தேசிய அளவில் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது பட்டியல்! சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு 2-வது இடம்!

0
40

நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது பட்டியலில், சேலம் மாவட்டம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தமிழகத்திலுள்ள காவல் நிலையங்கள், தேசியப் பட்டியலில் இடம் பெற்று வருகிறது

தேசிய அளவில் சிறப்பாகச் செயல்படும் காவல் நிலையங்களை அங்கீகரிக்க, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் ஒவ்வோர் ஆண்டும் பல குழுக்கள் அமைக்கப்படுகிறது. அந்தக் குழுக்கள் இந்தியா முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்குச் சென்று காவல் நிலையத்தின் பராமரிப்பு, சுற்றுப்புறச் சூழல், மனுதாரர்களிடம் காவலர்கள் நடந்துகொள்ளும் அணுமுறை, வழக்கு விசாரணைகளில் தண்டனை பெற்றுத் தரும் விவரம், நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்த விவரம், வழக்கு விவரங்களை ஆன்லைனில் அப்டேட் செய்வது ஆகியவற்றை ஆய்வுசெய்கின்றன. மேலும், அந்தக் காவல் நிலையங்களைத் தொடர்ந்து கண்காணித்து, சிறந்த காவல் நிலையத்தைத் தேர்ந்தெடுக்கின்றன.

அதன்படி 2020 ஆண்டுக்காக இந்தியா முழுவதும் உள்ள காவல் நிலையங்களை ஆய்வு செய்ததில், மணிப்பூர் காவல் நிலையம் தேசிய அளவில் சிறந்த காவல் நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை, தேசிய அளவில் இரண்டாவது சிறந்த காவல் நிலையமாக உள்துறை அமைச்சகம் அறிவித்திருகிறது. இதனால் சேலம் காவல்துறையினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் நாட்டின் 10 சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில், கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் இடம் பிடித்தது. அதேபோல கடந்த 2018-ஆம் ஆண்டு தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலையம் 8-ஆவது சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது.

2019-ஆம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களில், தமிழ்நாட்டின் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் 4-ஆவது இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தமிழக காவல்துறையைச் சேர்ந்த காவல் நிலையங்கள், சிறந்த காவல் நிலையங்களில் பட்டியலில் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry