3.00 Minute(s) Read : இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு சற்றே அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் எஜிப்டி இனத்தைச் சேர்ந்த பெண் கொசுக்கள் கடிப்பதால் ஏற்படுகிறது. “டெங்கு” என்ற சொல் ஒரு ஸ்பானிஷ் வார்த்தையாகும், இதன் பொருள் “பாதிப்பு” என்பதாகும். கியூபாவில் 1828இல் இந்த வார்த்தை முதன்முதலாகப் பயன்பாட்டுக்கு வந்தது.
டெங்கு காய்ச்சல் என்பது பாதிக்கப்பட்ட கொசு கடித்த 3-10 நாட்களுக்குப் பிறகு வெளிப்படும். டெங்கு காய்ச்சலுக்கென பிரத்யேக மருந்து எதுவும் இல்லாததால், அறிகுறிகளை நீக்கியோ, அல்லது காய்ச்சல் வந்தவர்களுக்கு அதன் தீவிரத்தை குறைக்கவோ சிகிச்சையளிக்கப்படுகிறது.
ஆங்கில மருத்துவத்தில் உடல் வெப்பநிலை மற்றும் வலியைக் குறைப்பதற்காக அசிடமினோபன் (பாராசிட்டமால்) மற்றும் உடலில் நீரேற்றத்தை அதிகரிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்படும். இரத்தப்போக்கை அதிகரிக்கும் என்பதால், டெங்கு நோய்த்தொற்றுடன் தொடர்புடைய வலிக்கு, ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAIDs) பயன்படுத்தப்படுவதில்லை.
சித்த மருத்துவம் டெங்குவை பித்த சுரத்துடன் தொடர்புபடுத்துகிறது. பொதுவாக ’பித்த சுரம்’ ரத்தப்போக்கை ஏற்படுத்தும். டெங்கு காய்ச்சலும் ரத்தக்கசிவுடன் தொடர்புடையது என்று ‘அகஸ்தியர் சுரனூல் 300’ விவரிக்கிறது. அதிக காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, தடிப்புகள், மூட்டு வலி, தசை வலி போன்றவை டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் நபர்களுக்கு ஏற்ப வேறுபடும்.
டெங்கு அறிகுறி தெரிந்து உடனடியாக சிகிச்சை தொடங்காவிட்டால், சோர்வு, வாந்தியில் இரத்தம், தொடர்ச்சியான வாந்தி, ஈறுகளில் இரத்தப்போக்கு, அமைதியின்மை, கடுமையான வயிற்று வலி மற்றும் விரைவான இரத்தப்போக்கு போன்ற கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இங்கு குறிப்பிட்டுள்ள மூலிகைகளையும் உரிய மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் எடுக்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் மருத்துவரின் வழிகாட்டுதல் இல்லாமல் மருந்துகளை உட்கொள்ளவே கூடாது. பொதுவாக, சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை, டெங்கு காய்ச்சல் தடுப்பு சிகிச்சையாக, நாளொன்றுக்கு 30 மி.லி. வீதம் மூன்று நாள்களுக்கு நிலவேம்பு கஷாயம் குடிக்கலாம்.
டெங்கு பாதித்தவர்கள் என்னவிதமான மூலிகளை பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்வோம்.
பாரம்பரிய மருத்துவத்தில் டெங்கு காய்ச்சலைக் குறைக்க பப்பாளி இலைகள் பரிந்துரைக்கப்படுகிறது. பப்பாளி இலை பிளேட்லெட் எண்ணிக்கை, வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் நியூட்ரோபில்களை அதிகரிக்க உதவும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Also Read : நீரிழிவுநோய் – சுக்கு என்ன தொடர்பு? வெறும் வயிற்றில் சுக்குத்தண்ணீர் குடிப்பதால்..! Benefits of Dry Ginger!
பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரித்தால் ரத்தப்போக்கு மற்றும் நோயின் தீவிரத்தை தடுக்கலாம். ஒரு கப் தண்ணீரில் புதிய பப்பாளி இலைகளை அரைத்து வடிகட்டும்போது சாறு கிடைக்கும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு நாளைக்கு இரண்டு முறை வீதம், ஒரு வாரத்துக்கு 15 மி.லி. பப்பாளி இலைச்சாறு எடுத்துக்கொள்ளலாம். பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரித்தவுடன் நிறுத்திவிடலாம்.
நிலவேம்பு அல்லது கல்மேக், பலவிதமான நிலைகளில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும் ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆய்வக சோதனைகளில், நிலமேம்பு கஷாயம் டெங்கு வைரஸுக்கு எதிரான வைரஸ் தடுப்பு செயல்பாட்டை உறுதிபடுத்தியுள்ளது. எனவே, டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர் நிலைமை மோசமடைவதைத் தடுக்க நிலவேம்பு கஷாயம் பயன்படுத்தலாம். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு நாளைக்கு இரண்டு முறை வீதம், ஒரு வாரத்துக்கு 30 மி.லி. நிலவேம்பு கஷாயம் எடுக்கலாம்.
இதேபோன்று ஆடாதோடையும் டெங்கு காய்ச்சலுக்கு பயனளிக்கக்கூடியதாகும். பத்து கிராம் ஆடாதோடைக் குடிநீர்ச் சூரணத்தை, நானூறு மி.லி. நீர் விட்டுக் கொதிக்க வைத்து நூறு மி.லி. அளவு வற்ற வைத்து வடிகட்டிக் காலை மாலை உணவிற்கு முன் குடிக்கவும். 30 மி.லி அளவு எடுத்துக்கொள்ளலாம். சிறியவர்களுக்கு 10-20 மி.லி. போதுமானது. ஆடாதோடை இலை கிடைத்தால், மூன்று இலைகள், 4 மிளகு, ஒரு ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து 30 மி.லி அளவுக்கு அருந்தலாம்.
Also Read : தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! Microplastics Found in Human Breast Milk!
சீந்தில், பல பிரச்சனைகளுக்குத் தீர்வாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மூலிகையாகும். சீந்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், மனிதர்களில் வைரஸ் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதாகவும் அறியப்படுகிறது. டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் நீங்க, தினமும் சீந்தில் கஷாயம் குடிக்கலாம். புதிதாக நறுக்கிய சீந்திலை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து அரைத்து சாறு எடுத்து வடிக்கடி அருந்த வேண்டும்.
நிலப்பனைக் கிழங்கு பல நிலைகளில் பயனுள்ள ஒரு மருத்துவ மூலிகையாகும். நிலப்பனைக் கிழங்கின் வேர்கள் மற்றும் கிழங்குகள் பல நோய்களுக்கு நிவாரணமாக பயன்படுத்தப்படுகின்றன. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் நிலப்பனைக் கிழங்கை பாலுடன் எடுத்துக் கொள்ளலாம்.
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் துளசி இலைகளும் பெரும் பங்கு வகிக்கிறது. இது ஆய்வு ரீதியாகவும் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. புதிய துளசி இலைகளை தண்ணீரில் 2 அல்லது மூன்று நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து, அதை ஒரு கோப்பையில் வடிகட்டி, சுவைக்காக சில துளிகள் எலுமிச்சை சாறு அல்லது சிறிதளவு தேன் சேர்த்து அருந்தலாம். துளசியை தண்ணீரில் கொதிக்க வைத்து நாள் முழுவதும் குடிக்கலாம். 10-15 துளசி இலைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை மென்று சாப்பிடலாம்.
டெங்கு காய்ச்சலின் போது, உடல் முழுவதுமாக நீரிழப்பு ஏற்படுகிறது. உடலை ஹைட்ரேட் செய்ய தேங்காய் நீரை உட்கொள்ளலாம். டெங்கு அறிகுறிகள் தென்பட்டால், தினமும் இரண்டு முறை தேங்காய்த் தண்ணீரைக் குடிக்கலாம்.
வெந்தயம் உட்கொள்வது டெங்கு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். டெங்குவால் ஏற்படும் மூட்டு வலி மற்றும் தசை வலி ஆகியவற்றிலிருந்து வெந்தய இலை நிவாரணம் அளிக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வெந்தய இலைகளை தினமும் இரவில் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வடிகட்டி குடிக்கவும். சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், பெரிய அளவில் நிவாரணம் கிடைக்கும்.
டெங்கு காய்ச்சலில் இருந்து நலம்பெற்ற பிறகு 10 நாட்களுக்கு கடினமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிப்பதுடன், நீர்ச்சத்து உள்ள காய்கறிகளை சாப்பிட வேண்டும். கஞ்சி போன்ற எளிதில் செரிக்கக் கூடிய ஆகாரங்கள் எடுத்துக்கொள்வது சிறப்பு. மாதுளை ஜுஸ் அருந்துவது கூடுதல் பலன் தரும். 20 மி.லி. அளவுக்கு மாதுளை மணப்பாகும் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். டெங்குவை பரப்பும் கொசு நன்நீரில் முட்டையிட்டு வளரும் என்பதால், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
கட்டுரையாளர் : டாக்டர் ஆர். பத்மபிரியா B.S.M.S., PGDCP & Diploma in Cosmetology. தலைவர் – பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை. தொடர்புக்கு – thirumoolar@gmail.com
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry