‘நான் ஏன் காந்தியை கொன்றேன்’! திரைப்படத்துக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

0
301

மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே குறித்த ‘Why I killed Gandhi’ திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாதுராம் கோட்சேவை மேன்மைப்படுத்தும் காட்சிகளே காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

1948-ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்தார். கோட்சேவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அவரது சகோதரர் கோபால் கோட்சே எழுதிய புத்தகம்தான் ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?’ (Why I Killed Gandhi?). தற்போது இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு அசோக் தியாகி இயக்கியுள்ள ‘ஒய் ஐ கில்டு காந்தி’ என்ற ஆவணப் படம் ஒன்று லைம்லைட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. நாதுராம் கோட்சேவாக தேசியவாத காங்கிரஸ் எம்பியும் நடிகருமான அமோல் கோல்ஹே நடித்துள்ளார்.

கொலையாளியான நாதுராம் கோட்சேவை புகழ்ந்துரைக்கும் திரைப்படத்தை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் (AICWA) கடிதம் எழுதியுள்ளது.

அதில் “காந்திஜி இந்தியா மற்றும் உலகத்தால் போற்றப்படும் ஒருவர், காந்திஜியின் சித்தாந்தம் ஒவ்வொரு இந்தியருக்கும் அன்பு மற்றும் தியாகத்தின் சின்னமாக உள்ளது. நாதுராம் கோட்சே இந்த நாட்டில் யாருடைய மரியாதைக்கும் உரியவர் இல்லை, நாதுராம் கோட்சேவாக நடித்த நடிகர் மக்களவை எம்.பியாக உள்ளவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுதிமொழிக்கு உட்பட்டவர்” என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிக்கந்தர் பேல் என்பவர் சார்பில் வழக்கறிஞர் அனுஜ் பண்டாரி தாக்கல் செய்த ரிட் மனுவில், ”இந்த திரைப்படம் வெளியாவதை தடுக்காவிட்டால், அது மீளமுடியாத பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், பொது அமைதியை சீர்குலைத்து, ஒற்றுமையின்மையையும், வெறுப்பையும் விதைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இது காந்தியின் நற்பெயருக்கு களங்களத்தை ஏற்படுத்தி, அவரைக் கொன்ற ஆர்எஸ்எஸைச் சேர்ந்த கோட்சேவை புனிதப்படுத்தும். எனவே இந்த படத்துக்கு தடைவிதிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஜே.கே. மகேஸ்வரி அமர்வு, “அடிப்படை உரிமை மீறல் குறித்து கேள்வி ஏற்படும் போது மட்டுமே 32வது பிரிவின் கீழ் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும். மனுதாரரின் எந்த அடிப்படை உரிமையும் மீறப்பட்டதாகத் தெரியவில்லை. இருப்பினும் மனுதாரர் கவலைக்குரிய ஒரு தீவிரமான காரணத்தைக் கொண்டிருக்கலாம். சட்டப்பிரிவு 226ன் கீழ் உயர் நீதிமன்றத்தை அணுக மனுதாரர் சுதந்திரம் பெற்றுள்ளார். இந்த மனு ஏற்கப்படவில்லை.” என்று தீர்ப்பளித்தனர். மேலும் மனுதாரர் தரப்பு வாதத்தின்போது, “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நீங்கள் ஏன் உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகினீர்கள்? என்று நீதிபதி இந்திரா பானஜ்ரி கேள்வி எழுப்பினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry