நடந்து முடிந்த ‘நீட்’ தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதால், அதனை ரத்து செய்து உத்தரவிடுமாறு தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
நாடு முழுவதும் கடந்த மாதம் 12ம் தேதி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் ஆள்மாறாட்டம், முன்கூட்டியே வினாத்தாள் வெளியானது போன்ற முறைகேடுகள் நடந்த விவகாரத்தில், போலீசார் சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இருப்பினும் முறைகேடு புகாரை நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 12ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து, மறுத்தேர்வு நடத்தக்கோரி தேர்வு எழுதிய மாணவர்கள் மாணவர்கள் சிலர் சார்பில் வழக்கறிஞர் மம்தா ஷர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், நடந்துமுடிந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, தேர்வு மையங்களிலேயே விடை குறியீடுகள் கசிவானது போன்ற முறைகேடு புகார்கள் எழுந்துள்ளதால், தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.
பயிற்சி மையங்களில் முன்கூட்டியே நீட் தேர்வு வினாத்தாளை வழங்கி முறைகேடு நடந்துள்ளது. நீட் தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிஐ 4 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநில காவல் நிலையங்களில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நீட் தேர்வை பல லட்சம் பேர் எழுதியுள்ளனர். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது. முறைகேடு தொடர்பாக சம்பந்தப்பட்ட ஏஜென்ஜிகளை முதலில் அணுக வேண்டும். ஏற்கனவே நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது.
மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நீதிமன்றத்தின் நிற்காது என்பது வழக்கறிஞருக்கு தெரியாதா? எனவே, நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுவதுடன் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையை மாணவர்களிடம் வழக்கறிஞர் வசூலிக்க கூடாது. அவர், தனது சொந்த பணத்தை அபராதமாக செலுத்த வேண்டும்’ என்று நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry