மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக, மாணவர்கள் அரையாண்டுத் தேர்வுக்கு வந்தாக வேண்டும் என தனியார் பள்ளி நிர்ப்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது. அந்தப் பள்ளி மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
கோவிட்-19 பரவல் காரணமாக, மத்திய அரசு அளித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, புதுச்சேரி மாநிலத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை இரு குழுக்களாக பிரித்து, வாரத்தில் 3 நாட்கள் மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. வருகைப் பதிவேடு இல்லாத நிலையில், தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறுகிறது.
கோவிட் தொற்று, புயல் மழை என இயற்கை மிரட்டி வரும் சூழலில், அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என்றும், மாணவிகள் கட்டாயம் பள்ளிக்கு வந்து தேர்வெழுத வேண்டும் எனவும், புதுச்சேரியில் இயங்கும் தனியார் பள்ளி நிர்ப்பந்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. 10,12-ம் வகுப்பு மாணவிகளுக்கு, முழுப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்தத் தேர்வுக்கான வருகை கணக்கில் கொள்ளப்படும் என பள்ளி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.
கோவிட்-19 ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க முடியாத காரணத்தால், தமிழகத்தில் ஏற்கனவே 40% பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 10% குறைக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்வியாண்டு சுருங்கிவிட்ட நிலையில், முழு பாடத்திட்டத்தின்படியே தேர்வு நடைபெறும் என தனியார் பள்ளி நிர்வாகம் கூறியிருப்பது, மாணவிகளுக்கு மன அழுத்தத்தையே ஏற்படுத்தும். பள்ளி நிர்வாகத்தின் இந்த அடாவடித் தனத்தை எந்தவொரு கட்சிப் பிரமுகரும் கண்டிக்கவில்லை. பள்ளிக்கு எதிராக குரல் கொடுத்தால், தாங்கள் சொல்பவர்களுக்கு அட்மிஷன் கிடைக்காது என்பதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை மீறியும், மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலையிலும், தேர்வு நடத்தியே தீருவோம் என பிடிவாதமாக உள்ள பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, புதுச்சேரி சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கம் சார்பில், அதன் தலைவர் நாராயணசாமி, பொருளாளர் விசிசி நாகராஜன் ஆகியோர் கல்வித்துறை இயக்குநர் மற்றும் இணை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளனர். அரசியல் பிரமுகர்கள் சைலன்ட் மோடில் இருக்க, சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கம் புகார் அளித்திருப்பது பாராட்டுக்குரியது.
இதனிடையே, புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளிக்கும் வரை சென்டாக் கலந்தாய்வு நடத்தக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என, புதுச்சேரி சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்க தலைவர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில், புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீடாக, அரசியல் குறுக்கீடு இல்லாமல் 50% இடங்களை ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. புதுச்சேரி சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கத்தின் வழிகாட்டுதலில், மாணவர்கள் தாக்கல் செய்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேசன், 50% இட ஒதுக்கீடு அளிக்கும் வரை சென்டாக் கலந்தாய்வு நடத்தக்கூடாது என உத்தரவிட்டு, இறுதித் தீர்ப்புக்காக வழக்கை வரும் 9-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry