நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்துள்ளது! மறு தேர்வு நடத்த உத்தரவிடுவது சரியாக இருக்காது! உச்ச நீதிமன்றம் கருத்து!

0
63
The Chief Justice of India remarked that if the breach is confined to specific centres and the beneficiaries of the wrongdoing can be identified, it may not be proper to order a re-test for such an exam, which has been conducted on a massive scale.

இளநிலை நீட் தேர்வு நேர்மையாக நடக்கவில்லை என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இளநிலை நீட் (NEET-UG 2024) தேர்வு கடந்த மே 5-ம் தேதி நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மையங்களில் நடைபெற்றது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதிக்கு 10 நாட்கள் முன்னதாக ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டது. இதில், 67 மாணவர்கள் முதலிடம் பெற்றிருந்தனர். இவர்களில், 10-க்கும் மேற்பட்டோர் முழு மதிப்பெண்களை பெற்றிருந்தனர். இவர்களில் பலர் ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் என்பது தெரியவந்தது. இதோடு, வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட புகார்களும் எழுந்தன.

எனவே, இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரி மாணவர்களில் பலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். தேர்வை வெற்றிகரமாக எழுதிய குஜராத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் தடை விதிக்கக் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தனர். இவ்வாறு பெறப்பட்ட 38 மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

Also Read : கமிஷன் விவகாரத்தால் காவு வாங்கப்படும் மேயர்கள்! பெரும் நெருக்கடியில் காஞ்சிபுரம் திமுக மேயர்! உடனடியாக நீக்கக் கோரும் சொந்தக் கட்சி கவுன்சிலர்கள்!

அப்போது, “நீட் தேர்வில் மோசடி செய்தவர்களை முழுமையாக கண்டறிய முடியாது. அவர்களை தனியாக பிரிக்க முடியாது. தேர்வின்போது கடைப்பிடிக்க வேண்டிய முறையான வழிகாட்டு நெறிகளை தேசிய தேர்வு முகமை பின்பற்றத் தவறிவிட்டதாக பிஹார் காவல்துறை ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, மறு தேர்வுக்கு உத்தரவிட வேண்டும்” என்று மறு தேர்வு கோரும் மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தேசியத் தேர்வு முகமை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இதற்கு பதில் அளித்தபோது, “மோசடி திட்டமிட்ட முறையில் நடந்ததா? அல்லது தனிப்பட்ட முறையில் நடந்ததா? என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. மறு தேர்வு நடத்துவது என்பது நேர்மையாக தேர்வெழுதியவர்களை தண்டிப்பதாக ஆகிவிடும். தேர்வில் முதல் 100 இடங்களைப் பிடித்த மாணவர்கள், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 56 நகரங்களைச் சேர்ந்தவர்கள். இது ஓர் உள்ளூர் முறைகேடு” என்று தெரிவித்தார்.

அப்போது பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், “இது 23 லட்சம் மாணவர்களின் வாழ்க்கையை உள்ளடக்கியது. சமூக ஊடகங்கள் அல்லது மின்னணு தகவல் தொடர்பு வழிமுறைகள் மூலம், கசிவு பரவலாக இருக்கும். அது காட்டுத்தீ போல் பரவியிருக்கும். இந்த தேர்வு நேர்மையாக நடைபெறவில்லை. நீட் யுஜி வினாத்தாள் கசிந்துள்ளது. கசிவின் தன்மை குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். கசிவு மறுக்க முடியாது. அதன் விளைவுகளைத்தான் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.

Also Read : தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது..! ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை தேவை! மாயாவதி ஆவேசம்! சிபிஐ விசாரணைக்கு திருமாவளவனும் ஆதரவு!

வினாத்தாள் கசிந்ததால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய விரும்புகிறோம். இது தொடர்பாக தனது விசாரணை அறிக்கையை சிபிஐ அடுத்த விசாரணை தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல், முறைகேடு நடந்த மையங்கள் எவை எவை என்பதை தேசிய தேர்வு முகமை அடையாளம் காண வேண்டும்.

நீட் தேர்வின் புனிதத்தன்மையை உறுதி செய்வதில் நீதிமன்றம் அக்கறை கொண்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்கக் கூடாது. இதற்காக, புகழ்பெற்ற நிபுணர்களைக் கொண்ட பல்துறைக் குழுவை அமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிப்பது அவசியமாகும். ஏற்கெனவே குழு அமைக்கப்பட்டிருந்தால், அதுகுறித்த முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் அரசு தெரிவிக்க வேண்டும். குழுவைத் தொடர அனுமதிக்க வேண்டுமா? அல்லது அமைப்பை மாற்ற வேண்டுமா? என்பதை நீதிமன்றம் பின்னர் பரிசீலிக்கும்.

வினாத்தாள் கசிந்த நேரம், வினாத்தாள் கசிந்த விதம், பரப்பப்பட்ட விதம், கசிவு மற்றும் தேர்வின் உண்மையான நடத்தைக்கு இடையிலான கால அளவு பற்றி தேசிய தேர்வு முகமை விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வளவு பெரிய அளவில் நடத்தப்பட்ட தேர்வை மறு தேர்வு நடத்த உத்தரவிடுவது சரியாக இருக்காது, இளநிலை நீட் தேர்வை ரத்து செய்வது கடைசி முயற்சியாகவே இருக்கும்” என்று கூறினார். மேலும், மறு தேர்வு கோரும் மனுதாரர்கள் அனைவரும் சேர்ந்து ஒருங்கிணைந்த கோரிக்கையை 10 பக்கங்களுக்கு மிகாமல் மனுவாக தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry