இலங்கையில் அண்ணாமலை! பாஜக-வின் மாஸ்டர் பிளான்! வளைந்து கொடுப்பாரா ராஜபக்ச?

0
349

உக்ரைனில் இருந்து தமிழர்களை தாங்கள் மீட்டுவந்ததாக மார்தட்டிய தமிழக அரசு, இப்பொழுது இலங்கை தமிழருக்கு உதவ மத்திய அரசு அனுமதி தரவேண்டும் என முணங்குகின்றது. உக்ரைனில் தனியே சாதித்தவர்கள், வெறும் 39 மைல் தொலைவுக்கு முணங்குகின்றார்கள் என்றால், அதுதான் திராவிட மாடல்.

இலங்கையில் சிக்கல்கள் தொடங்கிய 1980களுக்கு பின் இந்தியாவின் ஆளுங்கட்சி பிரமுகர்கள் அல்லது தமிழக பிரதிநிதிகள் அங்கு அதிகம் சென்றதில்லை. 1984ல் அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்மராவ்தான் அதிகாரப்பூர்வ இந்திய பிரதிநியாக இலங்கைக்கு சென்றார். அதன் பின் காட்சிகள் மாறின, என்னவெல்லாமோ நடந்தது.

இலங்கை விவகாரத்தில் உருப்படியான விஷயத்தை செய்த ஒரே தலைவர் இந்திராகாந்தி, அவர் தமிழரான பார்த்தசாரதியினைத்தான் இலங்கை விவகாரங்களுக்கான அதிகாரபூர்வ பிரநிதியாக அறிவித்தார். அது சரியான அணுசரனையாக இருந்தது. இந்திராவுக்கு பின்பே எல்லா குழப்பங்களும் வந்தன, பார்த்தசாரதி மாற்றபட்டார்.

இப்பொழுது மோடி அரசு அந்த பார்த்தசாரதியினைத்தான் இலங்கை விவகாரங்களுக்கு மறுபடி நியமித்திருக்கின்றது. இலங்கை தொடர்பான இந்திய நடவடிக்கைகளில் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். இலங்கை விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் அல்லது பிரமுகர்களை டெல்லி தவிர்த்தே வந்தது. அதற்கு காரணமும் இருந்தது.

அன்று அமிர்தலிங்கத்தை வரவேற்க எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்கும் நடந்த போட்டி, பின் போராட்ட குழுக்களை இவர்கள் இருவரும் ஆதரித்த அரசியல் என பல இருந்ததால், தமிழக அரசியல்வாதிகள் யாரையும் டெல்லி இவ்விவகாரத்தில் சேர்க்கவில்லை. வைகோ கள்ளதோணியில் சென்று இந்திய ராணுவத்தையே எதிர்த்ததெல்லாம் தேசவிரோதம் என்றாலும், டெல்லி காங்கிரஸ் அதை கண்டுகொள்ளவில்லை.

தமிழக பிரதிநியாக உலக அரங்கில் முன்பு பேசியவர் பண்ருட்டி ராமசந்திரன், எம்ஜிஆர் காலங்களில் ஐநா சபையில் அவர்தான் ஈழபிரச்சினை பற்றி பேசினார். அடுத்து ப.சிதம்பரம் முயற்சித்தார், ஆனால் பெரிதாக எதுவுமில்லை. இவர்களைத் தவிர தமிழகத்தில் யாரும் இந்திய அரசின் ஈழ முகங்களாக அறிவிக்கபடவில்லை.

பண்ருட்டி ராமச்சந்திரன்

இப்பொழுது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இலங்கை பயணம், இந்தியாவிலும் இலங்கையிலும் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தியாவை ஆளும் பலமான பாஜக, தங்கள் கட்சி பிரமுகரை, அதுவும் தமிழக தலைவரை களத்தில் இறக்கியிருப்பது, இலங்கையின் அலரி மாளிகையினை(பிரதமர் மஹிந்த ராஜபக்ச மாளிகை) அலற வைக்கின்றது. மிக மோசமான காலகட்டமான தற்போது, இலங்கைக்கு இந்தியா கைகொடுப்பது நிஜம். இன்னும் பல்லாண்டு காலம் இந்தியா அவர்களை சுமக்க வேண்டிய நிலையும் உண்டு.

1987ல் இந்தியாவும் – இலங்கையும் செய்த ஒப்பந்தபடி, இலங்கை தமிழருக்கு உரிமைகள் கிடைக்க வழிசெய்யும் 13-வது சட்டபிரிவினை திருத்துவதற்கான முயற்சியை நோக்கித்தான் இந்தியா நகருகின்றது என்கின்றன உலக செய்திகள். அந்த ஒப்பந்தத்தை 1987லேயே பிரபாகரன் ஏற்றிருந்தால் இவ்வளவு அழிவு வந்திருக்காது.

GETTY IMAGE

ஆனால் அந்த ஒப்பந்த தயாரிப்பில் தமிழர் சார்பாக பிரதிநிதி யாரும் இல்லை எனும் பிரபாகரனின் வாதத்தையும் மறுக்கமுடியாது, நிச்சயம் தமிழர் தரப்பில் ஒருவர் இருந்திருக்க வேண்டும். ராஜிவ் அரசு அதை செய்யவில்லை. தற்போது முதல் முறையாக இலங்கை தமிழர் பிரச்சினையினை இந்திய தமிழன் ஊடாக தீர்க்கும் காட்சி தொடங்குகின்றது. தமிழக அண்ணாமலையினை, இந்தியா இலங்கைக்கு அனுப்பியிருப்பதே 13-வது சட்டதிருத்தத்தின் முன்னோடியாக பார்க்கபடுகின்றது.

ஒருவேளை அந்த சட்டதிருத்தம் செய்யபட்டால், அண்ணாமலை அதில் பங்கெடுக்கும் வாய்ப்பு வந்தால், உலகின் மிக முக்கிய வரலாற்றில் அதுவும் ஒன்றாகும். இதுவரை திராவிடமும், காங்கிரசும் தீர்க்காத அல்லது தீர்க்க விரும்பாத பெரும் சிக்கலை, இலங்கை தமிழருக்கு பாஜகதான் தீர்த்து கொடுத்தது என்பது மிகபெரிய வரலாற்று சாதனையாகும். அதன்பிறகு அண்ணாமலை மிகபெரிய இடத்தில் நிற்பார். காட்சிகள் அதை நோக்கித்தான் நகர்கின்றன.

இதனிடையே, இலங்கைத் தமிழருக்கு திமுக அரசு உதவ கிளம்புவது எல்லாம் ஒருவகை காமெடி, காரணம் இலங்கையில் நடப்பது போர் அல்ல, இயற்கை சீற்றமும் அல்ல, தமிழருக்கு மட்டுமான சிக்கலும் அல்ல‌. அது இலங்கை தேசம் முழுமைக்குமானது. அங்கு ஒரு சிறுபான்மை இனத்துக்கு மட்டும் உதவி என்பதை அந்நாடு நிச்சயம் அனுமதிக்காது, காரணம் ராஜபக்சே அரசு அமைய வாக்களித்தவர்களில் ஈழ தமிழர் உள்பட எல்லா இலங்கையரும் உண்டு. அதனால் தமிழருக்கு மட்டும் உதவி என்பதெல்லாம் இலங்கையில் நடக்கமுடியாத விஷயம்.

கட்டுரையாளர் :- ஸ்டான்லி ராஜன், அரசியல் விமர்சகர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry