பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு அறிவிக்கையை நிறுத்திவைக்க வேண்டும்! தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

0
376

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பாக அறந்தாங்கி, பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்க கல்வி) வெளியிட்டுள்ள செயல்முறை கடிதத்தினை நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறந்தாங்கி மற்றும் பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) முடித்தவர்களின் பட்டியலினை தனியாக தயார் செய்ய அறிவுறுத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. முறையாக தொடக்கக் கல்வித்துறையும், பள்ளிக்கல்வித்துறையும் நீதிமன்றத்தில் நிலைமைதனை விளக்கி முன்னுரிமைப்படி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு அளிக்க மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.

வா. அண்ணாமலை

உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களை சேர்க்க வேண்டும் என்பதுதான் தீர்ப்பாகும். பள்ளிக்கல்வித்துறை உரிய ஆதாரங்களுடன் தீர்ப்பினை மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.

Also Read : ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் அருந்துவது நல்லது! தாகம் எடுக்கும்வரை காத்திருக்க வேண்டாம்! உணவியல் நிபுணர்கள் அறிவுரை!

அப்படி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றால், துறையின் செயல்பாடு பெரும் வேதனையைத்தான் தரும். மேல் முறையீடு செய்து நீதிமன்றத்தில் தெளிவுரை பெறும்வரை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வினை நிறுத்தி வைத்திட தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

துறை காட்டும் அவசரம் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களில் நிர்வாக மாறுதல் செய்து கொள்ளலாம் என்ற உள்நோக்கம் உள்ளதோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. பள்ளிக் கல்வி ஆணையர் என்ற பொறுப்பு நியமித்தத்தில் இருந்து நிர்வாக மாறுதல் கலந்தாய்வு வருடம் முழுமைக்கும் நடக்கிறது. நடப்பாண்டில் இந்த மாதம்(ஏப்ரல் மாதம்) வரை கூட நிர்வாக மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இவை அனைத்தும் பரிசுத்தமாகத்தான் நடைபெறுகிறது என்பதை மனதின்மேல் கை வைத்து சொல்ல முடியுமா? நிர்வாக மாறுதல் கலந்தாய்வு நடைமுறை பற்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் பேசும் நிலமை உருவாகி வருவதையும் மறுப்பதற்கில்லை. தமிழ்நாடு முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் தேவையில்லாத விமர்சனத்தை உருவாக்குவதற்கு நாமே வழி வகுக்க வேண்டாம்.

Also Read : மதுக்கடை இல்லாத மதுவிற்பனை! மதுபாட்டில்கள் டோர் டெலிவரி! விற்பனையை முறைப்படுத்த சூப்பர் வழி! Vels Exclusive

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு அனைத்திற்கும், தொடக்கக்கல்வித் துறை இயக்ககத்தின் சார்பில் வழிகாட்டல் நெறிமுறையினை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்க கல்வி) வழங்கிட வேண்டுமாறு தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

துறையின் மெளனம், மத்திய அரசின் கொள்கையினை ஏற்றுக் கொண்டு விட்டார்களா? அல்லது ஏற்றுக் கொள்ள முன் வருகிறார்களா? என்ற ஐயத்தை ஏற்படுத்துவதால் அதைத் தெளிவுபடுத்த வேண்டுகிறோம். துறையின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம்.” இவ்வாறு அறிக்கையில் வா. அண்ணாமலை கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry