வாசிப்பை நேசித்த எவரையும் உலகம் நிராகரித்ததில்லை! நூலகர் தினவிழாவில் நெகிழ்ச்சி!

0
76

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் திருக்கோவலூர் முழுநேர கிளை நூலகத்தில் இன்று நூலகர் தின விழா நடைபெற்றது.

விழாவில் பேசிய திருக்கோவலூர் வாசகர் வட்டத் தலைவர் சிங்கார உதியன், “சிறு வயதிலிருந்தே கல்விப் பாடங்களோடு, பொதுநூல்களையும், நாளிதழ்களையும் வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசிக்க வாசிக்க நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

வாசிக்கும் பழக்கத்துடன் சிறு வயதிலேயே சிறுகச் சிறுக சேமிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இளமையிலிருந்தே சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் குடும்பத்தை செல்வ நிலைக்கு உயர்த்திக் கொள்ளமுடியும்.

வாசிப்பை நேசித்த எவரையும் இந்த உலகம் நிராகரித்ததில்லை. தமிழகத்தில் உள்ள சீர்காழியில் பிறந்த எஸ்.ஆர்.ரங்கநாதனும் அப்படித்தான். அவர் வாசிப்பை நேசித்ததினால்தான் நூல்களை நேசிக்க முடிந்தது. அதனால்தான் நூல்களை பாதுகாக்கும் நூலகத்துக்கென இந்திய நூலக சட்டம் இயற்றினார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில்தான் இன்று நாம் எல்லோரும் அவரை ‘நூலகத் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன்’ என போற்றுவதுடன், அவரது பிறந்த நாளை நூலகர் தினமாகக் கொண்டாடுகிறோம்” இவ்வாறு அவர் பேசினார்.

Also Read : போதை கும்பலுடன் கைகோர்த்தால் கடும் நடவடிக்கை! அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!

தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் அருட்கவிஞர் அருள்நாதன் தங்கராசு, கலை இலக்கியப் பெருமன்ற மாவட்ட தலைவர் மு.கலியபெருமாள், கணிதமேதை ராமானுஜம் கணித மன்றம் அமைப்பாளர் ஜி.ஜானகிராமன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார். நூலகர் மு.சாந்தி நன்றி கூறினார்.

நல்நூலகர் மு. அன்பழகன் கெளரவிக்கப்படும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்

திருக்கோவிலூர் வட்ட நூலகர்கள், பணியாளர்களுக்கு, பணி நிறைவு பெற்ற ராணுவ வீரரும் கொடையாளருமான கு.கல்யாணகுமார், பயனாடை அணிவித்து இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார்.

தமிழ் கவிஞர் பேரவை தலைவர் இராம.சுதாகரன், அபூர்வா அகாடமி நிறுவுநர் என்.கே.முருகன், வாசகர்கள் காந்திராஜ், சீனிவாசன் உள்பட மேலும் பலர் விழாவில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நூலகர்கள் வி.தியாகராஜன், வே.ஆனந்தி, சு.சம்பத், ச.தேவி, ஆ.வனிதா, சந்தியா ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry