குப்பையில் இருந்து மின்சாரம்! தமிழக அரசின் சூழல் விரோதத் திட்டம்! நச்சு வாயு பாதிக்குமென எச்சரிக்கை!

0
184

தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் விரைவில் குப்பைகளிலில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் துவங்கப்படும் என்று அண்மையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு இரண்டு தனியார் நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்பு நிதியின் கீழ் சென்னை மாநகராட்சி வழங்கிய நடமாடும் குப்பை எரிவுலையின் செயல்பாட்டையும் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். இந்தக் குப்பை எரிவுலைகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய தொழில்நுட்பமாகும்.

Photo Credit – Poovulagin Nanbargal

குப்பைகளை மேலாண்மை செய்வதில் பெரும் அபத்தமான வழிமுறைகளில் ஒன்றுதான் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம். நாம் குப்பைகளைத் தீவைத்துத் திறந்தவெளியில் எரிப்பதைப் பார்த்திருப்போம். இதையே கட்டுப்படுத்தப்பட்ட மூடிய அமைப்புகளுக்குள் எரிப்பதை ‘குப்பை எரிவுலைகள்’ என்கிறார்கள்.

சாம்பலாக்கிகள் அல்லது குப்பை எரிவுலைகள் என்று சொல்லப்படும் இந்த அமைப்புகளில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டோ அல்லது மொத்தமாகவோ இடப்பட்டு உயர் வெப்பநிலையில் சாம்பலாக்கப்படுகின்றன. இவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைப் பொறுத்து சில வேறுபாடுகளோடு பைராலிசிஸ், பிளாஸ்மா, கேசிபிகேஷன் போன்ற கவர்ச்சியான பெயர்களில் இவை அழைக்கப்படுகின்றன.

Incineration எனப்படும் சாம்பலாக்கிகளைவிட உயர் வெப்பநிலையில் குறைந்த ஆக்சிஜன் சூழலில் குப்பைகள் எரிக்கப்படுகின்றன. எனினும் சூழல் பார்வையில் இவை சாம்பலாக்கிகளிலிருந்து பெரிதாய் வேறுபட்டவையல்ல. வளர்ந்த நாடுகளில் ஏற்பட்ட சூழல் விழிப்புணர்வால் இத்தகைய தொழில்நுட்பங்கள் வீழ்ச்சியைச் சந்தித்துவரும் சூழலில், இவை வளரும் நாடுகளைக் குறிவைத்து வியாபாரமாக்கப்பட்டு வருகிறது.

நெகிழிக் குப்பைகளை சிமெண்ட் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரியோடு சேர்த்து எரிப்பதும்கூட இதுமாதிரியான ஒரு வழிமுறைதான். மேலோட்டமாக இது குப்பைகளை முழுமையாக அழித்துவிட்டது போலத் தோன்றினாலும், உண்மையில் நெகிழியின் சிதைவுறாத நச்சு வேதி மாசுக்கள் ஒருபுறம் சிமெண்டோடு கலந்து பின்னர் சூழலை மாசுபடுத்துகின்றன என்றால், இன்னொருபுறம் சிமெண்ட் ஆலையின் புகைபோக்கிகள் வழியாக வெளியேறும் புகை நேரடியாக சுற்றுப்புறத்து மக்களைப் பாதிக்கிறது.

பல தசாப்தங்களுக்கு முன்பே காலாவதியாகிப்போன இந்த தொழில்நுட்பத்தை, ஏதோ நவீன கண்டுபிடிப்பு போல பெருநிறுவனங்கள் இந்தியாவில் முன்மொழிகின்றன. ஒன்றிய அரசும் மானியங்களை இதற்கு அள்ளி வழங்குகிறது. நெகிழியில் கனவுலோகங்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள், குறிப்பிட்ட பண்புகளுக்காகச் சேர்க்கப்படுகின்றன என்பதும், அவற்றில் பல எரித்தாலும் புதைத்தாலும் சிதைவுறுவதில்லை எனபதும் குறிப்பிடத்தக்கது.

பயோமைனிங் முறையில் பெறப்படும் மறுசுழற்சி செய்ய இயலாத நெகிழிக் கழிவுகளும், பலநேரங்களில் அழுத்தப்பட்டு மாத்திரைகள்போல ஆக்கப்பட்டு (RDF – Refused Derived fuel) சாம்பலாக்கிகள் அல்லது சிமெண்டு உற்பத்தி நிலையங்களில் எரிப்பதற்காக அனுப்பப்படுகின்றன.

சாம்பலாக்கிகள் ஏன் ஒழிக்கப்படவேண்டியவை?

சாம்பலாக்கிகள் குப்பைகளை ஒழிப்பதில்லை. ஆற்றலை எப்படி அழிக்கவோ ஒழிக்கவோ முடியாதோ – எப்படி அதை இன்னொரு வடிவத்துக்கு மட்டுமே மாற்ற முடியுமோ அதே போன்று நச்சுக் குப்பைகளை அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது. மாறாக அவற்றை இன்னொரு வடிவத்துக்கு மாற்ற மட்டுமே முடியும். குறிப்பாக இந்தக் குப்பை எரிவுலைகள் குப்பைகளைச் சாம்பலாகவும் நச்சு வாயுக்களாகவும் மாற்றுகின்றன. இதில் வெளிப்பார்வைக்கு பெரிய அனுகூலமாகத் தெரிவது என்னெவென்றால் குப்பைகளின் கொள்ளளவு வெகுவாகக் குறைக்கப்படுகின்றது என்பது மட்டும்தான்.

சாம்பலாக்கிகள் டயாக்சின், பியூரான்கள் உட்பட பல நச்சு வாயுக்களை உமிழ்கின்றன. சாம்பலாக்கிகளின் வாயுக்களை ஓரளவுக்கு வடிகட்டித் தூய்மைப்படுத்தும் தொழில்நுட்பம் பெயரளவில் இருந்தாலும் அது மிக அதிக செலவு பிடிக்கக் கூடியது என்பதோடு இந்தியா போன்ற நாடுகளில் இவை மீறப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக சென்னை ஐஐடியின் சுற்றுச்சூழல் துறைப் பேராசிரியர் இந்துமதி தெரிவித்துள்ளார். இதன் வடிகட்டிகள் எவ்வளவு திறன் வாய்ந்ததாக இருக்கின்றனவோ அவ்வளவு செறிவானதாக அதன் திடக்கழிவுகள் மாறுகின்றன. வடிகட்டிகளின் திறனைப் பொறுத்து வெளியேற்றப்படும் வாயுக்களிலோ அல்லது எஞ்சும் கழிவிலோ நச்சுப்பொருட்கள் சேர்கின்றன. முழுமையாக வடிகட்டப்படாத நிலையில் இவை நேரடியாகக் காற்றின் மூலம் நீர்நிலைகள் மூலமாகவோ அல்லது நேரடியாக உணவில் படிந்தோ பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சாம்பலாக்கிகள் கொடுக்கும் மின்சாரம் மிக அதிக சூழல் மாசை உருவாக்குகிறது.
இன்று ‘குப்பையிலிருந்து மின்சாரம்’ (Energy from waste) என்பது ஏதோ ஒரு ஒளிமயமான உலகுக்கு இட்டுச்செல்லும் தொழில்நுட்பம் போல எங்கும் உச்சரிக்கப்படுகிறது. சாம்பலாக்கிகளிலிருந்து உருவாக்கப்படும் மின்சாரம் பசுமை மின்சாரம் அல்ல. நிலக்கரியைவிடப் பலமடங்கு கரிவளித்தடம் கொண்ட  (carbon foot print) இந்த உற்பத்திச் செயல்பாடு சூழலுக்கு எவ்விதத்திலும் உகந்ததல்ல. தூய்மையான மின்சாரத்தை உருவாக்க இதைவிடச் சிறந்த பல மாற்றுகள் உள்ளன. இங்கு கழிவுகளை எரிக்கவே மின்சாரம் தேவைப்படுகிறது என்பதும் சில நேரங்களில் அவை பயன்படுத்தும் மின்சாரத்தைவிட உற்பத்தி செய்யும் மின்சாரம் குறைவாகவே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல நாடுகள் குறிப்பாக மேலைநாடுகள் தம்முடைய நெகிழிக் குப்பையை எரிக்கும் சாம்பலாக்கிகளை மூடத் தொடங்கிவிட்டன. இந்தியாவில் இதுவரையிலும் நிறுவப்பட்ட எந்த சாம்பலாக்கியும் தொழில்நுட்ப ரீதியிலோ, இல்லை சூழல் பார்வையிலோ சிறப்பாகச் செயல்படவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய பாகிஸ்தானே சமீபத்தில் தன்னுடைய 13 பைராலிசிஸ் நிலையங்களை இடித்துத் தள்ளியிருக்கிறது. தமிழக அரசு இத்தகைய சூழல் விரோதத் திட்டங்களை தொடக்க நிலையிலேயே கைவிட்டு, கழிவில்லா நிலை நோக்கிய சுழற்சிப் பொருளாதாரத்தை முன்னெடுத்து கழிவு மேலாண்மையில் இந்தியாவுக்கே  வழிகாட்டியாய்த் திகழ வேண்டும்.

நன்றி :– பூவுலகின் நண்பர்கள்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry