புதுச்சேரியில் கைகூடாத மூன்றாவது அணி! முதலமைச்சர் நாற்காலிக்கு முட்டி மோதிய 3 பிரபலங்கள்! ரங்கசாமிக்கு சாதகமாக மாறுகிறதா அரசியல் சூழல்?

0
9

புதுச்சேரியில், மூன்று பிரபலங்கள், ஒருசேர முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டதால் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அரசியல் சூழல் என்.ஆர். காங்கிரசுக்கு சாதமாக மாறுவதாகத் தெரிகிறது

2011-ல் தனிக்கட்சி தொடங்கிய ரங்கசாமி, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினார். அப்போது மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இருந்தது. தற்போதைய முதலமைச்சர் நாராயணசாமி மன்மோகன் அரசில் பலம் வாய்ந்த அமைச்சராக இருந்தார். இதைப் பயன்படுத்தி ஆளுநர் கட்டாரியா மூலமாக ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பதாக, நாராயணசாமி மீது ரங்கசாமி குற்றம்சாட்டி வந்தார்.

பின்னர் 2014-ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பாஜக ஆட்சி அமைந்தது. அப்போதும் ரங்கசாமிக்கு சாதகமான சூழல் உருவாகவில்லை. வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க முடியாததால், மக்கள் மத்தியில் ரங்கசாமி ஆட்சி மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. இப்படியே இரண்டு ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், 2016 தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் தனித்துக் களமிறங்க, காங்கிரஸ்திமுக கூட்டணி பலமாக தேர்தலை எதிர்கொண்டது.

என்.ஆர். ஆட்சி மீதான அதிருப்தி ஒருபுறம், வேட்பாளர் தேர்வில் என்.ஆர். காட்டிய சுணக்கம், காங்கிரஸ்திமுக வெற்றி பெற்றால் நமசிவாயம் முதலைச்சர் என்ற உறுதியான பேச்சு போன்றவை, வன்னியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு வாக்குகளையும் அறுவடை செய்ய உதவியது. இதனால் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற, திடீர் திருப்பமாக நாராயணசாமி முதலமைச்சர் பதவியேற்றார்.

அதேசமயம் பாஜக ஆதரவு பெற்ற கிரண்பேடி, துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றார். அன்று முதல் ஆட்சி முடிய சில மாதங்களே இருக்கும் இதுநாள் வரை, மாநில நலனைத் தாண்டி, நாராயணசாமிகிரண்பேடி அதிகார மோதலே பிரதானமாக இருந்து வருகிறது. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் ஆளுநர் தடையாக இருக்கிறார் என நாராயணசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஆனாலும், இந்த ஆட்சி மீது, கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்லாமல், மக்கள் மத்தியிலும் கடுமையான அதிருப்தி நிலவுகிறது.

எதிர்க்கட்சியாக என்.ஆர். காங்கிரஸ் எகிறி அடிக்காத நிலையில், காங்கிரஸ் ஆட்சி மீதும் மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை, வாக்குகளாக அறுவடை செய்யும் முயற்சியாக, மூன்றாவது அணி அமைக்கலாம் என தலைவர்கள் சிலர் முயற்சித்தனர். இரண்டு ஆட்சி மீதும் அதிருப்தியில் இருப்பவர்கள் தங்கள் அணியை ஆதரிப்பார்கள் என உறுதியாக நம்பினார்கள்.

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைவதை மூன்றாவது அணி தடுக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறிவந்தனர். அணியை கட்டமைக்கும் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துவந்த நிலையில், முதலமைச்சர் யார் என்பதில் பிரச்சனை தலைதூக்கியது. மூன்று முக்கிய தலைவர்கள் முதலமைச்சர் பதவிக்கு முட்டி மோதியதால், மூன்றாவது அணி தொடங்காமலேயே முடிவுக்கு வந்துவிடும் போலத் தெரிகிறது. இவர்களிடையேயான இடியாப்பச் சிக்கலுக்கு தீர்வு காண்பது அவ்வளவு எளிதல்ல என்றே தெரிகிறது. தற்போதைய சூழலில் மூன்றாவது அணி அஸ்தமனமாகி வருவதால், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கான வெற்றி வாய்ப்பு அதிகரித்திருப்பதை அறிய முடிகிறது. இதனால் என்.ஆர். காங்கிரஸ் முகாம் மகிழ்ச்சியில் உள்ளது.

இதனிடையே, காங்கிரஸை கழட்டி விட வேண்டும் என்பதில் புதுச்சேரி திமுக உறுதியாக இருக்கிறது. புதுச்சேரியில், திமுக தலைமையில் தனி அணி அமைவதற்கான வாய்ப்பு கணிந்து வருகிறது. இதுபற்றிய விரிவான அலசலை விரைவில் பார்க்கலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry