திராவிட சித்தாந்தம் போதிப்பது…? பின்பற்ற வேண்டியது தேசியத்தையா? திராவிடத்தையா?

0
280

நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற பாடுபட்ட அனைவருமே, ஒட்டு மொத்த தேசத்திற்கும் சேர்த்து தான், விடுதலைக்காகப் போராடினார்கள். எந்த சூழ்நிலையிலும், ஒரு மாநிலத்திற்கான விடுதலைக்கு மட்டும், அவர்கள் போராடவில்லை.

திராவிட சித்தாந்தவாதி என போற்றப்படும் ஈ.வெ. ராமசாமி, நமது நாடு விடுதலை அடைந்த 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாளை, “கறுப்பு தினம்” என, தனது பத்திரிகையின் அட்டைப் படத்தில், வெளியிட்டார். நமது நாட்டில் பெரும்பான்மையான மக்களால் விரும்பி வணங்கப்படும் ஸ்ரீ இராமபிரானை இழிவு படுத்தும் வகையில், காலணியால் அடித்தது, விநாயகர் சிலையை உடைத்தது என, இந்து மதத்தவர்களின் மனதை புண்படுத்துவதை மட்டுமே திராவிடர் கழகத்தினர் குறிக்கோளாக வைத்து இருந்தனர்.

தற்போதும் கூட, மற்ற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்து மக்களால் விரும்பிக் கொண்டாடப்படும் தீபாவளிக்கோ அல்லது விநாயகர் சதுர்த்திக்கோ வாழ்த்துச் சொல்வது இல்லை.

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்த செய்தி, ஸ்டாலின் அவர்களின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது. உடனே அந்த வாழ்த்துச் செய்தி திரும்பப் பெறப்பட்டது.

தனது அட்மின் செய்த தவறு எனவும், தனது தரப்பில் இருந்து விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கப்படவில்லை எனவும் ஸ்டாலின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்து மக்களுக்கு வாழ்த்துச் செய்தியைக் கூட தெரிவிக்க விரும்பாத சித்தாந்தமே, திராவிட சித்தாந்தம் எனப் பலரும் அப்போது விமர்சனம் செய்தனர்.

பட்டியலின மக்களின் பாதுகாவலர் என சொல்லிக் கொள்பவர்கள் ஆளும் தமிழகத்தில், இதுவரை திராவிட ஆட்சியில், ஒரு பட்டியல் இனத்தவர் கூட தமிழக முதலமைச்சர் ஆகவில்லை. திராவிடக் குடும்பம் என அழைக்கப் படும் கன்னடம் மொழி பேசும் கர்நாடகவைச் சேர்ந்தவர்களோ அல்லது தெலுங்கு மொழிப் பேசும் ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்தவர்களோ அல்லது மலையாளம் மொழி பேசும் கேரளாவைச் சேர்ந்தவர்களோ, தங்களை “திராவிடர்கள்” என அடையாளப் படுத்திக் கொள்வது இல்லை. தமிழகத்தில் மட்டுமே சிலர், தங்களை “திராவிடர்” என அடையாளப் படுத்திக் கொள்கின்றனர்.

கேரளாவில் உள்ள காலடியில் பிறந்த ஸ்ரீ ஆதிசங்கரர் காஷ்மீர் வரை நடந்தே சென்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீ ராமானுஜர், ரிஷிகேஷ் வரை நடந்தே சென்றுள்ளார். பல பகுதிகளைத் தாண்டி, எல்லைகளைத் தாண்டி, தெற்கில் இருந்து வடக்கிற்கு ஒருவர் செல்கிறார் என்றால், அவருக்கு எந்த அளவு, நமது தேசத்தின் மீது பற்று இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் பிறந்த குமரகுருபரர், காசி வரை சென்று, அங்கே ஓரு மடத்தை நிறுவி உள்ளார். காரைக்கால் அம்மையார், இங்கு இருந்து கிளம்பி, கைலாசம் வரை சென்று, சிவனை தரிசித்தார்.
பகவான் ஸ்ரீ விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்கள் “தசாவதாரம்” என அழைக்கப்படுகிறது. அதில் முதன்மையான அவதாரம், “மச்சாவதாரம்”, அது நிகழ்ந்த இடம் மதுரை. அங்கு இருந்த “கிருதமால் நதி” என்ற இடத்தில் இருந்தே மச்சாவதாரம் உருவானதாக, விஷ்ணு புராணம் கூறுகின்றது.

நமது நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும், இந்திய மக்கள் ஸ்ரீராமரை தெய்வமாக வழிபடுகின்றனர். எந்த மாநிலங்களுக்கு சென்றாலும், ஏதாவதொரு இடம், ஸ்ரீ ராமபிரானின் வாழ்க்கை சம்பவத்தோடு தொடர்பு உடையதாக இருக்கும்.

கங்கை நதியையும், காசி விஸ்வநாதரையும் தரிசனம் செய்ய, தமிழகத்தில் இருந்து நிறைய பக்தர்கள், வட மாநிலத்திற்கு செல்கிறார்கள். அது போலவே, தமிழ் நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ராமேஸ்வரத்திற்கு, மற்ற எல்லா மாநிலங்களில் இருந்தும், நிறைய பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்து வருகின்றார்கள். “ராம்” என்ற பெயர், நமது நாட்டில் எந்த ஓரு பகுதிக்குச் சென்றாலும், யாருக்கேனும் அந்தப் பெயர் இருக்கும்.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான சித்தாந்தங்கள் பிடித்தமானதாக இருக்கலாம். தன்னுடைய சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்க, மற்றொரு சிந்தாந்தத்தை தாழ்த்திப் பிடிப்பது மிகவும் தவறான செயல். சிலர், மற்ற மொழிகளை இழிவுபடுத்திப் பேசியும், அவதூறு செய்தும், ஓரு மொழியை தார் ஊற்றி அழிப்பதும் என தவறான செயல்களை செய்து வருகின்றனர். அதே நேரத்தில், இவர்கள் வேண்டாம் என பொதுவெளியில் கூறும் மொழியை தங்களது கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கின்றனர். இது எந்த மாதிரியான நிலைப்பாடு? ஒரு இந்து, தனக்கு பிடித்த இறைவன் சிலையை வைத்து வணங்குவதை கேலியும், கிண்டலும் செய்தவர்கள், தற்போது தங்களுக்கு பிடித்தமான தலைவர்களுக்கு சிலை வைத்து வணங்கி வருவது ஏன்? என்பது புதிராகவே உள்ளது.

கட்டுரையாளர் – ஓம் பிரகாஷ், CSIS, சென்னை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry