தமிழ் விக்கிபீடியாவுக்கு மாற்று! எழுத்தாளர் ஜெயமோகன் முன்னெடுப்பில் உருவானது ‘தமிழ் விக்கி’!

0
264

எழுத்தாளர் ஜெயமோகன், அவரது நண்பர்களோடு இணைந்து தமிழில் விக்கிபீடியாவிற்கு இணையான ஒரு தமிழ் இணையக் கலைக் களஞ்சியமாக `தமிழ் விக்கி’ வலைதளத்தை ஆரம்பித்திருக்கிறார். இதன் தொடக்க விழா அமெரிக்காவில் மே 7 அன்று நடைபெற்றது. இந்த `தமிழ் விக்கி’, கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு போன்றவை குறித்த செழுமையான விஷயங்களை முன்னிறுத்த இருக்கிறது.

தமிழ் விக்கியின் ஆசிரியராக ஆய்வாளர் அ.கா.பெருமாள் பொறுப்பேற்றுள்ளார். எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், சோ.தர்மன், சுனில் கிருஷ்ணன், பேராசிரியர் மௌனகுரு, ஜெயமோகன் ஆகியோரும் ஆசிரியர் குழுவில் உள்ளனர்.

அ.கா. பெருமாள்

தமிழ் விக்கி குறித்து கருத்து தெரிவித்துள்ள எழுத்தாளர் ஜெயமோகன், கலைக்களஞ்சியம் என்பது ஒரு மொழியின் அறிவுத்தொகுதி. அதுவரை நிகழந்த அறிவுச் செயல்பாட்டை தொகுத்துக்கொண்டு மேற்கொண்டு சிந்திப்பதற்கான வழி. ஆகவே ஒரு கலைக்களஞ்சியத்தில் அதுவரை சேகரிக்கப்பட்ட எல்லா செய்திகளும் இருக்கவேண்டும். அப்போதுதான் அதனால் பயன். அரைகுறைச் செய்திகள் இருக்கக்கூடாது.

`தமிழ் விக்கி’ என்பது இணையதளத்தின் பெயர். விக்கி என்னும் சொல் எதைக்குறிக்கிறது என்றால், இது எழுதி முடிக்கப்பட்டுவிட்ட கலைக்களஞ்சியம் அல்ல என்பதைத்தான். இது வாசகர்களின் பங்களிப்புடன், தொடர்ந்து விரியக்கூடிய ஒன்று. விக்கிப்பீடியா போலவே இதற்கு வாசகர் எவரும் கட்டுரைகள் எழுதி அனுப்பலாம். திருத்தங்கள் அனுப்பலாம். ஆனால் துறைசார் நிபுணர்களின் ஒரு குழு ஆராய்ந்த பின்னரே அவை பதிவுசெய்யப்படும்.

இப்போதைக்கு இலக்கியம், பண்பாடு சார்ந்த கலைக்களஞ்சியமாகவே இது இருக்கும். ஓராண்டுக்குப் பின்னர் வரலாறும் சேர்த்துக்கொள்ளலாம் என நினைக்கிறோம். இந்த இணையக் கலைக்களஞ்சியம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவரும். எங்களுடைய கொள்கையின்படி இது அனைவருக்குமான ஒரு பொதுத்தளம். மாறுபட்ட கருத்து கொண்டவர்கள் மறுப்பவர்களுக்கும் இதற்குள் இடம் உண்டு. இதை மறுப்பவர்கள் பற்றியும் விரிவான ஆவணப்பதிவுகள் இதில் இடம்பெறும்.” என்று ஜெயமோகன் கூறியுள்ளார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் முதல்பதிவாக பெரியசாமித் தூரன் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ் விக்கி முகப்புப் பக்கம்: https://bit.ly/3kQaTo7

தமிழ் விக்கியின் படைப்புத்துறை ஆசிரியர்களில் ஒருவரான சுனில் கிருஷ்ணன் இதுகுறித்துப் பேசும்போது, “தமிழில் தற்போதுள்ள தகவல் களஞ்சிய வலைத்தளமான விக்கிப்பீடியாவை எடுத்துக் கொண்டால், அதனுடைய ஜனநாயகம் தான் அதன் பலம். ஆனால் அதே ஜனநாயகம் அதனுடைய பலவீனமாகவும் ஆகிறது. யாரையாவது அவதூறு செய்ய வேண்டுமென்றால், உடனே நாம் வலைத்தளத்திற்குள் சென்று அவரைப் பற்றி உள்ளதை மாற்றியமைப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் எளிதாக நடக்கும்.

அதே சமயம் தகவல்களிலும் சரி, யார் வேண்டுமானால் எதை வேண்டுமானாலும் மாற்றியமைக்கலாம். இதனால் தகவல்களிலும் நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கிறது. இப்போது தமிழ் விக்கியுமே கிட்டத்தட்ட விக்கிபீடியா போல் தான், ஆனால் தகவல்களை பரிசோதித்து, உறுதிபடுத்தும் வேலையைதான் இங்கு ஆசிரியர்கள் செய்கிறார்கள்” என்றவர், அப்போது இந்தத் தமிழ் விக்கி தளமானது ஒரு அதிகாரத்திற்குட்பட்ட தளமாக இருக்காது என்றார். இங்கு எல்லோருமே பயனர்கள்தான். அவர்கள் அனுப்புவதைச் சரிபார்க்க மட்டுமே ஒரு ஆசிரியர் குழு இருக்குமே தவிர, அவர்களை எழுதவிடாமல் யாரும் தடுக்கப்போவதில்லை” என்று கூறினார்.

மேலும், “இதை விக்கிப்பீடியாவிற்கு மாற்று என்று சொல்ல முடியாது. ஒன்றுக்கொன்று எதிர் என்றும் சொல்வதிற்கில்லை. ஒரு சில முக்கியமான கவிஞர்களுக்கு இன்றளவும் தமிழில் ஒரு விக்கி பக்கம் இல்லை. இதுபோன்று ஒரு சில இடைவெளிகள் உள்ளன. அந்த இடைவெளிகளைத் தமிழ் விக்கி நிரப்பும். விக்கிப்பீடியா தான் தமிழ் விக்கிக்கான சாத்தியத்தைத் திறந்துவிட்டது. ஒரு புது விஷயம் ஆரம்பித்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஆனால் நாம் சிறப்பாக செயல்பட்டால், அது படிப்படியாக நாளடைவில் மறைந்துவிடும்” என்றும் சுனில் கிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry