பெண்களின் திருமண வயது 18லிருந்து 21 ஆக உயர்கிறது! மத்திய அமைச்சரவை ஒப்புதல்! விரைவில் அமல்படுத்தத் திட்டம்!

0
37

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு கூட்டத்தொடரிலேயே மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உள்ளது. ஆண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது 21. குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006ன் படி குறைந்தபட்ச வயதுக்கு கீழ் உள்ள ஆண் அல்லது ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தால் அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது பேசிய பிரதமர் மோடி, இளம் வயது பெண்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதை தடுக்க, அவர்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

அதன்படி சமதா கட்சி முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையில்  10 வல்லுனர்கள் அடங்கிய குழு, பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்தது. அந்த அறிக்கையில்,  பெண்களின் திருமண வயதை, 18ல் இருந்து 21 வயதாக உயர்த்தலாம் என பரிந்துரைத்தது. இந்நிலையில், பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து சிறார் திருமண சட்டம், சிறப்பு திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும். இதற்கான ஒப்புதல் பெற்று சட்டமாக அமல்படுத்தப்படும்.

நடப்பு கூட்டத்தொடரிலேயே மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலனை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவின் மூலம் ஆண்களின் திருமண வயது 21 ஆக உள்ள நிலையில், அதற்கு இணையாக பெண்களின் திருமண வயதும் உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கர்ப்பிணிகள் இறப்பது குறையும். அதிக அளவிலான பெண்கள், கல்லூரிகளிலும், திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களிலும் சேருவர். பெண்கள், பொருளாதார ரீதியில் வலிமை பெறவும், இந்த சட்ட திருத்தம் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry