4.00 Minute(s) Read : சிவனடியார்களுக்குத் துன்பம் விளைவிக்கும் தீயசக்திகளை அழித்து, அவர்தம் வினைகளை நீக்கி, அருள் தரும் விநாயகப்பெருமானை, ஆவணி மாத சதுர்த்தி அன்று இவ்வுலகோர் உய்ய, சிவபெருமான் அருளிய நிகழ்வைக் கொண்டாடும் பண்டிகையே “விநாயகர் சதுர்த்தி”ஆகும்.
சிவசக்தி வடிவில் “தீயவை-அழித்தல், வினை-களைதல், அருள்-தருதல்” என்ற மூன்றும் ஒருங்கே ஓர் மூர்த்தியாக விளங்குவதால், “தனக்கு மேலான தலைவன்(நாயகன்) இல்லாதவர்” என்று பொருளில் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். விநாயகர் அதிர்ஷ்டத்தை அளிப்பவராகவும், இயற்கை சீற்றங்களைத் தவிர்க்க உதவக் கூடியவராகவும் அறியப்படுகிறார்.
சம்பந்தர் பெருமான் அருளிய விநாயகர் புராணம் கீழ்கண்டபாடல் மூலம் இதை விளக்குகிறது; (திருமுறை-1, பதிகம் 123, பாடல் 5,6 திருவலிவலம்)
“அன்னை உமாதேவி பெண் யானை வடிவம் கொண்டு மேவ,
தந்தை சிவபெருமான் ஆண் யானை வடிவம் தாங்கி,
தம்மை எப்போதும் வணங்கும் அடியவர் தம் இடர் போக்கும் பொருட்டு,
கணபதிநாதன் தோன்ற அருள் புரிந்த சிவபெருமான்,
மிகுந்த வள்ளல் தன்மை மிக்க சிறந்தவர் வாசம் புரியும் வலிவலத்தில் உறைகின்ற இறைவனாவார்.”
இந்த பாடலில் உமாதேவி பெண்யானை(பிடி)யின் வடிவுகொள்ள, ஆண் யானை(கரி)யின் வடிவத்தைத் தாம் கொண்டு, விநாயகப் பெருமான் அவதரிக்கத் திருவுள்ளம் பற்றிய இறைவன் வலிவலத்தில் உறைகின்றான் என்று தெளிவாக விநாயகர் அவதாரம் பற்றி கூறப்பட்டுள்ளது.தன் திருவடிகளை வழிபடும் அடியவர்களின் இடர்களைக் களைய வேண்டி, கணங்களுக்கு எல்லாம் பதியாக, கணபதி வருவதற்குத் திருவுள்ளம் பற்றி அருள் புரிந்தார் என்பதாம். என்னே அவரின் கருணைத்திறம்?
[பிடி – பெண்யானை. கரி – ஆண்யானை. வடிகொடு – வடிவத்தைக் கொண்டு. கடி கணபதி – தெய்வத்தன்மையுடைய விநாயகப் பெருமான். கொடைவடிவினர் – வள்ளல் தன்மையினர்]
வாதாபி சென்று வெற்றிகொண்டு திரும்பிய சிறுத்தொண்டர் நாயனார் கொண்டுவந்த வாதாபி கணபதியே தமிழ்நாட்டுக்கு வந்த முதல் விநாயகப்பெருமான் ஆவார். பிடித்துவைத்தால் பிள்ளையார் என்பது ஆன்றோர் வாக்கு. சந்தனமோ, சாணமோ, மஞ்சளோ தூய மனதுடன் எடுத்துப் பிடித்து வைத்து மஞ்சள் குங்குமம் சாத்தி வணங்கினால் அதில் பிள்ளையார் ஆவாகனமாகி அருள்பாலிப்பார் என்பது நம்பிக்கை. விநாயகர் கணபதி என்றும் அறியப்படுகிறார்.
கணபதி என்ற சொல்லுக்குத் தேவகணங்களின் தலைவன் என்று பொருள். ‘க’ என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், ‘ண’ என்பது மோட்சம் பெறுவதையும், ‘பதி’ என்பது ஞான நெறியில் திளைத்துப் பரம்பொருளை அடைதலையும் குறிக்கும். மேலும் ‘மனோவாக்கினை கடந்த தலைவன்’ என்றும் பொருள்கொள்ளலாம்.
விநாயகரின் தனித்துவமான வடிவத்திற்கு அப்பால், அவர் மக்களின் தடைகளை அகற்றி, செழிப்புக்கு வழிவகுக்கும் திறனுக்காக புகழ்பெற்றுள்ளார். விநாயகப் பெருமானின் மறுபிறவியை மக்கள் நினைவுகூர்ந்து மகிழ்வதற்கு விநாயக சதுர்த்தியைக் கடைப்பிடிப்பது ஒரு வழியாகும். அவர் மீது அசைக்க முடியாத பக்தியை வெளிப்படுத்தவும், அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறவும் இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி எப்போது என்னும் குழப்பம் பலரிடையே உள்ளது. தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ஞாயிற்றுக்கிழமை (17.9.23) அன்று அறிவித்திருந்தது. பிறகு அதை 18.9.23 திங்கட்கிழமைக்கு மாற்றி அறிவித்தது. வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை 19.9.23 அன்று கொண்டாடப்படுகிறது. ஏன் இந்த வித்தியாசம்?
பொதுவாக நம் நாட்டில் இரண்டு விதமாகப் பண்டிகைகளைக் கொண்டாடுகிறோம். ஒன்று நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. மற்றொன்று திதியை அடிப்படையாகக் கொண்டது. திருவோணம், வைகாசி விசாகம், தைப்பூசம் போன்ற பண்டிகைகள் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கடைப்பிடிக்கப்படுவன. ஜன்மாஷ்டமி, ராம நவமி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகள் திதியை அடிப்படையாகக் கொண்டு கடைப்பிடிக்கப் படுவன.
விநாயகர் அவதார நட்சத்திரம் ஹஸ்தம். திதி சதுர்த்தி. அவர் பிறந்த நாளைக் கொண்டாடும்போது திதியை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடும் வழக்கம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது. மேலும் வளர்பிறையோ தேய்பிறையோ, சதுர்த்தி என்னும் திதி விநாயகரோடு தொடர்புடையது என்றுதான் புராணங்கள் சொல்கின்றன.
17.9.23 அன்று விநாயகரின் நட்சத்திரமான ஹஸ்தம் வருவதால் பலரும் அன்றே விநாயகர் சதுர்த்தி என்று முடிவு செய்துவிட்டனர். அரசின் அறிவிப்பும் இதைக் கணக்கிட்டே வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் அன்றைக்கு துவிதியை மற்றும் திரிதியை மட்டுமே உள்ளன. சதுர்த்தி திதி 18.9.23 அன்று பகல் 11.38 -க்குப் பிறகு வருவதால் ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்தி வழிபடுவது முறையல்ல.
Also Read : குடம்புளி…கேள்விப்பட்டிருக்கீங்களா? வியக்கவைக்கும் மருத்துவத்தன்மை! உடல் எடை குறையும், சீரணம் சீராகும்!
18.9.23 அன்று புரட்டாசி பிறந்துவிடுவதால் ஆவணியிலேயே விநாயகர் சதுர்த்தி வரவேண்டும் என்றும் சிலர் கருதுகிறார்கள். ஆனால் சாஸ்திரப்படி ஆவணி அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை சதுர்த்தியே கணக்கு. எனவே 18.9.23 அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதே சரி. இதை உணர்ந்தும் ஆன்மிக அன்பர்களின் கோரிக்கையை ஏற்றும் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தை 18.9.23க்கு மாற்றி உத்தரவிட்டது.
பகலில் சதுர்த்தி வந்துவிடுவதால் 18.9.23 அன்றே நாம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம். வட இந்தியாவில் 19.9.23 அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை உதயத்தின்போது இருக்கும் திதியே அன்றைய திதி. அப்படிப்பார்க்கையில் 19.9.23 அன்று சதுர்த்தி திதி 11.50 வரை உள்ளதால் அன்றே அவர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறார்கள்.
இரண்டு தினங்களுமே விநாயகரை வழிபட ஏற்ற தினங்கள் என்றாலும் தமிழ்நாட்டில் திங்கட்கிழமையே கொண்டாட பெரியோர்கள் தீர்மானம் செய்திருக்கிறார்கள். திங்கட்கிழமை அன்று திரிதியை திதி 11.38 வரை உள்ளது என்றாலும், அந்த நாளின் காலை வேளையிலேயே நாம் பூஜைகளைச் செய்யலாம்.
பொதுவாகக் காலை அல்லது மதிய வேளையில் பூஜை செய்வது உத்தமம். யார் யார் வீடுகளில் மாலை பூஜை செய்யும் வழக்கம் உண்டோ அவர்கள் மட்டுமே மாலை பூஜை செய்ய வேண்டும். சதுர்த்தி திதி பகல் 11.38 -க்குத்தான் வருகிறது என்றாலும், காலை 9.15 மணிக்கே பூஜை செய்யலாம் தவறில்லை. மறுநாள் விநாயகருக்குப் புனர்பூஜை செய்து நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி பூஜை செய்வதால் விக்னங்கள் தீரும். சுபங்கள் கைகூடும் என்று முத்துக்குமார சிவாசாரியார் கூறியிருக்கிறார்.
மோதகம், கொழுக்கட்டை, பால், தயிர், தேன், அவல்,பொறி, கடலை, சர்க்கரை, பேரீட்சை, தேங்காய்,விளாம்பழம், வாழைபழம், கொய்யா, மாதுளை, லட்டு மற்றும் சுண்டல் இவற்றில் ஒன்றோ அல்லது பலவோ செய்து விநாயகருக்கு நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு. பிள்ளையாருக்கு முதன்முதலில் மோதகம் படைத்தது, வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி.
விநாயக விசர்ஜனம், விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் முடிவைக் குறிக்கிறது. பூமியில் உள்ள அனைத்தும், இயற்கையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளுடன் இறுதியில் ஒன்றிணைகின்றன. இது விநாயகரின் பிறப்பு சுழற்சியையும் குறிக்கிறது. அவர் தனது பக்தர்களுடன் 7 முதல் 10 நாட்கள் தங்கியிருந்து பிறகு தனது சொர்க்க வாசஸ்தலத்திற்குத் திரும்புகிறார்.
ஸித்தி, புத்தி மற்றும் வல்லபை ஆகியோரை விநாயகரின் தேவியராகக் குறிப்பிடுகிறது விநாயக புராணம். இவர்கள் மட்டுமல்ல… மோதை, பிர போதை, கமலை, சுந்தரி, மனோரமை, மல்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமந்தினை, நந்தினி, காமதை ஆகியோரும் விநாயகரின் தேவிகளாகத் திகழ்வதாக ஞானநூல்கள் தெரிவிக்கின்றன.
வியாச பகவானின் மகாபாரதத்தை எழுத்திலே வடித்த முதல் எழுத்தாளன் விநாயகர். ஆகவேதான், எதையும் எழுதுமுன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறோம் என்பார்கள். வைணவ ஆலயங்களான திருவரங்கம் கோயிலில் விக்னபதி, திருவல்லிக்கேணியில் வெண்ணெய் விநாயகர், அழகர் கோயிலில் தும்பிக்கை ஆழ்வாராகத் திகழ்கிறார் பிள்ளையார்.
விநாயகப்பெருமான் அம்மை-அப்பனை வலம் வந்து ஞானப்பழம் பெற்ற ஊர் திருவலம் என்பர். வேலூரில் இருந்து சுமார் 28 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த ஊரில் அருள்பாலிக்கும் வலம்வந்த விநாயகரை தரிசிக்க, வல்வினைகள் யாவும் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தலத்தில் நர்த்தன விநாயகரை தரிசிக்கலாம். ஒரு காலம்…, வேதம் ஓதுதலை முனிவர்கள் மறந்துவிட, விநாயகரே வேதியராக வந்திருந்து, வேதம் ஒலித்து வீரநடனம் ஆடினாராம். இதையட்டி அமைந்த பெயரே நர்த்தன விநாயகர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry