சிங்காரவேலர் செங்கொடி ஏற்றியதன் நூற்றாண்டு! தொழிலாளர்கள் எதிர்கொண்ட போராட்டங்கள், வலிகள்! மே தின சிறப்புப் பதிவு!

0
117
Image Courtesy - Law Corner

1800களில், ஆலைகளில் தொழிலாளர்கள் 18 மணி நேரம் வரை உழைக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். சரியான உறக்கம் இல்லாமல், ஓய்வறியா உழைப்பால் தொழிலாளர்கள் நோயுற்றனர். ஒரு நாளுக்கான வேலை நேரத்தின் அளவு சட்டப்பூர்வமாக வரையறுக்கப்படாவிட்டால், தொழிலாளர் வர்க்கத்துக்கு முன்னேற்றம் சாத்தியம் இல்லை என்ற கார்ல் மார்க்ஸின் முழக்கத்தைத் தொடர்ந்து, எட்டு மணி நேர வேலை எனும் கோரிக்கைக்கான போராட்டங்கள் தொடங்கின.

8 மணி நேரம், பணி நேரம் வேண்டி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தொழிலாளர்களின் எழுச்சி புதிய உத்வேகம் அடைந்தது. அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த தொழிலாளர் போராட்டமும், ஹேமார்க்கெட் படுகொலை சம்பவமும், தொழிலாளர் போராட்டங்களை மேலும் வலுவாக்கியது.

Also Read : பட்டம் பெறவந்த பட்டியலின மாணவன் ஜட்டிக்குள் கைவிட்டு…! அரை நிர்வாணமாக்கி அறையில் பூட்டி சித்ரவதை..! வழக்கில் சிக்கும் போலீஸார்!

உலகில் மே தினம் முதன்முதலாகக் கொண்டாடுவதற்கு அமெரிக்காவின் சிகாகோ நகரில் 01.05.1886ல் எட்டு மணி நேர வேலை வேண்டி நடத்தப்பட்ட வீரஞ்செறிந்த போராட்டமே காரணம். அதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1889ம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி, பிரான்ஸ் தலைநகர் பாரிசில், சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்ற கூட்டத்தில், 8 மணி நேர வேலை தீர்மானம் இயற்றப்பட்டது. அம்மாநாட்டில் கலந்துகொண்ட பல நாடுகளைச் சேர்ந்த சோஷலிசத் தலைவர்கள், தங்கள் நாடுகளில் 1890ம் ஆண்டு மே 1 முதல் தொழிலாளர் நாள் கொண்டாடினர். அந்த அறிவிப்பை ஏற்று இந்தியாவில் முதன் முதலில் மே தினத்தை கொண்டாடியவர், சென்னையில் மீனவ குலத்தில் பிறந்து சட்டம் பயின்றவரான சிங்காரவேலர். (18 பிப்ரவரி 1860 – 11 பிப்ரவரி 1946)

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்

1908ம் ஆண்டு தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களின் வீரமிக்க போராட்டத்தை வ.உ.சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் வெற்றிப்பாதைக்கு திருப்பினர். காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் கம்யூனிச சிந்தனைகளுக்கு சொந்தக்காரர்களாக இருந்த தலைவர்களான சிங்காரவேலர், திருவிக, நடேச முதலியார், சர்க்கரைச் செட்டியார், சுப்ரமணிய ஐயர், கிருஷ்ணசாமி சர்மா உள்ளிட்ட தலைவர்கள் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஆதரவளித்தனர்.

இந்தியாவில் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கதையாகவே இருந்த நிலையில், 1918ம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று, சென்னையில் தொடங்கப்பட்ட மெட்ராஸ் லேபர் யூனியன், இந்தியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர் கூட்டமைப்பாக உருமாறியது.

மெட்ராஸ் அலுமினிய தொழிற்சாலை ஊழியர்கள், அடிசன் அச்சக ஊழியர்கள் ஆகியோரின் வேலை நிறுத்த போராட்டம் சிங்காரவேலர் தலைமையில் நடந்தது. பி அண்ட் சி மில் போராட்டம், பர்மா செல் போராட்டம், தென்னிந்திய ரயில்வே போராட்டம் ஆகியவற்றை நடத்திய சிங்காரவேலர், கொல்கத்தாவின் கரக்பூர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

Also Read : தமிழ்ப் புத்தாண்டை குறிப்பிடாமல் அமைச்சர் வெளியிட்ட கல்வி நாட்காட்டியால் சர்ச்சை! திட்டமிட்டு புறக்கணிப்பு என தமிழ் ஆர்வலர்கள் புகார்!

அடுத்ததாக, கயாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சிங்காரவேலர், சுவாமி தீனாநாத், சி.எஃப். ஆண்ட்ரூஸ், எஸ்.என்.ஹால்டர், டாக்டர் டி.டி.சத்யா, ஜே.எம்.சென் குப்தா ஆகிய 6 பேர் கொண்ட AITUC என்ற தொழிலாளர்களுக்கான குழுவை ஏற்படுத்தியது காங்கிரஸ் கட்சி. 1922ல் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய சிங்காரவேலர், அனைத்துத் தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து காங்கிரஸ் வாயிலாக விடுதலைக்குப் போராட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொண்டுவந்த தீர்மானமே இதற்குக் காரணமாகும்.

உலகம் முழுவதும் தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடி வருவதைப் போல், இந்தியாவிலும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று சிங்காரவேலர் வலியுறுத்தினார்.
1923ம் ஆண்டு, மே 1ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் எதிரே உள்ள கடற்கரையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையிலும் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றன. தொழிலாளர்கள், விவசாயிகள் திரளாகக் கூடினர். ஒரு கூட்டத்துக்கு சிங்காரவேலரும், மற்றொரு கூட்டத்துக்கு எம்.பி.எஸ். வேலாயுதமும் தலைமைமேற்றனர். இக்கூட்டங்களில் சுப்ரமணிய சிவாவும், கிருஷ்ணசாமி சர்மாவும் உரையாற்றினர்.

அன்றைய தினம் தனது வீட்டில் காங்கிரஸ் கொடியேற்றிய சிங்காரவேலர், மக்களுக்கு இனிப்பு வழங்கியதுடன், தொழிற்சங்கத் தலைவர்களுக்கு விருந்தளித்தார். அப்போது, மே தினத்தை அரசு விடுமுறையாத அறிவிப்பதுடன், பெண்களுக்கு ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் மட்டுமே வேலை தர வேண்டும் என வலியுறுத்தினார்.

Also Read : கார்ப்பரேட்டுகளுக்கு கைக்கூலி வேலை செய்வதா திராவிட மாடல்? காவியைப் பார்த்து காப்பி அடிக்கலாமா? நீதியரசர் ஹரிபரந்தாமன் ஆவேசம்!

எனவே, இந்தியாவில் மே தினத்தை முதன்முதலில், 01.05.1923ல் சிறப்பாகக் கொண்டாடிய பெருமை சிங்காரவேலரையே சாரும். 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் செங்கொடி ஏற்றப்பட்ட முதல் மே தின கொண்டாட்டமாக இது அமைந்தது. மே தினம் சென்னையில் கொண்டாடப்பட்ட பிறகே, 01.05.1926ல் மும்பையில் கொண்டாடப்பட்டது.

சென்னையில், கடற்கரையில் நடந்த மே தினக்கூட்டத்தில், தொழிலாளி என்ற இதழை தொடங்கிய சிங்காரவேலர், காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், பொதுவுடமை சார்ந்து இந்திய தொழிலாளர் – விவசாயக் கட்சியையும் துவங்கினார். ஏற்றத்தாழ்வற்ற, சமயச் சார்பற்ற, சாதி ஒழிப்பு சமதர்மக் கொள்கையே கட்சியின் அடிநாதம் என அறிவித்தார் சிங்காரவேலர். இந்தியாவில் பொதுவுடமைக் கட்சி தோன்றுவதற்கு முன்னரே அந்தக் கொள்கையுடன் கட்சி ஆரம்பித்தவர் அவர். எல்லாச் சிறப்பு நிகழ்ச்சிகளையும் மே தினத்தில் கொண்டாடுவதை தம் இறுதிக்காலம் வரை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

மே தினக் கொண்டாட்டத்தின் எழுச்சியும், ஒற்றுமையும், தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வையும், போராட்ட உணர்வையும் கற்பித்தன. இதனைப் பயன்படுத்திக் கொண்ட சிங்காரவேலர், தொழிற்சங்கச் சட்டத்தை நிறைவேற்ற காரணமாக இருந்தார். ஜெர்மனி, ரஷ்யன், பிரெஞ்ச் மொழிகளை சரளமாக பேசுவதில் சிங்காரவேலர் வல்லவர்.

Also Read : சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஆலைகளை கரம்கூப்பி வரவேற்கும் தமிழக அரசு! மத்திய அரசு சொல்லி நிறைவேற்றப்படும் மசோதாக்கள்!

1957-ல் கேரளாவில் ஆட்சியமைத்த கம்யூனிஸ்ட் கட்சி, மே தினத்தைக் கொண்டாடியது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் , 1959ஆம் ஆண்டு, சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை நிறுவப்பட்டது. சென்னையின் முக்கிய அடையாளமான உழைப்பாளர் சிலையை உருவாக்கியவர் தேவி பிரசாத் ராய் சவுத்ரி. தலைசிறந்த ஓவியரும் சிற்பியுமான இவர், தான் முதல்வராக இருந்த லலித் கலா அகாடமியில் பணியாற்றிய காவலாளி, மாணவர் உள்ளிட்ட நால்வரை மாதிரியாகக் கொண்டு இந்தச் சிலையை உருவாக்கினார். 1967ஆம் ஆண்டு அண்ணாதுரை ஆட்சிக்காலத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் மே தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் வி.பி.சிங் மே தினத்திற்கு பொது விடுமுறையை அறிவித்தார்.

“உழைப்பாளர்களின் அரசு, உலக சமாதானத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும். நிலம், நீர், அத்தியாவசியத் தேவைகள், கப்பல்கள், ரயில்கள், சுரங்கங்கள் அனைத்தும் பொதுச்சொத்தே. அவை மக்கள் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். யாரெல்லாம் சமத்துவத்தை நம்புகிறோமே அவர்கள் அனைவரும் பார்லிமென்ட் அவைகளில் இடம்பிடிக்க வேண்டும். உழைப்பாளர்களின் ஆட்சியின் கீழ் உருவாகும் சமத்துவம் மூலமே உலகம் அமைதியாக வாழும். சமத்துவம் வளமைக்கு இட்டுச் செல்லும்” என்று 1933ல் உழைப்பாளர் நாளில் உரையாற்றினார் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். அதைப்போன்ற ஆட்சிகள் மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெறுகிறதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry