உரிமம் இல்லாமல் கடைகளில் குளிர்பானங்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 13 வயதான லஷ்மி சாய் என்ற சிறுமியும், அவரது சகோதரன் புவனேஸ்வரனும் நேற்று, வீட்டின் அருகே உள்ள கடையில் பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளனர். சில நிமிடங்களிலேயே இருவரும் வாந்தி எடுத்துள்ளனர். அவர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு ரத்தவாந்தி எடுத்ததால், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
குளிர்பானம் குடித்து அக்காவும், தம்பியும் ரத்த வாந்தி எடுத்தது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து புது வண்ணாரப்பேட்டையில் உள்ள அந்த கடையை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். அப்போது காலாவதியான கூல்டிரிங்ஸ், மாவு பாக்கெட் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தக் கடையில் இருந்து தரமற்ற சில குளிர் பானங்களையும், உணவுப் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சிறுவர்கள் குடித்த குளிர்பானத்தின் மாதிரிகள், சோதனைக்காக கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த குளிர்பானத்தை விநியோகித்த திருவள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் குடோனிலும், அந்தக் குளிர்பானம் உற்பத்தியாகும் நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள ஆலைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மருத்துவர்கள் தரப்பிலிருந்து குழந்தை எடுத்த ரத்தத்தின் மாதிரிகளை வேலூர் மருத்துவக் கல்லூரிக்கு ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, “10 ரூபாய் குளிர்பான பாட்டில் விற்பனை அதிகரித்துள்ளது. முறையாக உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெறாமல் விற்றால் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து சென்னை முழுவதும் உரிமம் இல்லாமல் விற்கப்படும் பத்து ரூபாய் குளிர்பானங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைத்து வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். மேலும் உரிமம் இல்லாமல் இது போன்ற குளிர்பானங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, இதுபோன்ற பத்து ரூபாய் குளிர்பானங்களில் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் சில போதை பொருட்களை கலந்து இளைஞர்கள் குடிப்பதாகவும், அவர்களில் பலர் போதை அடிமைகள் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, மருத்துவர்கள் பரிந்துரை இன்றி வலி நிவாரணிகள் போன்ற மாத்திரைகளை மருந்தகங்கள் கொடுக்கக் கூடாது என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry