உலக மக்கள்தொகையில் 7% ஆண்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையைத் தீர்க்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உதவ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள மருத்துவர் ஸ்டீவன் வாசிலெஸ்க்யூ. இவர் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (University of Technology Sydney-UTS) உயிரியல் மருத்துவ பொறியாளர் மற்றும் நியோஜெனிக்ஸ் பயோசயின்சஸ் (NeoGenix Biosciences) என்ற மருத்துவ நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார்.
தானும், தனது குழுவும் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளானது, தீவிர பயிற்சி பெற்ற ஒருவரின் கண்களைவிட 1000 மடங்கு அதிவேகமாக, மலட்டுத்தன்மை கொண்ட ஆண்களிடம் சேகரிக்கப்பட்ட விந்து மாதிரிகளில் இருந்து வீரியமிக்க விந்தணுவை கண்டறிய முடியும் என்று வாசிலெஸ்க்யூ தெரிவித்துள்ளார்.

‘ஒரு மனிதன் தான் பார்ப்பதை, உணர்ந்து அறிவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட மிகக் குறைவான நேரத்திலேயே, குழந்தைப் பேறுக்கு சாத்தியமான வீரியமுள்ள விந்தணுவை இந்த செயற்கை நுண்ணறிவு சுட்டிக்காட்டிவிடும்’ என்பதுதான் அவரது கண்டுபிடிப்பு. இது ஆண் மலட்டுத்தன்மைக்கான சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று ஸ்டீவன் வாசிலெஸ்க்யூவும், அவரது குழுவினரும் உறுதியாகக் கூறுகின்றனர்.
இவர்கள் உருவாக்கியுள்ள ஏஐ மென்பொருளுக்கு SpermSearch எனப் பெயரிடப்பட்டுள்ளது. விந்து மாதிரிகளில், குழந்தைப்பேறுக்கு சாத்தியமான விந்தணுக்களை அடையாளம் காணும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Non-Obstructive Azoospermia (NOA) எனப்படும் நிலை உள்ள ஆண்களுக்கு இந்த மென்பொருள் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். அதாவது, விந்து வெளியேறும்போது, அதில் வீரியமிக்க விந்தணுவே இல்லாத மலட்டுத்தன்மையுள்ள 10 சதவீத ஆண்களுக்கு உதவும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
SpermSearch AI தொழில்நுட்பம் எப்படி வீரியமுள்ள விந்தணுக்களை அடையாளம் காண்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டுமானால், இதுவரை இந்த சிகிச்சை முறை மனித செயல்முறையின் மூலம் எப்படி செய்யப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, ஆண் விதைப்பையின் ஒரு சிறிய பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு கருவியலாளர், ஆரோக்கியமான விந்தணுவை கண்டுபிடிப்பார்.
Also Read : நாட்டின் முதல் Artificial Intelligence பள்ளி கேரளாவில் தொடக்கம்! ஆசிரியர்களுக்கு இனி வேலை இல்லையா?
திசு பிரித்தெடுக்கப்பட்டு நுண்ணோக்கியின் மூலம் ஆய்வு செய்யப்படுகிறது. சாத்தியமான விந்தணுக்கள் கண்டறியப்பட்டால், அவற்றைப் பிரித்தெடுத்து முட்டையில் செலுத்த முடியும். இதைச் செய்ய பல ஊழியர்கள் ஆறு அல்லது ஏழு மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இப்படிச் செய்யும்போது துல்லியமின்மை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, என்று மருத்துவர் வாசிலெஸ்க்யூ கூறுகிறார். வைக்கோல் போரில் ஒரு ஊசியைத் தேடும் வேலையைப் போன்றதுதான் இது என்கிறார் அவர்.
மாறாக, விந்து மாதிரிகளின் புகைப்படங்களைக் கணினியில் பதிவேற்றப்படும்போது, ’ஸ்பெர்ம் ஸர்ச்’ தொழில்நுட்பம், ஆரோக்கியமான விந்தை நொடிகளில் கண்டுபிடித்துவிடும் என்று அவர் குறிப்பிடுகிறார். ஒரு அனுபவம் மிக்க கருவியலாளரைக் காட்டிலும் ’ஸ்பெர்ம் ஸர்ச்’ 1,000 மடங்கு வேகமானது என்பதை ஒரு சோதனை மூலம் நிரூபித்ததாக யுடிஎஸ் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் குழு தனது அறிவியல் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. கருவியலாளர்களை மாற்றுவதற்காக ’ஸ்பெர்ம் ஸர்ச்’ வடிவமைக்கப்படவில்லை எனக்கூறும் மருத்துவர் வாசிலெஸ்க்யூ குழுவினர், அவர்களுக்கு உதவியாக இது செயல்படும் என்கின்றனர். ’ஸ்பெர்ம் ஸர்ச்’ தொழில்நுட்பம் சாதகமான விந்தணுக்களை விரைவாக அடையாளம் கண்டு, அவற்றைச் சுற்றி ஒரு செவ்வகத்தை திரையில் வரைகிறது.

விந்தணுவைக் கண்டுபிடிப்பதில் இத்தகைய வேகம் இன்றியமையாதது, நேரம் மிகவும் முக்கியமானது என்று University of Dundeeல், இனப்பெருக்க மருத்துவத்துறையில் பணியாற்றும் Dr. Sarah Martins da Silva கூறுகிறார். கடந்த 40 ஆண்டுகளில், விந்தணுக்களின் எண்ணிக்கையில் 50% சரிவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில், அதிகரித்து வரும் ஆண் மலட்டுத்தன்மை கவலை அளிப்பதாக மாறியுள்ளது. மாசுபாடு, புகைபிடித்தல், மோசமான உணவுமுறை, உடற்பயிற்சியின்மை மற்றும் அதிக மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்த வீழ்ச்சிக்கு பங்களிக்கின்றன.
’SpermSearch’, வெறும் ஏழு நோயாளிகளை உள்ளடக்கிய மிகச் சிறிய சோதனைக் கட்டத்தில்தான் உள்ளது. சோதனைக் கட்டத்தில் இருப்பதற்கும், வணிக ரீதியாக கிடைப்பதற்கும் இடையிலான கால இடைவெளி ஐந்து ஆண்டுகள் வரை இருக்கலாம். ஆனால், தங்களின் கண்டுபிடிப்பே, ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சையின் “கடைசி முயற்சி” என்கிறார் மருத்துவர் வாசிலெஸ்க்யூ. “முட்டையை கருவுறச்செய்தல் அல்லது சிகிச்சையை நிறுத்துதல் ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக SpermSearch’ இருக்கலாம்,” என்று அவர் கூறுகிறார். தங்கள் குழு ’SpermSearch’ செயற்கை நுண்ணறிவை மருத்துவ பரிசோதனைகளுக்குக் கொண்டு செல்லத் தயாராக உள்ளது,” அசலான நேரடி கர்ப்பம் – அதுதான் அடுத்த படி,” என்கிறார் மருத்துவர் வாசிலெஸ்க்யூ.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry