தெலுங்கு வருடப்பிறப்பன்று திறக்கப்படுகிறது டெல்லி திமுக அலுவலகம்! மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்!

0
193

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக இன்று இரவு டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் நாளை சந்திக்க இருக்கிறார்.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமையகமான அண்ணா – கலைஞர் அறிவாலய கட்டடத்தின் திறப்பு விழா வரும் 2-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்படுகிறார். நள்ளிரவு 12 மணியளவில் டெல்லி சென்றடையும் அவர், நாளை பிற்பகல் ஒரு மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்த உள்ளார்.

File Image

மேலும், தமிழகத்தின் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து மனு அளிக்க உள்ளார். அப்போது, திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்கவும் பிரதமருக்கு அழைப்பு விடுக்க உள்ளார். அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை நாளை மறுதினம் சந்தித்து பேசும் மு.க.ஸ்டாலின், அண்ணா – கலைஞர் அறிவாலய அலுவலக கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுவிக்க உள்ளார். பின்னர் 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு டெல்லி தீன தயாள் உபாத்யாயா சாலையில் கட்டப்பட்டுள்ள, அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை, கட்சிக் கொடி ஏற்றி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். விழாவை முடித்துக் கொண்டு, ஏப்ரல் 2ஆம் தேதி இரவு டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்.

முன்னதாக, குறைந்தது ஏழு எம்.பி.,க்கள் உள்ள கட்சிகளுக்கு, புது டெல்லியில் அலுவலகம் கட்ட இடம் தருவதென மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, பா.ஜ.க. தேசிய தலைமை அலுவலகம் அமைந்துள்ள தீன்தயாள் உபாத்தியாயா மார்க் சாலையில், தி.மு.க.வுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மேற்பார்வையில், மூன்று மாடிகளுடனும், நவீன வசதிகளுடனும் டெல்லி தி.மு.க. அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

‘அண்ணா – கலைஞர் அறிவாலயம்’ என இந்த அலுவலகத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 2ம் தேதி தெலுங்கு புத்தாண்டான யுகாதி நாளில், முதலமைச்சர் ஸ்டாலின் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தமிழ் இன உணர்வு பேசும் கட்சியின் அலுவலகத்தை திறக்க, யுகாதி நாளை தேர்வு செய்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry