மகிந்த ராஜபக்ச ராஜினாமா! எம்.பி. அடித்துக்கொலை! ராஜபக்ச ஆதரவாளர்கள் வெறியாட்டம்!

0
334

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணாத அரசு பதவி விலகக் கோரி ஒரு மாத காலமாக முகாமிட்டு போராட்டம் நடத்துவோர் மீது அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் திடீரென தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

போராட்டம் இடைவிடாமல் நடைபெறுவதால் ராஜபக்சேக்கள் பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகப்போவதாக இன்று காலையில் மகிந்த ராஜபக்சே சூசகமாக தெரிவித்திருந்தார். ராஜபக்சே ஆதரவாளர்கள் அவர் பதவி விலக கூடாது என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

ஒருகட்டத்தில் ராஜபக்சேக்களின் ஆதரவாளர்கள் முதலில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் கொழும்பு காலி முகத்திடல் நோக்கிசி சென்ற அவர்கள், போராட்டகாரர்களின் கூடாரங்களுக்கு தீ வைத்து தாக்குதல் நடத்தினர். ராஜபக்சே ஆதரவு கும்பலின் வெறியாட்டம் தொடர்பான தகவல் கிடைத்த உடன் அரசியல் கட்சித் தலைவர்கள் காலிமுகத் திடலுக்கு விரைந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸநாயக்க உள்ளிட்டோர் காலிமுகத் திடலுக்கு சென்றனர். ஆனால் அரசியல் கட்சித் தலைவர்களை காலிமுகத் திடலுக்குள் அனுமதிக்காமல் ராஜபக்சே ஆதரவு கும்பல் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இதுவரை சுமார் 100 பேர் காயமைடந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டம் கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், விடுமுறையில் உள்ள காவலர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. ஆளும் கட்சி எம்.பியும் முன்னாள் அமைச்சருமான அமரகீர்த்தி அடித்துக்கொல்லப்பட்டுள்ளார். மேலும், மோராட்டுவா பகுதி மேயர் சமன் லால் பெர்னாட்டோ வீட்டுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கொழும்பு தெற்கு, வடக்கு, மத்திய போலீஸ் பிரிவுகளில் முதலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் நாடு தழுவிய போலீஸ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து ராஜபக்சேக்களின் ஆதரவாளர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடிக்க முயற்சித்தனர். ஆனாலும் ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கொழும்பில் பதற்றம் நீடிக்கிறது.

தொடர் போராட்டம், வன்முறை மற்றும் அரசியல் நெருக்கடிகளை அடுத்து, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது விலகல் கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அமைச்சரவை கலைக்கப்பட்டு அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை ஆட்சி அமைக்க வருமாறு கோத்தபய அழைப்பு விடுப்பார் எனத் தெரிகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry