Labour Advisory Board ஆலோசனையை பெற வேண்டும் என்பது கூட அரசுக்குத் தெரியாதா?

இது எதையும் மதிக்காமல், பெரு முதலாளிகளை திருப்திப்படுத்த, எதேச்சதிகாரத்துடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. தமது முழு சம்மதத்துடன்தான் 12 மணி நேர வேலை மசோதாவை முதலமைச்சர் அனுமதித்துள்ளார். தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்ததன் விளைவாகவே அரசு பின்வாங்க நேரிட்டது என்பதையும் முதலமைச்சரின் பேச்சு உணர்த்துகிறது.

‘ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது துணிச்சல் என்றால், அதனை உடனடியாகத் திரும்பப் பெறுவதும் துணிச்சல்தான்’ என்று முதலமைச்சர் தமது பேச்சினூடே குறிப்பிடுகிறார். தொழிலாளர் வர்க்கத்தை, தொழிலாளர் வர்க்கப் பிரதிநிதிகளை கலந்துபேசாமல், 12 மணி நேர வேலை மசோதாவை கொண்டு வந்தது துணிச்சல் இல்லை, அசட்டுத் துணிச்சல். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல ஊடகங்கள் இருக்கும்போது, நமது அரசை யார் கேள்வி கேட்பார்கள், யார் எதிர்ப்பார்கள் என்கிற அசட்டுத் துணிச்சல்தான். ஆனால், திமுகவின் தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கொதித்தெழுந்த பிறகு, மசோதாவை திரும்பப் பெற்றதற்கு பெயர் துணிச்சல் இல்லை; யு டர்ன்.

Also Read : பட்டம் பெறவந்த பட்டியலின மாணவன் ஜட்டிக்குள் கைவிட்டு…! அரை நிர்வாணமாக்கி அறையில் பூட்டி சித்ரவதை..! வழக்கில் சிக்கும் போலீஸார்!

‘இந்த மசோதா தவறானது’ என முதலமைச்சர் கருதவே இல்லை. அவசரப்பட்டு கொண்டு வந்ததற்காக வருத்தப்படவும் இல்லை. தொழிற்சங்கத்தினர் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் அவருடையே கவலையே. தொழிலாளர்களை சமாதானப்படுத்தும் படியாகக்கூட மே தினக்கூட்டத்தில் பேச அவர் முயற்சிக்கவில்லை. கார்ப்பரேட் தொனிதான் முதலமைச்சர் பேச்சில் இழையோடியது.

கூடுதல் வேலை நேரம் என்பதை, அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டு சட்டமாக நிறைவேற்றிவிட்ட பிறகு, அதை முதலாளிகள் தங்கள் விருப்பப்படி பயன்படுத்தினால், அரசு அவர்களை தண்டிக்குமா? 12 மணி நேரம் பணிபுரிய விருப்பப்படுவோருக்கு மட்டும்தான் வேலை என்று பெரு நிறுவனங்கள் ஊழியர்களை கட்டாயப்படுத்தினால், அரசால் அதை தடுக்க முடியுமா?

திமுக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தமாகவே இருந்தாலும், திமுகவினுடைய தொழிற்சங்கமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுதான் அதில் வேடிக்கை என்கிறார் முதலமைச்சர். அவர்களுக்கு வேறு வழியில்லை; அவர்கள்தான் களத்தில் இருப்பவர்கள். தொழிலாளர்களை, மக்களை சந்திப்பவர்கள். மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சரா பதில் சொல்லப்போகிறார்? தொழிற்சங்கத்தினர்தானே பதில் சொல்லியாக வேண்டும். அந்த நிர்ப்பந்தம்தான் அவர்களை எதிர்க்க வைத்தது.

Also Read : தமிழ்ப் புத்தாண்டை குறிப்பிடாமல் அமைச்சர் வெளியிட்ட கல்வி நாட்காட்டியால் சர்ச்சை! திட்டமிட்டு புறக்கணிப்பு என தமிழ் ஆர்வலர்கள் புகார்!

‘விட்டுக் கொடுப்பதை நான் என்றைக்கும் அவமானமாகக் கருதியது இல்லை. அதை பெருமையாக கருதிக் கொண்டிருக்கக்கூடியவன்’ என்றும் பெருமிதப்படுகிறார் முதலமைச்சர். 12 மணி நேர வேலை மசோதா விவகாரத்தில் நீங்கள் விட்டுக்கொடுக்கவில்லை முதலமைச்சரே, பின்வாங்கியிருக்கிறீர்கள். இதை நீங்கள் செய்யாதிருந்தால், தமிழ்நாடு தொழிலாளர் புரட்சியை சந்தித்திருக்கும்.

‘எங்களைப் பொறுத்தவரையில் எந்தச் சூழ்நிலையிலும் தொழிலாளர்களின் நலனில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்’ என்று முதலமைச்சரால் எப்படிப் பேச முடிந்தது என்று தெரியவில்லை. 8 மணி நேர வேலையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று மறைந்த முதலமைச்சர் கருணாநிதி அறிவுறுத்தினார். ஆனால், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தி மசோதா நிறைவேற்றியதுதான், தொழிலாளர் நலனில் சமரசம் செய்து கொள்ளாத அரசா? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

உழைக்கும் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசும் அரசியலமைப்பின் 39(இ) பிரிவை மீறும் வகையில் இந்த மசோதா உள்ளது என்பது முதலமைச்சருக்கு தெரியாதா? இது சமூக நீதிக்கும் எதிரானதுதானே. சமூக நீதி என்பது இடஒதுக்கீட்டில் மட்டும் நின்றுவிடாமல், உழைக்கும் மக்களின் அனைத்து உரிமைகளையும் உள்ளடக்கியதாகும்.

Also Read : கார்ப்பரேட்டுகளுக்கு கைக்கூலி வேலை செய்வதா திராவிட மாடல்? காவியைப் பார்த்து காப்பி அடிக்கலாமா? நீதியரசர் ஹரிபரந்தாமன் ஆவேசம்!

தொழிலாளர்களின் வருமானம், உடல்நலம், வாழ்வாதாரம் மற்றும் மன உறுதி ஆகியவற்றில் இந்த மசோதா நீண்டகால எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில் இது இலாப வெறி மற்றும் பேராசை கொண்ட கார்ப்பரேட்டுகளைப் பாதுகாக்கிறது. “ஒவர் டைம் வேலை செய்யும் ஒவ்வொரு முறையும் தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதால், நீண்ட வேலை நேரத்துடன் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கமே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இருக்கும்.

மசோதாவில் குறிப்பிடப்படும் வேலை நேர நெகிழ்வுத் தன்மை என்பது, தொழிலாளியை ஒட்டச் சுரண்டவும், முதலாளிகளுக்கு உறிஞ்சி கொடுக்கவுமே வழிவகுக்கும்; தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், வேலை நேரம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும் என்பதே தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. `நம் நாட்டில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் இரக்கமற்ற அயல்நாட்டு ஆட்சியாளர்களின் விலங்குகளிலிருந்து மட்டுமன்றி, வர இருக்கும் இந்திய முதலாளிகளின் தளைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டால்தான் உண்மையான சுதந்திரத்தோடு இருக்க முடியும்’ என்று அப்போதே சொல்லிவிட்டுச் சென்றார் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். அவரை நினைவுகூறும் இந்நாளில் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் அந்த கருத்தை முழுதாக உள்வாங்கி உணர்ந்தால் சிறப்பு.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry