சற்றுமுன்

அதிமுக-வின் பிடியில் தமிழக பாஜக! ஆண் ‘ஜெயலலிதா’ போல ‘எடப்பாடியார்’ செயல்படுவதாக கட்சியினர் பெருமிதம்!

அதிமுக-வின் பிடியில் தமிழக பாஜக! ஆண் ‘ஜெயலலிதா’ போல ‘எடப்பாடியார்’ செயல்படுவதாக கட்சியினர் பெருமிதம்!

பாஜக பிடியில் அதிமுக இல்லை என்பது தெளிவாகிக்கொண்டே வருகிறது. பாஜகவுக்கு 20 இடங்களை  ஒதுக்கிய ஒப்பந்தத்தில் உள்ள சில அம்சங்கள் மூலமாகவே இதை நன்கு உணர முடியும்.

சில்லறையை பெற்றுக்கொண்ட விசிக., கம்யூனிஸ்ட்

பாஜகவின் முழுமையான பிடியில் அதிமுக சென்றுவிட்டது என, பெயரளவுக்கு சமூக நீதி பேசும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கூறிவருகின்றன. விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. அதற்கு மேல் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்பது ஒருபுறம், தனித்து நின்றால் டெபாசிட் கிடைக்காது என்பது மறுபுறம். இந்த நிலையில், பாஜகவை காலூன்றவிடக்கூடாது என்பதற்காகவே 6 தொகுதிகளை மட்டும் பெற்றோம் என இரண்டு கட்சி தலைவர்களும் கூறியுள்ளனர். இவர்கள் 7,8 தொகுதிகளை வாங்கியிருந்தால் பாஜக காலூன்றிவிடுமா? என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை.

வறுமையில் வாழலாம், வைகோ போல் வாழக்கூடாது

இவர்கள் இப்படி என்றால், மதிமுக நிலை படுமோசம். வாரிசுக்கு(ஸ்டாலின்) கருணாநிதி இளவரசர் பட்டம் கட்டுகிறார் என்ற குற்றச்சாட்டை வைகோ முன்வைத்தபோது, கொலைப்பழி சுமத்தி திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக 9 மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இருந்து வெளியேறினார்கள். வைகோ நீக்கப்பட்டதைக் கண்டித்து நொச்சிபட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை பாலன், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை மேலப்பாளையம் ஜஹாங்கீர் ஆகியோர் தீக்குளித்து மாண்டனர்.

பின்னர் மதிமுகவை தோற்றுவித்த வைகோ, தன்னை நம்பியவர்களையும், தனக்காக உயிர் தியாகம் செய்தவர்களையும் இடதுகையால் ஒதுக்கிவிட்டு, ஸ்டாலினிடம் கட்சியை அடகு வைத்துவிட்டார். 6 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 6 தொகுதிகளிலும் திமுக சின்னத்தில் போட்டியிடும்போது, எங்கே வருகிறது மதிமுக என்ற கட்சி? இதை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள், “வறுமையில் கூட வாழ்ந்துவிடு, ஆனால் வைகோ போல் வாழந்துவிடாதேஎன பதிவிட்டு வருகின்றனர். மற்றொருபுறம் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, 2011-ல் 63 இடங்கள், 2016-ல் 41 இடங்கள் என வாங்கிய காங்கிரஸ் கட்சி, தற்போது 25 இடங்களை பெறுவதற்கு அழுது புலம்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

எடப்பாடியாரின் இருவேறு அரச தந்திரம்

இதையெல்லாம் பார்க்கும்போது, கூட்டணிக்கட்சிகளை பெரியண்ணன் மனப்பான்மையோடு திமுக நடத்துவதையும், திமுகவின் பிடியில் கூட்டணிக் கட்சிகள் சிக்கியிருப்பதையும் மறுக்க முடியாது. ஆனால், திமுகவினரோ பாஜக பிடியில் அதிமுக இருப்பதாக கூறிவருகின்றனர். ஆனால், களநிலவரம் அவ்வாறு இல்லை என்பதை உணர்த்துகிறது.

மேல்மட்டத்தில் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி, கீழ்மட்டத்தில் சாதிகளுடன் கூட்டணி என கட்டமைத்து பயணிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு கொடுத்த அவர், இதுவரை இல்லாத அளவுக்கு பாமகவுக்கு குறைவான தொகுதிகளை, அதாவது 23 இடங்களை கொடுத்து, சீனியர் மற்றும் ஜுனியர் மருத்துவர்களை திருப்திபடுத்தியுள்ளார்.   

பாஜகவை பிடிக்குள் கொண்டுவந்த சாமர்த்தியம்

அடுத்தாக, பாஜக. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆண் ஜெயலலிதா போன்றே செயல்பட்டுள்ளார் என கட்சியினர் சிலாகிக்கின்றனர். 20 இடங்களுக்கு மேல் பாஜகவுக்கு ஒதுக்க வாய்ப்பே இல்லை என அமித் ஷா தொடங்கி, சி.டி.ரவி, எல். முருகன் வரை எடப்பாடி தெளிவுபடுத்தியிருந்தார். இதை ஏற்றால் கூட்டணி தொடரும் என்ற நிலைப்பாட்டில் அவர் திடமாக இருந்துள்ளார்.

இதை உறுதி செய்வதுபோலவே இருந்தது கூட்டணி இடஒதுக்கீடு ஒப்பந்தம். அதாவது, 20 சட்டப்பேரவை தொகுதிகள், குமரி மக்களவைத் தொகுதியை ஒதுக்கி, .பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டு அதிமுக அலுவலகத்தில் கொடுத்துவிட்டனர். அந்த ஒப்பந்தத்தில் இருவருமே தேதியை குறிப்பிடாமலேயே கையெழுத்திட்டிருப்பதை கவனிக்க வேண்டும். 100 தொகுதிக்கு குறையாமல் வேண்டும், முதலமைச்சர் வேட்பாளரை நாங்கள்தான் அறிவிப்போம் எனவும் கூறி வந்த பாஜக, வேறு வழியில்லாமல், அந்த ஒப்பந்தத்தை ஏற்றது. அதில், சி.டி. ரவியும், எல். முருகனும் தேதியிட்டு கையொப்பமிட்டிருப்பார்கள். இதன் மூலம், பாஜகவின் பிடியில் அதிமுக இல்லை என்பது தெள்ளத் தெளிவாகப் புலப்படும்.

சத்தமின்றி ஒதுங்கிய சசிகலா

அதேபோல், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தபோது, அதிமுக பிளவுபடும் என மு..ஸ்டாலின் பகல் கனவு கண்டார். ஆனால், கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என சசிகலாவையே அறிக்கைவிட வைத்தார். இப்படி, ஒவ்வொரு நகர்விலும் எடப்பாடி பழனிசாமி பண்பட்ட ஒரு தலைவனைப் போல பயணிப்பது அதிமுகவினரை உற்சாகமடைய வைத்திருக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

CATEGORIES
error: Content is protected !!