நடிகர் சூர்யாவின் படப்பிடிப்பில், சுற்றுலா விசாவில் அழைத்துவரப்பட்ட 100க்கும் மேற்பட்ட ரஷ்ய நாட்டினர் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் ஈடுபட்டிருப்பது தயாரிப்பு நிறுவனத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. முறையான வேலை அனுமதி இல்லாமல் படப்பிடிப்பில் பங்கேற்ற வெளிநாட்டினரிடம் நீலகிரி மாவட்ட போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒரு படத்தில் சூர்யா நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்தப்படம் ‘சூர்யா 44’ என தற்போதைக்கு அடையாளப்படுத்தப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் மற்றும் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது.
பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், சுஜித் சங்கர் மற்றும் தமிழ் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். 2ம் கட்ட படப்பிடிப்பு ஜூலை 26ம் தேதி முதல் நீலகிரி மாவட்டம் உதகையில் நடந்து வருகிறது.
ஊட்டியில் உள்ள ‘நவாநகர் பேலஸ்’ என்ற இடத்தில் சண்டை காட்சிகள் படம் ஆக்கப்பட்டு வந்தது. 20 நாட்களுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில், கடந்த 8ம் தேதி சண்டை காட்சி நடந்த போது, கேங்ஸ்டராக நடிக்கும் சூர்யாவுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சூர்யா சென்னை வந்துவிட்டார்.
இந்நிலையில், இந்த படப்பிடிப்பிற்காக ரஷ்யாவை சேர்ந்த 155 பேர் கடந்த 27ம் தேதி சுற்றுலா விசாவை பெற்று வந்துள்ளனர். ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளாக நடிக்கும் அவர்கள் ஊட்டியில் உள்ள, 3 பிரபல தனியார் ஓட்டல்களில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்கின்றனர். பொதுவாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஊட்டியில் வந்து தங்கினால் தங்கும் விடுதி நிர்வாகத்தினர் இதுகுறித்து போலீஸ் நிலையம் மற்றும் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஆனால், ரஷ்ய நாட்டினர் குறித்த விபரங்களை ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளனர். கடந்த வாரம் படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவிற்கு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தபட்டது. இதனையடுத்து படப்பிடிப்பிற்காக வந்துள்ள, 155 ரஷ்யர்களில் 42 பேர் ரஷ்யா திரும்பி சென்றனர். சுற்றுலாப் பயணிகளை படப்பிடிப்புக்கு பயன்படுத்தியதால், விசா விதிமுறைகளை மீறியதாக ‘சூர்யா 44’ தயாரிப்பாளர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
Also Read : பேயாழ்வார் அவதார தலத்தை சொந்தம் கொண்டாடும் வக்பு வாரியம்! ஆவணங்களுடன் மறுக்கும் வைணவப் பெரியவர்கள்!
தற்போது, 113 பேர் ஊட்டியிலேயே தங்கி உள்ள நிலையில், ரஷ்யா நாட்டினர் சுற்றுலா விசாவில் வந்து திரைப்படத்தில் நடிக்க கூடாது என்பதாலும், ரஷ்யா நாட்டினரின் விபரங்களை நீலகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு முறையாக தெரிவிக்காதது குறித்தும் விளக்கம் அளிக்குமாறு நீலகிரி மாவட்ட தனிப்பிரிவு போலீசார் சம்பந்தபட்ட தனியார் ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், வெளிநாட்டினரை ஏற்பாடு செய்த முகவர் மற்றும் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் இருவரும் 14ந் தேதி விசாரணைக்காக உள்ளூர் காவல் அதிகாரிகள் முன் ஆஜரானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியேற்ற விதிமுறைகளின்படி, வணிக அல்லது வேலை விசாக்களில் உள்ள நபர்கள் மட்டுமே நாட்டில் ஊதியம் பெறும் வேலைவாய்ப்பைப் பெற அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், ரஷ்ய நாட்டினரை வேலைக்கு அமர்த்திய முகவர், இதற்கு முன்பும் பல படங்களுக்கு வெளிநாட்டினரை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். சுற்றுலா விசாவில் வந்து படப்பில் பங்கேற்கக்கூடாது என்ற விதி கண்டிப்புடன் பின்பற்றப்படாததால், இதுபற்றி முகவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry