கட்சியிலயே இல்லை, அலுவலக சாவியை எப்படி கேட்கிறீர்கள்? ஓபிஎஸ்சுக்கு கொட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

0
133

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில் பிறகு எப்படி அவர் உரிமை கோருகிறார் என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கியது எதிர்த்த ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றபோது, ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க அலுவலகம் சென்றார். அப்போது, ஓபிஎஸ் உடன் வந்தவர்கள் அதிமுக அலுவலகத்தை சூறையாடியதுடன், வன்முறையிலும் ஈடுபட்டனர்.

Also Read : அதிமுக உட்கட்சி தேர்தல்! தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் இடைக்கால தடை!

இதனையடுத்து வருவாய்த்துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார், அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி கே. பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க. அலுவலக சாவியை ஒப்படைத்தது தவறு என்றும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Also Read : ராகுல் யாத்திரைக்காக பண வசூல்! ஃபேஸ் புக்கில் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் சண்டை!

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். பண விவகாரங்களில் பன்னீர்செல்வம் கையாடல் செய்ததால் அவரிடம் அ.தி.மு.க அலுவலக சாவியை ஒப்படைக்கக் கூடாது. ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இல்லாதபோது சாவியை ஒப்படைக்க உரிமை கோர முடியாது என குறிப்பிட்டிருந்தார்.

வருவாய்த்துறையினர் தாக்கல் செய்த பதில் மனுவில், இருதரப்பு மோதலால் கலவரம் ஏற்பட்டது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் தான் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைத்த விஷயத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று செயல்பட்டுள்ளோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read : அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம்! திமுக ராஜ்ஜியத்தில் பூஜ்யம் மட்டுமே பரிசு! அதிமுக கடும் விமர்சனம்!

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இன்னமும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் உரிமை கோருகிறோம் என்று வாதிட்டார். அப்போது நீதிபதிகள், ஜனநாயக வழியில் அல்லாது அரசியல் கட்சி செயல்படுவதை ஏற்க முடியுமா?, அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில் பிறகு எப்படி அவர் உரிமை கோருகிறார்? என்று கேள்வி எழுப்பினர். ஓபிஎஸ் தரப்பு மீண்டும் உரிமையியல் வழக்கு தொடர்ந்து அதிமுக அலுவலகத்தை மீட்க சட்ட வழிகளை நாடலாமே என்று கூறிய உச்ச நீதிமன்றம், ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry