பெட்ரோல், டீசல் வரியைக் குறைக்கும் திட்டம் இல்லை! தமிழக அரசு திட்டவட்டம்!

0
378

எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசு, தற்போது விலையை குறைக்கச் சொல்லி மாநிலங்களிடம் கேட்பதுதான் கூட்டாட்சியா என்று தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக அவர் கூறியிருந்தார். இதன்படி சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 8.22 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 6.70 ரூபாயும் குறைந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Also Read : பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 குறைகிறது! சிலிண்டருக்கு ரூ.200 மானியம்! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

இந்த அறிவிப்பை வெளியிடும் போது மாநில அரசுகள் தங்களுடைய வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மத்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலையை அதிகமாக உயர்த்தியுள்ளது. குறிப்பாக பெட்ரோலின் விலையை சுமார் 23 ரூபாய் வரை (250%) உயர்த்தியுள்ளது. அதேபோல் டீசலின் விலையை சுமார் 29 ரூபாய் வரை(900%) உயர்த்தியுள்ளது. இந்த அளவிற்கு விலையை ஏற்றும் போது மாநிலங்களிடம் ஒரு தகவல் கூட சொல்லவில்லை.

தற்போது அதில் 50% விலையை மட்டும் குறைந்துவிட்டு  மாநிலங்களை தங்களுடைய வரியை குறைக்க சொல்வது எப்படி நியாயம்? இது தான் கூட்டாட்சி தத்துவமா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

“கடந்த நவம்பர் 3-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்த வரிக் குறைப்பால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,050 கோடி கூடுதல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்திய குறைப்பால் மேலும் ரூ.800 கோடி இழப்பு ஏற்படும். இது ஏற்கனவே கோவிட் நிவாரண நடவடிக்கைகளுக்காக அவர்கள் செய்த கூடுதல் செலவினங்களால் சுமையாக இருந்த மாநிலங்களின் நிதியில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும், எனவே மாநில அரசின் பங்கை குறைக்கும் திட்டம் இல்லை“ என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இனிடையே, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு. எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், பணவீக்கத்தைக் குறைக்கும் வகையிலும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இழப்பீட்டைக் குறைக்கும் வகையிலும், தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையிலும், குறைந்தபட்சம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்க நடவடிக்கை எடுத்து ‘மக்களுக்கு நீதி’ வழங்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதுவும் ‘திராவிட மாடல்’ போலும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும்.” என்று கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் வரிகளைக் குறைக்க மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் வலியுறுத்தியுள்ளார். “மத்திய அரசு இரு தவணைகளாக எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசுக்கும் மதிப்புக்கூட்டு வரியை குறைக்க வேண்டிய கடமை உண்டு. அதனால், மாநில அரசும் பெட்ரோல், டீசல் வரிகளைக் குறைத்து மக்களின் சுமையை போக்க முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry