ஆண்டிற்கு ரூ.8 கோடி அளவிலான வரி ஏய்ப்பை தடுக்க கேபிள் டிவி ஒளிபரப்பு உரிமையை அரசே ஏற்று நடத்த முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலியார்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. எல். சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நிதி நெருக்கடியால் மக்கள் நலப் பணிகள் செயல்படுத்தப்படாமல் அரசு நிர்வாகம் பெரிதும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறது. அனைத்து தேவைக்கும் ஒன்றிய அரசின் உதவியை எதிர்பார்க்கும் சூழல் உள்ளது. ஆனால் புதுச்சேரி அரசுக்கான வரி வருவாய் ஆண்டிற்கு 8 கோடி ரூபாய் அளவுக்கு ஏய்க்கப்படுவதாக தெரிகிறது.
புதுச்சேரி பிராந்தியத்தில் 66 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படுகிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த ஆகஸ்ட் 2021 கணக்கெடுப்பின்படி, புதுவை பிராந்தியத்திலுள்ள 23 தொகுதிக்கு உட்பட்ட நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கள் மூலம் பெறப்படும் கேபிள் டிவி கேளிக்கை வரி எத்தனை இணைப்புகளுக்கு வசூலிக்கப்படுகிறது என்று கேட்டிருந்தேன்.
அதற்கு உள்ளாட்சித்துறை கொடுத்த பதில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெறும் 33,975 கேபிள் இணைப்புகளுக்கு 10% கேளிக்கை வரி வசூலிப்பதாக பதில் தந்தனர். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி புதுவை பிராந்தியத்தில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 632 குடும்ப அட்டைகள் உள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவருகிறது. தற்பொழுது அது 3 லட்சம் குடும்ப அட்டைகளாக அதிகரித்திருக்க வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு குடும்ப அட்டையும் ஒரு குடும்பத்தை காட்டுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு டிவி என்று கணக்கில் கொள்ளலாம் . அப்படியெனில் 3 லட்சம் கேபிள் டிவி இணைப்புகள் இருக்கும். உண்மை நிலை இப்படியிருக்க வெரும் 33,975 கேபிள் இணைப்புகளுக்கு மட்டுமே கேளிக்கை வரி வசூலிப்பது மிகப்பெரிய மோசடியாக உள்ளது.
சுமார் 3 லட்சம் இணைப்புகளுக்கு ரூ.250 முதல் ரூ.270 வரை கேபிள் கட்டணமாக வசூல் செய்கின்றனர். இதன்படி 3 லட்சம் இணைப்பிற்கு ஆண்டிற்கு 9 கோடி ரூபாய் வசூல் செய்கின்றனர். ஆனால் தற்போது 33,975 இணைப்பு என்று கணக்கு காட்டி, ஆண்டிற்கு ஒரு கோடி மட்டுமே கேளிக்கை வரியாக செலுத்துகின்றனர். இதன் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருவாய் ரூ.8 கோடி யாரோ சில தனிநபர்களின் பாக்கெட்டுக்கு செல்கின்றது.
இதிலும் 60 ஆபரேட்டர்கள், ரூ.2.96 கோடி வரை கேளிக்கை வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். பொதுமக்களிடம் அடாவடியாக வசூல் செய்யும் கேபிள் ஆபரேட்டர்கள் முறையாக கணக்கு காட்டாமல் உள்ளதோடு, வசூல் செய்த தொகையை அரசுக்கு செலுத்தாதது, மக்களுக்கும் அரசுக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.
ஆண்டிற்கு 8 கோடி ரூபாய் என்பது புதுச்சேரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிகப்பெரிய வருவாய். இதன்மூலம் சாலைகளை பராமரிப்பது உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை நிறைவேற்ற முடியும். இனியும் அரசின் வருவாய் கொள்ளை போவதை அனுமதிக்க கூடாது, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். முறைகேடுகளை தடுக்க கேபிள் டிவியை அரசுடைமையாக்க வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள கேளிக்கை வரி பாக்கி ரூ.2.96 கோடியை உடனடியாக வசூல் செய்யவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அறிக்கையில் சம்பத் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry
*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*