ஏ.சி.யால் அதிகரிக்கும் மின் கட்டணம்! குறைப்பதற்கான ஈஸி டிப்ஸ்!

0
379

வெப்ப அலை வாட்டி வதைக்கிறது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிவை ஆய்வு மையம் கூறுகிறது. இதன் பாதிப்பை ஜம்மு காஷ்மீர் முதல் பஞ்சாப், லடாக், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில மக்கள் உணர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் அதி தீவிர வெயில் காலம் வரும் 4ம் தேதி துவங்குகிறது. அதற்கு முன்னதாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டிவதைத்து வருகிறது. 14 மாவட்டங்களில் நேற்று வெயில் 100 டிகிரி ஃபேரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

GETTY IMAGE

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு அமலில் இருந்துவருகிறது. தமிழகத்திலும் இதே நிலை இருக்கிறது. எனவே ஃபேன், ஃபிரிட்ஜ், ஏ.சி. பயன்பாடு சில மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்திருக்கும். இதன் காரணமாக மின் நுகர்வு அதிகரித்து, மின் கட்டணமும் பல மடங்கு உயரக்கூடும். ஏ.சி. பயன்பாடு அதிகரித்தாலும், அதனால் மின் கட்டணம் உயராமல் இருப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம். பொதுவாக ஸ்பிலிட் ஏசி ஒரு மணி நேரத்துக்கு 2900 – 4100 வாட் மின்சாரம் நுகரும். அதேபோல் வின்டோ ஏ.சி. 900 – 1440 வாட் வரை மின்சாரம் எடுக்கும். ஏசி டன் அளவு, ரூம் அளவு, ரூமில் உள்ள பொருட்கள், நபர்கள் பொருத்து மின் நுகர்வு வேறுபடும்.

பயன்பாட்டில் இல்லாத போது ஏசியை முழுமையாக அணைக்க வேண்டும். நம்மில் பெரும்பாலானோர் ஏசியை ரிமோட் கன்ட்ரோல் மூலமாகவே அணைப்போம். ஏசி போட்ட உடனேயே குளிர்ச்சி வந்துவிட வேண்டும் என்ற மனநிலைதான் இதற்குக் காரணம். இதனால் ‘ஐடில் லோட்’ வடிவில் மின்சாரம் வீணாகிறது. எனவே பயன்படுத்தாதபோது ஏசி-க்கான மெயின் ஸ்விட்ச்சை ஆஃப் செய்ய வேண்டும்.

குறைந்த வெப்பநிலையை அமைக்கும் போது (18 டிகிரி, 19 டிகிரி) ஏசி அதிக குளிர்ச்சியை வழங்குகிறது. ஆனால், பீரோ ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்சிபடி(BEE), 24 டிகிரி என்பது மனித உடலுக்கு உகந்த வெப்பநிலையாகும். அதுமட்டுமல்ல 24 டிகிரி என்ற அளவை அடைய ஏ.சி. குறைந்த சுமை எடுக்கும். அப்போது அதிக அளவில் மின்சாரம் சேமிக்கப்படும்.

கூடுதல் பயன்பாட்டைத் தவிர்த்து, மின்சாரத்தை சேமிக்க டைமர்களைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். தற்போது கிடைக்கும் ஏசிக்கள் டைமர் வசதியோடு கிடைக்கிறது. இருப்பினும், பலர் அதைப் பயன்படுத்துவதில்லை. ஏசியை அணைப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை திட்டமிட இந்த அம்சம் உதவும். சாதனத்தின் கூடுதல் பயன்பாட்டைத் தவிர்க்க இது உதவுகிறது, ஏசியை அணைக்க மறந்துவிட்டால் அல்லது தூங்கும் போது ஏற்படும் மின்சார விரயத்தை டைமர் குறைக்கிறது.

ஏசியை அணைக்கும் முன் அறையில் காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். சீலிங் ஃபேன் போட்டு அறையின் கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறப்பது அறையில் இருக்கும் வெப்பத்தை வெளியேற்றலாம். இதைச் செய்வதால் அறையின் வெப்பநிலை குறையும். இது ஏசி வேகமாக குளிர்விக்க உதவும்.

பெரும்பாலான உற்பத்தியாளர்கள் தங்கள் ஏசியை அடிக்கடி சர்வீஸ் செய்யத் தேவையில்லை என்கின்றனர். ஆனாலும் உங்கள் ஏசியை தவறாமல் சர்வீஸ் செய்ய வேண்டும். ஆண்டு முழுவதும் நாம் ஏசியை பயன்படுத்தப்படுவதில்லை. உபயோகத்தில் இல்லாத போது ஏசி உள்ளேயும், ஃபில்டரிலும் தூசி, ஒட்டை போன்றவை படிந்துவிடும். இதனால் ஏசியின் செயல்திறன் வீணாகும், ஆற்றல் நுகர்வு அதிகமாகி மின்சாரப் பயன்பாடு அதிகமாகும்.

ஏசி இயங்கும் போது அறை முழுவதுமாக மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்க வேண்டும். ஜன்னல் பேனல்களின் கீழ் உள்ள இடைவெளிகளையும் மூடிட வேண்டும். இது அறையை விரைவாகவும், நீண்ட நேரத்திற்கு குளிர்விக்கவும் உதவும். குளிர்ந்த காற்று வெளியேற வழி இருந்தால், அறையை குளிர்விக்க ஏசி கூடுதல் நேரம் எடுக்கும், இதன் விளைவாக மின் நுகர்வு அதிகமாகும்.

ஏசி இயங்கும் போது குறைந்த அல்லது மிதமான வேகத்தில் சீலிங் ஃபேனை ஆன் செய்வது அறையை விரைவில் குளிர்விக்க உதவுகிறது. உங்கள் ஏசி வெப்பநிலையை 25 அல்லது 26 டிகிரி என்ற அளவில் அமைத்தவுடன், குளிர்ந்த காற்று வீசுவதை விரிவுபடுத்த மின்விசிறியை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும். இது, அறையில் குளிர்ச்சியை தக்க வைப்பதுடன், மின் நுகர்வையும் குறைக்கும்.

அதேபோல் ஏ.சி.யில் கேஸ் சரியான அளவில் இருக்கிறதா? என்பதை ஏசி மெக்கானிக்குகளை அழைத்து சரிபார்க்க வேண்டியதும் அவசியம். ஏசியின் ஸ்டார் ரேட்டிங்கும் ஏர் கண்டிஷனரின் குளிரூட்டும் திறனைக் கணக்கிட உதவுகிறது. இந்த நட்சத்திர மதிப்பீடு BEE (Bureau of Energy Efficiency) மூலம் வாடிக்கையாளர் விழிப்புணர்வுக்காக வழங்கப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry