பாலியல் தொழிலும் புரொபஷனல் தொழில்தான்! ரெய்டு என்ற பெயரில் கைது, கிரிமினல் நடவடிக்கை கூடாது!

0
599

பாலியல் தொழிலும் புரொஃபஷனல் தொழில் முறை தான், அதில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் அந்த உத்தரவில், ‘பாலியல் தொழிலும் ஒரு தொழிலே. அதை செய்வோருக்கும் சட்டத்தின் கீழ் சமமான மரியாதையும், பாதுகாப்பும் உண்டு. வயது வந்தோர் இருவர் அல்லது பாலியல் தொழிலாளியுடன் உவந்து உறவில் ஈடுபடுவோர் மீது போலீஸ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலாளர்களும் சட்டத்தின் பாதுகாப்பை பெற தகுதியானவர்களே. கிரிமினல் சட்டமானது எல்லோர் மீதும் சமமாக பயன்படுத்தப்பட வேண்டியது. அதனால் வயது, பரஸ்பர சம்மதம், இது பாலியல் தொழிலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இரண்டு வளர்ந்த நபர்கள் (18 வயதுக்கு மேற்பட்டோர்) பரஸ்பர சம்மதத்துடன் ஈடுபடும் உறவை கிரிமினல் குற்றமாக்க முடியாது. அவர்கள் மீது போலீஸ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க இயலாது.

பாலியல் தொழில் கூடங்களை ரெய்டு செய்யும்போது பாலியல் தொழிலாளிகளை கைது செய்வதோ, அபராதம் விதிப்பதோ அவர்களை துன்புறுத்தவோ கூடாது. தன்னார்வத்தில் செய்யும் பாலியல் தொழில் சட்டவிரோதம் அல்ல. ஆனால் பாலியல் கூடங்கள் நடத்துவது சட்டவிரோதம்.

ஒரு பாலியல் தொழிலாளியின் குழந்தையை அவரிடமிருந்து பிரிக்கக் கூடாது. அவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பது, அதற்கு தகுந்த காரணம் அல்ல. மனிதர்களின் மாண்பைப் பாதுகாத்தல் என்பது பாலியல் தொழிலாளிகளுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் பொருந்தும். 

ஒரு குழந்தை, பாலியல் தொழிலாளியுடன் வாழ்ந்து வந்தால் அந்தக் குழந்தை கடத்தப்பட்ட குழந்தையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒருவேளை அதில் சந்தேகம் ஏற்பட்டால் குழந்தை, தாயின் மரபணுவை பரிசோதனை செய்து பார்க்கலாம். அதைவிடுத்து குழந்தையை வலுக்கட்டாயமாக பிரிக்கக் கூடாது.

பாலியல் தொழிலாளி என்பதால் அவர் கொடுக்கும் பாலியல் வன்கொடுமை புகார்களை ஏற்கக் கூடாது என்பதில்லை. அவர்களுக்கும் மருத்துவ, சட்ட உதவிகளை வழங்க வேண்டும்.பாலியல் தொழிலாளிகள் மீதான காவல்துறையின் அணுகுமுறை எப்போதுமே கடுமையானதாக இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. சில நேரங்களில் காவல்துறையே அவர்களை வன்முறைக்கு உள்ளாக்குகிறது. இதில் காவல்துறையினருக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது.

அதேபோல் பாலியல் கூடங்களில் ரெய்டு நடந்தால், அதனை ஊடகங்கள் ஒளிபரப்பும்போது கவனமாக இருக்க வேண்டும். கைது அல்லது மீட்புப் பணிகளின் போது பாலியல் தொழிலாளியின் அடையாளம், பெயர் எக்காரணம் கொண்டும் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் பாலியல் தொழில் சட்டங்களை இயற்றினால், அப்போது பாலியல் தொழிலாளிகளின் கருத்தையும் கேட்டறிய வேண்டும். அதேவேளையில், பார்வை மோகம் (வாயரிஸம்) என்பது கிரிமினல் குற்றம் என்பதில் நீதிமன்றத்திற்கு மாற்றுக் கருத்து இல்லைநீதிபதிகள் உத்தரவில் இவ்வாறு கூறியுள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry