ஜனவரியில் கட்சி துவங்கப்போவதாக ரஜினி அறிவிப்பு! தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜக நிர்வாகி நியமனம்! முதன் முதலாக கணித்து உறுதியாகக் கூறிய ஒரே ஊடகம் ‘வேல்ஸ் மீடியா’!

0
13

வரும் ஜனவரி மாதம் புதிய கட்சி துவங்கப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். டிசம்பர் 31-ந் தேதி கட்சி தொடங்குவதற்கான தேதியை அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்விக்கு டிவிட்டர் பதிவின் மூலம் ரஜினிகாந்த் விடையளித்திருக்கிறார். கடந்த 30-ந் தேதி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், ஜனவரி மாதம் ரஜினி கட்சி ஆரம்பிப்பது உறுதி என்று வேல்ஸ் மீடியா மட்டும் அறுதியிட்டு கூறியிருந்தது.

Also Read: ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவது உறுதி! திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை! குரு பாபாஜி அவதார தினத்தில் ரஜினிகாந்த் முடிவு!

இந்நிலையில், ரஜினி தனது டிவிட்டர் பதிவில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் தமிழக அரசியல் களம் தகிக்கத் தொடங்கியுள்ளது.

பொறுப்பாளர்கள் நியமனம்

இதனைத் தொடர்ந்து சென்னையில் போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “அர்ஜுனமூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராகவும்(பாஜக அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தவர்), தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமித்துள்ளேன். கொடுத்த வாக்கிலிருந்து மாறமாட்டேன். கொரோனாவால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இயலவில்லை. தேர்தலில் வெற்றி பெற்றால் அது மக்கள் வெற்றி, தோல்வி அடைந்தால், அது மக்களின் தோல்வி.

நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றத்துக்கான நாள் வந்துவிட்டது. தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான். அண்ணாத்தே படத்தின் ஷூட்டிங் பாக்கியிருக்கிறது, அதை முடித்துக்கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

ஆன்மிக அரசியலை முன்வைக்கும் ரஜினி, கட்சியின் பெயரை  ஜனவரி மாதம் அறிவிக்க உள்ளார். கொரோனா கட்டுப்பாடு இல்லை என்றால், மாநாடு நடத்தி கட்சியின் பெயரை அறிவிக்க திட்டமிட்டிருக்கிறார். 234 தொகுதிகளிலும் போட்டி என்பதை ஏற்கனவே அறிவித்துள்ள அவர், பூத் கமிட்டிகள் அமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஜனவரி மாதம் கட்சி ஆரம்பித்தாலும், மே மாதம் தேர்தலை எதிர்கொள்வதற்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று மன்ற நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அதிமுகபாஜக கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துவிட்டனர். பாஜகவுடன் கூட்டணி வைக்க இயலாது என அமித் ஷாவிடம் ரஜினி கூறியதாகவும் தெரிகிறது. கட்சி ஆரம்பித்து 3 மாதத்தில் ஆட்சியை பிடிக்க முடியும் என்று நம்பும் ரஜினி, தனது தலைமையில் 3-வது அணி அமைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நிகழ்ந்தால், திமுகவுக்கு அது மிகப்பெரும் பின்னடைவாகவே கருதப்படும். 2017 டிசம்பர் 31-ந் தேதியன்று பேசிய ரஜினி, தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்றும், அரசியல் வெற்றிடம் இருப்பதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry