சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்றுச் சாதனை படைத்து ஒட்டுமொத்த தேசத்தின் நம்பிக்கையையும் காப்பாற்றியிருக்கிறார் விராட் கோலி. மிக முக்கியமான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் சதமடித்ததோடு, ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் எனும் சச்சினின் சாதனையையும் கோலி முறியடித்திருக்கிறார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக கோலி அடித்திருப்பது அவருடைய 50வது ஒருநாள் சதம். ஓடிஐ போட்டிகளில் இதுவரை எவரும் செய்யாத சாதனை இது. இனிமேல் யார் செய்ய நினைத்தாலும் அவ்வளவு எளிதானதாக இருக்காது.
2011 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் விராட் கோலியின் தோளில் தட்டிக் கொடுத்து களத்திற்குள் அனுப்பி வைத்தார் சச்சின். அது தட்டிக் கொடுத்து தேற்றும் தருணமாக மட்டும் இருந்திருக்கவில்லை. அத்தனை நாள்களாக தான் மூச்சிறைக்க கையிலேந்தி ஓடிய பேட்டனை (Baton) கோலிக்கு சச்சின் கை மாற்றிவிட்ட தருணமாகத்தான் பார்க்கப்பட்டது. சச்சின் கொடுத்த உத்வேகத்தோடு இந்தியாவின் நம்பிக்கையாக ஓட்டத்தைத் தொடங்கிய கோலி, இன்று அதே சச்சினை விஞ்சி நிற்கிறார். அவரை விட அதிக வேகத்தில் ஓடி அவரை விட அதிக உச்சத்துக்கு சென்றுள்ளார்.
Also Read : ஒருநாள், டெஸ்ட், டி20 என மூன்றிலும் நம்பர் 1! இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை!
அதுவும் இந்தியாவிற்கு மிக முக்கியமாகக் கருதப்படும் ஒரு ஐ.சி.சி. உலகக் கோப்பை தொடரில் அத்தனை சாதனைகளையும் நிகழ்த்தி அணிக்குத் தேவையானதையும் 200% சரியாகச் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். விராட் கோலி என்னதான் சிறப்பாக ஆடினாலும் ஐ.சி.சி. தொடர்களின் நாக் அவுட்டில் பொறுப்பை உணராமல் சொதப்பி விடுகிறார் எனும் குற்றச்சாட்டு அவர் மீது இருந்தது. 2011, 2015, 2019 உலகக்கோப்பை அரையிறுதியில் ஒற்றை இலக்க ரன்னில் கோலி அவுட்டாகி இருந்தார்.
ஆனால், இந்த முறை கதாயாகனாக நிற்கிறார் கோலி. இந்த உலகக்கோப்பைதான் கோலியின் ஆகச்சிறந்த ஆட்டம் வெளிப்பட்ட உலகக்கோப்பை. லீக் போட்டிகளில் ஆடிய 9 போட்டிகளில் 5 அரைசதங்களையும் 2 சதங்களையும் அடித்திருந்தார். அதில், அவரது பிறந்தநாளில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து சச்சின் சத சாதனையை சமன் செய்த சம்பவமும் நடந்திருந்தது. ஆக, இந்த முறை கோலியின் மீது பெரிய நம்பிக்கை இருந்தது.

வான்கடே மைதானம்தான் கோலியின் புதிய சரித்திரத்திற்கான களமாக அமைந்தது. ரோஹித் முதல் 10 ஓவர்களில் தன்னுடைய வேலையைக் கச்சிதமாகச் செய்து முடித்துவிட்டு செல்ல, அதற்கு பிந்தைய ஓவர்களில் பொறுப்பு மொத்தத்தையும் தன் தோளில் ஏற்றிக் கொண்டார் கோலி. கோலியைத் தடுமாறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் டெஸ்ட் மேட்ச் பாணியில் டைட்டாக ஃபீல்ட் செட் செய்திருந்தார் வில்லியம்சன். கோலி அசரவே இல்லை. எந்த இடரும் இன்றி தன்னுடைய வழக்கமான ஆட்டத்தை ஆடினார்.
ரன்ரேட் குறையாமல் இருக்க சிங்கிள் தட்டி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தார். ஃபீல்டர்களுக்கு இடையிலான இடைவெளியை கணித்துத் தரையோடு தரையாக பவுண்டரிகளைச் சிதறடித்தார். சௌத்திக்கு எதிராக ஒரு கட்டத்தில் அசாத்தியமாக லெக் சைடில் ஒரு ஷாட் ஆடி பவுண்டரி அடித்திருந்தார். “சௌத்தியின் பந்தில் இப்படி ஒரு ஷாட்டை எப்படி ஒரு வீரரால் ஆட முடியும்…” என கமென்ட்ரியில் இருந்த ஆல் டைம் கிரேட் விவ் ரிச்சர்ட்ஸே வியந்துப் பாராட்டினார்.

இயந்திரத்தனமாக சதங்களைக் குவித்து ரசிகர்களின் இதயங்களை இறக்கைக்கட்டி பறக்க வைத்திருக்கிறார் கோலி. ஆனால், கோலி இப்போது எட்டவிருந்த சதம் அதற்கு முந்தைய சதங்களையெல்லாம் விட உணர்வுப்பூர்வமானது. சச்சின் பிறந்து வளர்ந்து வியர்வை சிந்தி பேட்டைச் சுழற்றிய வான்கடேவின் செஞ்சிவப்பு மண்ணில், அதே சச்சினுக்கு முன்பாக அவரின் சாதனையை முறியடிக்கும் தருணத்தை நெருங்கினார்.
ஃபெர்குசன் வீசிய 42வது ஓவரில் ஸ்கொயரில் அடித்து 2 ரன்கள் ஓடி சதத்தை எட்டினார். 50வது சதம் எனும் சரித்திர மைல்கல்லை எட்டிவிட்டு கோலி செய்த முதல் காரியம் சச்சினுக்குக் கொடுத்த மரியாதைதான். ஹெல்மெட், க்ளவுஸ் எல்லாவற்றையும் கழற்றிவிட்டு சச்சினை நோக்கி அப்படியே தலைவணங்கி அந்த மாபெரும் தருணத்தைச் சிறப்பாக நிறைவு செய்தார். சச்சினின் நம்பிக்கை பலித்தது. சரியான நபரின் கையில்தான் இந்திய அணியின் பொறுப்பைத் தேடிக் கொடுத்திருக்கிறோம் எனும் பெருமிதம் பொங்க சச்சினும் கோலியின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். கிரிக்கெட்டின் அதி உன்னதமான தருணங்களில் தலையாய இடத்தை இந்தத் தருணம் பிடித்துக் கொண்டது.


இதுகுறித்துப் பதிவிட்டுள்ள சச்சின், இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் உங்களை நான் முதன்முதலில் சந்தித்தபோது, மற்ற சக வீரர்கள் உங்களை என் கால்களைத் தொடுமாறு கிண்டல் செய்தனர். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவிலேயே, நீங்கள் உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட நான் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
The first time I met you in the Indian dressing room, you were pranked by other teammates into touching my feet. I couldn’t stop laughing that day. But soon, you touched my heart with your passion and skill. I am so happy that that young boy has grown into a ‘Virat’ player.
— Sachin Tendulkar (@sachin_rt) November 15, 2023
117 ரன்களில் கோலி சௌத்தியின் பந்தில் அவுட் ஆன சமயத்தில் ஒட்டுமொத்த வான்கடே மைதானமுமே கோலிக்கு எழுந்து நின்று கைத்தட்டியது. இப்படி ஒரு தருணத்தை கொடுத்ததற்காக கோலியை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
“நான் 49 லிருந்து 50-ஐ எட்ட ஒரு வருடம் எடுத்துக் கொண்டேன். ஆனால், நீங்கள் 49 லிருந்து 50-ஐ எட்ட சில போட்டிகளை மட்டும்தான் எடுத்துக் கொள்வீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” – கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 49வது சதத்தைப் பதிவு செய்து விராட் கோலி தன்னுடைய சாதனையை சமன் செய்த சமயத்தில் சச்சின் டெண்டுல்கர் இப்படித்தான் வாழ்த்தியிருந்தார். அது நிஜமாகியுள்ளது. கிரிக்கெட் கடவுளின் சாதனையை, கிரிக்கெட்டின் ராஜா முறியடித்திருக்கிறார். கிரிக்கெட்டின் ராஜாவுக்கு ஒரு ராயல் சல்யூட்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry