கிங் மேக்கராகிறார் ஜெகத்ரட்சகன்! புதுச்சேரியில் தனித்துக் களமிறங்கும் திமுக! காங்.கை கழட்டி விடுவதால் மாநில அமைப்பாளர்கள் மகிழ்ச்சி!

0
52

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி, தனித்து தேர்தலை சந்திக்க திமுக முடிவு செய்திருக்கிறது. திமுகவை பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற வைக்கும் பொறுப்பு அரக்கோணம் தொகுதி எம்.பி. ஜெகத்ரட்சகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கூட்டணியில் திமுகவை தக்க வைத்து மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிட வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி பிரயத்தனப்படுகிறார். கூட்டணி தொடர்வதாகக் கூறிவரும் அவர், கருணாநிதி சிலை திறப்பு, கருணாநிதி பெயரில் சாலை, கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம் என, அவரால் முடிந்த அளவுக்கு திமுக தொண்டர்களை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிக்கிறார்.  ஆனால், அவரது மேல்மட்ட அரசியல் தலைகீழாக இருக்கிறது என்பதுதான் திமுக நிர்வாகிகளின் குற்றச்சாட்டு.

திமுகவை நசுக்குகிறாரா நாராயணசாமி?

திமுக தலைதூக்கிவிடக்கூடாது என்பதில் நாராயணசாமி கவனமாகச் செயல்படுவதாகக் கூறும் திமுக முன்னணி நிர்வாகிகள், கூட்டணி ஆட்சி நடந்தாலும், திமுகவுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்கின்றனர். திமுக தயவில்தான் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. எனவே, தெற்கு மாநில அமைப்பாளரும், எம்.எல்..வுமான சிவாவுக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் என திமுகவினர் எதிர்பார்த்தனர். அதேபோல், வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்பி சிவக்குமார், காரைக்கால் பிராந்திய அமைப்பாளர் நாஜிம் ஆகியோருக்கு நியமன எம்.எல்.. அல்லது வாரியத் தலைவர் பதவி கிடைக்கும் எனவும் பேசப்பட்டது.

ஆனால், எங்களுக்கே எதுவும் கிடைக்கவில்லை, எங்கள் நிர்வாகிகளுக்கே பாதுகாப்பு இல்லை, அப்படியிருக்க, திமுகவினர் எப்படி பொறுப்பை எதிர்பார்க்கலாம் என காங்கிரஸ் கட்சியினர் கிண்டலாக கேட்கின்றனர். ஆட்சி மீதான அதிருப்தி நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் தேர்தலில் இதே கூட்டணி நீடித்தால், தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்த மாநில திமுக அமைப்பாளர்கள் மூவரும், காங்கிரஸை கழட்டி விட வேண்டியதன் அவசியத்தை கட்சித் தலைமையிடம் எடுத்துரைத்தனர். குறிப்பாக ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமானவராக அறியப்படும் எஸ்பி சிவக்குமார், கட்சியை ஒடுக்க நாராயணசாமி முயற்சிப்பதை ஸ்டாலினிடம் சற்று உருக்கமாகவே கூறியுள்ளார்.

தனித்துப்போட்டிஜெகத் வசம் பொறுப்பு

இவர்களது கருத்துக்கு திமுக தலைமை செவிசாய்த்துவிட்டதாகவே தெரிகிறது. புதுச்சேரி மாநிலத்தில், தனித்தோ அல்லது தங்களது தலைமையில் கூட்டணி அமைத்தோ திமுக வரும் தேர்தலை சந்திக்க உள்ளது. திமுகவை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தான் ஒரு கிங் மேக்கர் என்பதை நிரூபிக்க வேண்டிய முனைப்பில், ஜெகத்ரட்சகனும் தேர்தல் வேலைகளை துவங்கிவிட்டாராம்.

புதுச்சேரிஜெகத் என்ன தொடர்பு?

புதுச்சேரியில் உள்ள பெரும்பான்மையான வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்தான் ஜெகத்ரட்சகன். புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதியான வழுதாவூரை பூர்வீகமாக கொண்டவர். பெரும் தொழிலதிபரான இவர், 2015-ல்,  என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவுடன், புதுச்சேரியில் இருந்து ராஜ்யசபாவுக்கு செல்ல அக்கட்சி எம்.எல்..க்கள் மூலம் முயற்சித்ததாகக் கூறப்பட்டது. புதுச்சேரியின் அரசியல் கள நிலவரத்தை மிக நன்றாக அறிந்தவர். எனவேதான், புதுச்சேரி வன்னியர்கள் மத்தியில் பெரும் பாசமும், ஆதரவும் கொண்ட ஜெகத்ரட்சகனிடம் தேர்தல் பணியை திமுக தலைமை ஒப்படைத்திருக்கிறது. கொடுக்க வேண்டியதை கொடுத்து, பெற வேண்டியதை பிசிறில்லாமல் பெறுவதில் ஜெகத்ரட்சகன் கெட்டிக்காரர் என திமுகவினர் கூறுகின்றனர்.

கட்சியினரை சமாதானப்படுத்த காங். முயற்சி!

திமுக தனி ஆவர்த்தனம் செய்யப்போவதை உணர்ந்த காங்கிரஸ் கட்சியும் தேர்தல் வேலையை தொடங்கிவிட்டது. நியமன எம்.எல்.., வாரியத் தலைவர், கோயில் அறங்காவலர் பதவி என எதையும் கண்ணில் காட்டாமல் போக்குக் காட்டி வந்த நாராயணசாமி, கட்சி நிர்வாகிகளை திருப்திபடுத்தும் முயற்சியும் இறங்கியுள்ளார். புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 30 தொகுதிகளையும், கட்சி ரீதியாக 2 ஆகப்பிரித்து, 60 வட்டார காங்கிரஸ் தலைவர்களை நியமிக்கும் பணியை காங்கிரஸ் துவங்கி இருக்கிறது. இதன் மூலம் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்துவடன், அடிமட்ட அளவில் கட்சியை பலப்படுத்தலாம் என காங்கிரஸ் கருதுகிறது. தேர்தலை தனித்து எதிர்கொள்வதற்கான ஆயத்தப்பணியாகவே இது தெரிகிறது.

திமுக தனித்துப் போட்டியோ அல்லது திமுக தலைமையில் கூட்டணியோ, எதுவானாலும் 3அமைப்பாளர்களின் வற்புறுத்தலுக்கு தலைமை பச்சைக்கொடி காட்டி, தனித்து களமிறங்க சம்மதித்திருப்பது திமுக நிர்வாகிகள், தொண்டர்களை உற்சாகமடையச் செய்திருக்கிறது. அதேநேரம் வன்னியர் ஆன ஜெகத்ரட்சகன் புதுச்சேரி அரசியலில் கால் பதிப்பது, அரசியல் சூட்டை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.


Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry