துன்பப்படுத்தும் வகையில் மூத்த அமைச்சர்கள் நடந்து கொண்டால்…! திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

0
79

திமுக பொதுக் குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றது. இதில் மீண்டும் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், “உங்களில் ஒருவனான என்னை திமுக தலைவராக தேர்வு செய்த தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது அண்ணா அமர்ந்த இடம். கருணாநிதி கோலோச்சிய இடம். நான் அண்ணாவும் அல்ல, கருணாநிதியும் அல்ல. தொண்டர்களால் தான் நான் தலைவராக இங்கு நிற்கிறேன்.
நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் தலைவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். அன்று முதல் நமக்கு ஏறுமுகம் தான். அன்று முதல் வெற்றி செய்தியை தவிர்த்து ஏதுவும் காதுகளுக்கு கேட்டகவில்லை. 2வது முறையும் உங்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். இது நீங்கள் எனக்கு இட்டுள்ள கட்டளை.

Also Read : திருநீறு நீக்கப்பட்ட வள்ளலார் படம்! வரலாற்றை திருத்தும் முயற்சி? திமுகவுக்கு எதிராக கொந்தளிக்கும் ஆன்மிகவாதிகள்!

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முறைப்படி தேர்தலை நடத்தி வருகிறோம். பொறுப்புகள் தகுதியானவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. திமுக பழுத்த மரமாக இருப்பதால் தானே கல் எறிகிறார்கள். திமுக பழுத்த மரம் மட்டுமல்ல கல் கோட்டை. வீசப்பட்ட கல்லை வைத்து கோட்டை கட்டுபவர்கள் திமுகவினர்.

புதிய நிர்வாகிகள் பலர் பொறுப்புக்கு வந்துள்ளார்கள். பழைய நிர்வாகிகள் பலர் இருப்பீர்கள். கடமையை செய்ய காலம் ஒரு கொடையாக இந்த பொறுப்பை உங்களுக்கு வழங்கி உள்ளது. பொறுப்பும், கடமையும் மிக மிக பெரியது. அதை மறந்து விடாதீர்கள். பொறுப்புகளை நீங்கள் பயன்படுத்துவதை பொறுத்துதான் உங்களின் பொறுப்புகள் தொடரும். புதிய நிர்வாகிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள். உங்கள் அனைவரின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.

Also Read : பரந்தூரில் விமான நிலையம்! பாதிப்புகளை பட்டியலிடும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு!

தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்துங்கள். கூட்டங்களை நடத்துவதுதான் கழகத்தை வலிமைப்படுத்தும். கூட்டத்திற்கான மினிட் புத்தகங்களை நானே உங்களை தொடர்பு கொண்டு கொண்டு வரச் சொல்லிப் பார்ப்பேன். அணிகள் சுதந்திரமாக செயல்பட மாவட்ட கழக நிர்வாகிகள் ஊக்குவிக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து கழகத்தை வலிமைப்படுத்த வேண்டும். தனி மனிதரை விட கழகம் தான் பெரியது. அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது. பெற்ற வெற்றியை நிரந்தரமாக தக்க வைக்க வேண்டும்.

அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னைதான் குறை சொல்வார்கள். பல் முனை தாக்குதல்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவன் நான். ஒரு பக்கம் திமுக தலைவர் மறு பக்கம் தமிழ்நாடு முதல்வர். மத்தளத்திற்கு இரண்டும் பக்கம் அடி என்பது போல் உள்ளது எனது நிலைமை. இத்தகைய சூழலில் உள்ள என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்தவர்கள் அமைச்சர்கள் நடந்து கொண்டால் நான் யாரிடம் கூறுவது.

உங்களின் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. நாம் பயன்படுத்தும் சொல் மிக மிக முக்கியமானது. மிக மிக எச்சரிக்கையாக பேசுங்கள். நீங்கள் சொன்னத்தை வெட்டி, ஓட்டி பரப்புவார்கள். இது தான் எதிரிகளின் நோக்கம். இது முக்கியமான கால கட்டம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டு உள்ளது. யாரும் மெத்தனமாக இருக்க கூடாது. 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு இது தான் அடித்தளம்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எதையும் செய்யும் பாஜக. எந்த கீழ்தரமான அரசியலுக்கும் போவாங்க. மதத்தை, ஆன்மிக உணர்வை தூண்டி அரசியல் செய்ய பார்க்கிறது பாஜக. அரசியலையும், ஆன்மிகத்தையும் எப்போதும் இணைக்காதவர்கள் தமிழக மக்கள் என்பதால்தான் தமிழ்நாட்டில் மூச்சு திணறுகிறது பாஜக.

திமுகவை எதிர்ப்பதை விட அதிமுகவிற்கு எந்த காலத்திலும் வேறு கொள்கை இல்லை. அதனால்தான் இன்று உணர்ச்சி இழந்து கிடக்கிறது. சாதனைகளை எடுத்துச் சொல்ல முடியாத பாஜகவும், சரிந்தும் சிதைந்தும் கிடக்கும் அதிமுகவும் தேர்தல் களத்தில் பொய் பரப்புகளை கட்டவிழ்த்து விடுவார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணியை இப்போதே துவங்க வேண்டும். அடுத்த இரண்டு மாதத்திற்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டும்.” இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry