பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் வாரீர்..! தொழிலாளர் விரோத சட்டத்துக்கு எதிராக ஆசிரியர் கூட்டணி அழைப்பு!

0
398

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தொழிலாளர் நல விரோத சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக ஆசிரியர் கூட்டணி, ஒன்றிய அரசின் கொள்கையுடன் ஒன்றிப் போய்விட்டீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளது.

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணி மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளிளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிலாளர் நல விரோத மசோதா நிறைவேற்றத்திற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி, ஐபெட்டோ அமைப்பு அழுத்தமான கண்டனக் குரலினை பதிவு செய்கிறோம். அந்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

வா. அண்ணாமலை

மே 1 தொழிலாளர் தினம். உலகம் முழுவதிலும் அந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மிக ஆபத்தான தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்களை, தமிழக சட்டசபையில் திராவிட மாடல் அரசு நிறைவேற்றி விட்டது. இந்த 65ஏ சட்ட திருத்ததில் உள்ள முக்கியமான நான்கு செய்திகளைப் பார்ப்போம்.

  • வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் வரை அதிகரிப்பது.
  • வாழமுடியாத அளவுக்கு ஊதியங்களை குறைந்தபட்சமாக நிர்ணயிப்பது.
  • தொழிலாளர்களுக்காக இருக்கும் சமூகப் பாதுகாப்பு நலன்களைக் குறைப்பது.
  • நிரந்தர வேலை வாய்ப்பை ஒழித்து ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்த அனுமதிப்பது.

திராவிட மாடல் அரசின் சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு என்று அழைத்தீர்களே, மத்திய அரசுக் கொள்கையில் இப்படி ஒன்றிப்போவதற்குத் தான் திட்டமிட்டு அந்த பெயரை வைத்து அழைத்தீர்களா? மத்திய அரசு தொழிலாளர் நல விரோத அரசு. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் நல விரோத அரசு. ஏன் தமிழக அரசையும் இனி இப்படித்தான் ஒருமைக் குரலுடன் அழைக்கப் போகிறோம்.

Also Read : பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு அறிவிக்கையை நிறுத்திவைக்க வேண்டும்! தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

21 ஆம் தேதியுடன் சட்டப்பேரவை நிறைவு பெற்று விட்டது. விதி எண் 110 கீழ் முதலமைச்சர் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். கோரிக்கையானது கொள்கை கனலாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் காதில் அது விழவில்லையா?

கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தினை உயர்த்தி அறிவித்துள்ளீர்கள், எங்களுக்கு கோபமில்லை. ஆனால் கருணாநிதி நேசித்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுடைய ஓய்வூதியக் கோரிக்கைகளை ஏற்று, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவோம் என்று அறிவித்திருந்தால் கனவில் வந்து அவர்தம் பிள்ளையை உச்சி முகர்ந்து வாழ்த்தியிருப்பார், நடைபெறவில்லையே..! ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களை முதலமைச்சர் மறந்து போனாரா? அல்லது மறக்கடிக்கப்பட்டோமா? நினைவில் உள்ளோமா? நினைவில் இருந்து அகற்றப்பட்டோமா?

புதிய ஓய்வூதியத் திட்டத்தை பொறுத்தவரையில் 61,251.16 கோடி எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசை நாட வேண்டிய அவசியமில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தலாம்.

Also Read : ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் அருந்துவது நல்லது! தாகம் எடுக்கும்வரை காத்திருக்க வேண்டாம்! உணவியல் நிபுணர்கள் அறிவுரை!

விதி எண் 110 கீழ் அகவிலைப்படி அறிவிப்பு என்னாயிற்று? ஊதிய முரண்பாடு முரணாகிப் போனதா? அண்ணா காலத்தில் கொண்டு வந்த ஊக்க ஊதிய உயர்வு அறவே மறக்கடிக்கப்பட்டதா? சரண் விடுப்பு சத்தம் இல்லாமல் போனதா? பணிப் பாதுகாப்பு சட்டம் என்னவாயிற்று? எதையுமே செய்ய முன்வராத அரசு என்று உறுதிப்படுத்துகிறீர்களா?

வெளிநாடுகளில் ஆசிரியர்களுக்கு உள்ள மரியாதையினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் பட்டியலிடுகிறார். இவர் தலைமையில் உள்ள பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களின் நிலை என்ன ஆயிற்று? ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு சட்டம் குரலையாவது எழுப்பினாரா? ஆசிரியர்கள் அடி உதைபட்ட போது கவலை அடைந்து ஒரு அறிவிப்பையாவது வெளியிட்டாரா?

ஜாக்டோ ஜியோ மட்டுமல்ல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து தொழிலாளர் விரோத கொள்கைக்கு அழுத்தமான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வோம். ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் ஏற்கனவே வேலை நேரத்தை அதிகரிக்கவில்லையே தவிர, அன்றாட பணிச்சுமையின் மூலம் சித்தரவதை செய்து வருகிறார்கள். பொறுத்தது போதும், கரம் கோர்த்து அனைவரும் பொங்கி எழுவோம் வாரீர்..!” அறிக்கையில் வா. அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry